காஸா நகருக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேலிய கவச வாகனங்கள்
திங்கள்கிழமை (ஜூலை 8ஆம் தேதி) காஸா நகருக்குள் பல முனைகளிலிருந்து இஸ்ரேலிய கவச வாகனப் படையினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இது இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போரில் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று என அப்பகுதி மக்கள் வர்ணிக்கின்றனர்.
அங்கு நடைபெறும் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று காஸா அவசர நிலை சேவைப் பிரிவு தெரிவித்தது. எனினும், காஸாவுக்கு கிழக்கே உள்ள டாராய், டுஃபா பகுதிகளிலும் மேற்கே உள்ள அல்-ஹவா, சாப்ரா, ரிமால் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவசர நிலை மீட்புப் பணியினர் அங்கு செல்ல முடியாமல் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
இஸ்ரேலிய கவச வாகனப் படையினரின் ஒரு பிரிவு காஸாவின் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப் பட்டது என்றும் இதனால் பொதுமக்கள் மத்தியதரைக் கடல் பகுதிக்கு அருகே தள்ளப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
“எதிரி முன்னே, கடல் எங்களுக்குப் பின்னே, நாங்கள் எங்கு செல்வது?,” என்று வினவினார் அப்டெல்-கானி என்ற, தனது முழுப் பெயரை வெளியிட விரும்பாத காஸா நகரவாசி.
“எரிமலையிலிருந்து வருவதுபோல் கவச வாகன குண்டுகளும் விமானகங்களிலிருந்து ஏவுகணைகளும் வீடுகள் மீதும் சாலைகளிலும் விழுகின்றன. மக்கள் எல்லா திசைகளிலும் ஓடுகின்றனர், எங்கு செல்வது என்று எவருக்கும் தெரியவில்லை,” என்று அப்டெல்-கானி ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட இஸ்ரேலிய ராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் கட்டமைப்புக்கு எதிராக தான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது. இதில் தனது ராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் 30க்கும் மேற்பட்ட வீரர்களை தான் கொன்றுவிட்டதாக விளக்கியது.