பைடன் பின்வாங்குவாரா?; கமலா ஹாரிஸின் ஊர் மக்களின் எதிர்பார்ப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு மாற்றாக தற்போதைய துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என வாஷிங்டன் நகரிலிருந்து 12,900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் இந்தியாவின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரம். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா அந்தக் கிராமத்தில் பிறந்தார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றபோது கிராமமே அல்லோலகல்லோலம் பட்டது.
அவரை வாழ்த்தும் பதாகைகளை ஏந்தியும் பட்டாசுகளை வெடித்தும், கோயிலில் வழிபட்டும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இம்முறை அவர் ஒரு படி முன்னேறி உயர் பதவியை எட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமெரிக்காவில் படிப்பதற்காக குடியேறிய ஜமைக்கா தந்தைக்கும் இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் பின்வாங்கினால் அவருக்குப் பதிலாக போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக கமலா ஹாரிஸ் இருக்கிறார்.
இருந்தாலும் தேர்தல் களத்திலிருந்து விலகப் போவதில்லை என்று ஜோ பைடன் உறுதியுடன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது மனநிலை, உடலுறுதி குறித்து கவலைப்படும் நன்கொடையாளர்களையும் கட்சிக்காரர்களையும் அவர் சரிகட்டிவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் துளசேந்திரபுரம் கிராம மக்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக உள்ளது.
“ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் இம்முறை மிகப்பெரிய கொண்டாட்டம் இருக்கும்,” என்று கிராமக் குழுவின் உறுப்பினரான கே.கலியபெருமாள் தெரிவித்தார்.