ரஷ்ய இராணுவச் சேவையில் இணைந்துள்ள இலங்கையர்கள்: எழுந்துள்ள புதியச் சட்ட சிக்கல்கள்
ரஷ்ய ஆயுதப் படைகளில் இணைந்துள்ள சுமார் ஆயிரம் இலங்கை இராணுவ வீரர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்காக போராடும் டஜன் கணக்கான இலங்கைப் படையினர் உத்தியோகபூர்வ வழிகள் மூலம் ரஷ்ய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் ரஷ்ய கடவுச்சீட்டை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய போர்முனையில் போரில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் வீரர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்க, எதிர்வரும் மாதங்களில் மேலும் பலர் குடியுரிமை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த விஷயம் மொஸ்கோவுடனான எங்கள் பேச்சுவார்த்தையை கணிசமாக சிக்கலாக்கியுள்ளது, இப்போது, சட்டப்படி, அவர்கள் (இலங்கையின் முன்னாள் படைவீரர்கள்), ரஷ்ய குடிமக்கள். ரஷ்யாவை தங்கள் குடிமக்களை திருப்பி அனுப்புமாறு நாங்கள் கேட்க முடியாது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்ய அமைப்புகளுடன் சேவையில் இருக்கும் இலங்கையர்களில் பலர், தங்களைத் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகளை பணிவுடன் நிராகரித்து, தங்கள் ஒப்பந்தங்களை முடிக்க விரும்புவதாகவும், அவர்கள் ரஷ்ய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த முறையில் அறிய முடிகிறது.
“குடியுரிமைப் பிரச்சினை எங்களுக்கு (இலங்கை) ஒரு சட்டப் புதிரை உருவாக்குகிறது. சட்டத்தின்படி, ஒரு இலங்கையர் மற்றொரு குடியுரிமையைப் பெறும்போது, அவர்கள் தானாகவே எங்களுடைய குடியுரிமையை இழந்துவிடுகின்றனர்.
அவர்களது குடும்பங்கள் இந்தப் பிரச்சினையின் பக்கத்தைப் புரிந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை.” என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவும் உக்ரைனும் மனிதவளம் மற்றும் பொருளின் அடிப்படையில் தொடர்ந்து பாரிய இழப்பை சந்தித்து வருவதால், இரு நாடுகளும் தங்கள் படைகளை நிரப்ப தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்ய துருப்புக்களுடனான நடவடிக்கையில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் அறிவித்தது.
அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின்படி, சேவை வரிசையில் கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கையும் கோரியுள்ளது, இதனால் உறவினர்கள் சில நிவாரணங்களைப் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.