இலங்கை

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் சம்பந்தன்

ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்று அஞ்சலி  செலுத்தியதுடன், தமது இரங்கல்களையும் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் திருகோணமலை தபாலக வீதியில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07)  இடம்பெற்றன.

சம்பந்தனின் பூர்வீக இல்லத்தில் நண்பகல் 12.00 மணி வரை சம்பந்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சைவ ஆகம முறைப்படி சம்பந்தனின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனையடுத்து சம்பந்தனின் பூர்வீக இல்ல வளாகத்தில் இறுதி அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்விலும், பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடுத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை, கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற எதிர்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அருண்நேரு தம்பிமுத்து உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் குடும்பத்தார் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஆழ்ந்த சோகத்துக்கு  மத்தியில் தகனக் கிரிகைக்காக திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

மேலும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் மும்மதத் தலைவர்கள், பெருந்திரளான இலங்கைத் தமிழரசுக் கட்சித் தொண்டர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.