உலகம்

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்திய வீரர்கள் பலி

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்தியர்கள் பலியாகினர். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.இந்த சூழலில் சுற்றுலா விசாவில் ரஷியாவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் வெளியானது.பாதுகாப்பு உதவியாளர் எனக்கூறி ராணுவத்தில் சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின.அப்படி போர் முனையில் நிறுத்தப்பட்ட 2 இந்தியர்கள் உக்ரைனின் தாக்குதலில் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ரஷியாவில் போர் முனையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியது. எனினும் இதுவரை வெறும் 10 இந்தியர்கள் மட்டுமே பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

இன்னும் சுமார் 200 இந்தியர்கள் அங்கு சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட மேலும் 2 இந்தியர்கள் போரில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \”ரஷிய-உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாக பணியமா்த்தப்பட்ட 2 இந்தியா்கள் உயிரிழந்தனா்.

அவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவா்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டுவர ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அதிகாரிகளிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும், ரஷிய ராணுவத்தில் உள்ள அனைத்து இந்தியா்களையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என்று ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ரஷிய-உக்ரைன் போரில் உயிரிழந்த 2 இந்தியர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேஜ்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பின் அமிர்சரஸ் மாவட்டத்தை சேர்ந்தவரான தேஜ்பால் சிங் வேலை தேடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்துக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் அங்கிருந்து சுற்றுலா விசாவில் கடந்த ஜனவரி மாதம் ரஷியாவுக்கு சென்றுள்ளார்.அங்கு பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஏற்கனவே ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருவதை அறிந்த தேஜ்பால் சிங் அவரும் ரஷிய ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கு அவருக்கு 2 வாரங்களுக்கும் மேலாக போர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி காலத்தில் தேஜ்பால் சிங் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தினமும் செல்போனில் பேசி வந்ததுடன், தான் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களையும் அனுப்பி வந்துள்ளார்.ஆனால் 2 வாரங்களுக்கு பிறகு அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. இந்த சூழலில்தான் அவர் போரில் உயிரிழந்ததாக அவரது நண்பர் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.

தனது கணவருக்கு இறுதி சடங்களை செய்ய அவரது உடலை இந்தியா கொண்டு வர உதவும்படி இந்தியா மற்றும் ரஷியா அரசிடம் தேஜ்பால் சிங்கின் மனைவி பர்மிந்தர் கவுர் கோரிக்கை வைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.