ராட்சத பலூன்களை மீண்டும் அனுப்புவதாக வடகொரியா எச்சரிக்கை
“சியோல், கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை சமாளிக்க தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக தென்கொரியாவுக்குள் நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்களை வடகொரியா பறக்க விட்டது. அந்த பலூன்களில் சிகரெட் துண்டுகள், பேட்டரி துண்டுகள் போன்ற குப்பைகள் இருந்தன.
இதனால் ஆத்திரம் அடைந்த தென்கொரியா 2018-ல் மேற்கொண்ட வடகொரியா உடனான ராணுவ ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு எதிராக 2 லட்சம் துண்டு பிரசுரங்களை தென்கொரியாவும் பலூன்களில் பறக்க விட்டது.
இதற்கு பதிலடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பலூன்களை பறக்க விட உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தென்கொரிய எல்லைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.