கட்சி மாறும் தீர்மானத்தை ஒத்தி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?; ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தீர்மானம்
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் கட்சி மாறுவதற்கான தீர்மானத்தை எடுக்கத் தயங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த கட்சிகள் வழங்குவதாக வாக்குறுதியளித்த வரப்பிரசாத சலுகைகள் கிடைக்கப்படாத காரணத்தினால் கட்சி மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல தலைவர் ஒருவர் மாறிய கட்சியில் , அவர் கோரிய பதவியை வழங்காத காரணத்தினால் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தகவல்களை அனுப்பி வருவதாக தெரியவருகிறது.
இதேவேளை, மற்றொரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர் கட்சி இடமாற்றங்களை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியில் பிரபல இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்கள் இருவரை இணைத்துக் கொள்வது சிரமமாக உள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை அந்தந்த அரசியல் கட்சிகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.