காசாவில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ள மருத்துவத் துறை: மேலும் 40 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் முற்றுகையிடப்பட்ட மற்றும் குண்டுவீச்சு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவத் துறை பெரும் சவால்களை எதிர்கொள்வதாக காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சிரமம் தொடர்பில் காஸாவில் உள்ள சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் இவ்வாறு விளக்கியுள்ளார்.
“எரிபொருள் தட்டுப்பாடு சுகாதாரத் துறையில் பாரிய நெருக்கடியாக காணப்படுகின்றது. தற்போது எரிபொருளை வழங்கும் ஒரே ஆதாரம் உலக சுகாதார அமைப்பாகும்.
காசா பகுதியின் வடக்குப் பகுதிகளில் தற்போது அனைத்து சுகாதார சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக வடக்கு காஸாவில் சுமார் 34 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காசாவிற்கு வெளியே மருத்துவ உதவி பெற வேண்டிய 25,000 நோயாளர்கள் உள்ளனர். முக்கியமான ரஃபா எல்லைக் கடவை உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்” என்றார்.
இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்ததன் பின்னர் பலஸ்தீனியர்கள் மீண்டும் காசா நகரின் சில பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்து மற்றும் கத்தாரில் மத்தியஸ்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் நீடித்து வரும் போர் பதற்றத்தால் இதுவரை 37,900 உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,000 ஆயிரத்தைக் கடந்தது.