முச்சந்தி

சோமசுந்தரம் சுரேஷ் : தலைநிமிர் கழக யாழ் இந்துவின் மாற்றுக் குறையாத மன்னவன்! ….

சோமசுந்தரம் சுரேஷ் முதலாவது ஆண்டு (24/5/2023) நினைவாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய “தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்” என்ற நூலும் ஜீவநதி பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.
“மாபெரும் சபை தனில்
நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”
திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகள் இவை. 2023 ஆம் ஆண்டு மே மாதம் பிற்பகுதி, ஒரு பெரிய சபையில், சுரேஷ் நடப்பதற்குப் பதில் நீண்ட துயிலில் கிடக்கிறான். மாலைகள் வந்து விழுகின்றன. அங்கிருப்போர் அவனைப்  போற்றிப் புகழ்கிறார்கள்.  சொற்பூக்கள் சொரிகிறார்கள். மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று மனம் உருகுகிறார்கள்.
சிறு வயதிலிருந்து சுரேஷ் கால் வைத்த சபைகள் தான் வித்தியாசமே தவிர அவனுக்குக் கிடைத்த வரவேற்பு எப்போதும் ஒன்றே. ஏனென்றால், பாடசாலை விளையாட்டு மைதானம், அவன், மேற்கொண்ட படிப்பு, தேடிய வேலை, கற்றுக் கொண்ட ஏனைய கலைகள் போன்றவற்றை சபை என்று கருதினால், அங்கெல்லாம் முடி சூடா மன்னன் அவன். முக்கியமாக எதிரி இல்லா மன்னாதி மன்னன்.
சுரேஷ் பலவகையான விளயாட்டுகளுக்காக பல தடவை, பல மைதானங்களில், பல மட்டங்களில் நுழைந்திருக்கிறான். எப்போதும் வெற்றி வாகை சூடியே திரும்பி வந்திருக்கிறான். இங்கே என்ன சிறப்பு என்றால், சுரேஷுடன் விளையாடியவர்கள், எதிரணியைச் சேர்ந்தவர்கள், பார்வையாளர்கள் என்று எவருக்கும்  சுரேஷ் மேல் எரிச்சல், பொறாமை,கோபம், பகை எதுவுமே வந்ததில்லை.
அதற்கு மாறாக, அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் ‘எப்படி சுரேஷ் போல தாமும் விளையாடலாம்’ என்ற கேள்வியே. தன்னைச் சூழ்ந்தவர்களை எல்லாம் தன் ரசிகர்களாக மாற்றியது அவனுடைய சிறப்பியல்பு. அவனே அறியாமல் நடந்த ஆளுமைத் தொடுகையது.
பாடசாலை நாட்களில் வகுப்பறையை விட விளையாட்டு மைதானத்தில் அதிக நேரம் செலவிட்டவன். ஏன், நேரத்தை முதலிட்டவன் என்றும் சொல்லலாம். ஏனென்றால், அதற்கான பலனை தனக்காகவும், தனது அணி, பாடசாலை அல்லது கழகத்துக்காக நேர்த்தியாகக் கொண்டு வந்தவன். திறமைகளை கூர்மைப்படுத்தி செய்ததால்  எல்லாவற்றிலும் பலன் கிடைத்தது.
பின்னர், ஒரு கட்டத்தில், எல்லா விளையாட்டுகளையும் தற்காலிகமாக நிறுத்தி கொழும்பில் மேற்படிப்பு படித்தான். அங்கும் பலர் அனுபவித்த உலகாயத இன்பங்களை உதறி தனக்கு எது மிக முக்கியம் என்பதில் தன் கவனத்தை  நேர்நோக்கி செய்து தன் திறமையை நிரூபித்து பெருமைப்படக் கூடிய தொழில் பெற்று அமெரிக்கா சென்றான்.
புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், சமையல், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் (Photography, Drawing and Painting, Cooking, Cycling, Trekking) என்று தன் மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருந்தவன். குடும்பத்துக்காகவும் தரமான நேரம் ஒதுக்கி வாழ்க்கையை சமநிலையாகக் கொண்டு போனவன்.
எப்போதும் ஒரே மாதிரியான சிரிப்பு, பல்வேறுபட்ட திறமைகளும் பொழுது போக்குகளும், எடுத்த வேலையில் கவனக் குவிப்பு, எவருடனும் பகைமை பாராட்டாமை என சுரேஷ் பழகிய அனைவரும் ஒரே கருத்தைக்  கொண்டிருந்தமை தான் வியப்பும் சிறப்பும்.
ஒவ்வொரு வயது காலப் பகுதிகளிலும் அந்த நேரத்துக்கு மிகமுக்கியமான விஷயங்களில்  தன் திறமையையும், கவனத்தையும் செலுத்தி தன் கடமையைச் சரிவரச்  செய்தவன்.
2014 ஆம் ஆண்டிலிருந்து தன் பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளையும் தவற விடாதவன். அந்தச்  சந்திப்புகளில் அவனது பண்பையும் முதிர்ச்சியையும் நாங்கள் சிலாகித்துக் கொண்டு வரும் போது ஓரிரவு, பிள்ளைகளுக்குக் கதைசொல்லி உறங்க வைத்துவிட்டு தானும் உறங்க என்று போனவன் மேலுலகத்திலுள்ள சபைக்கு வீறு நடை போட்டு போய்விட்டான்.  அவனது வாழ்க்கையை எங்களுக்குக் கதையாக விட்டுச் சென்றுவிட்டான்.
⁃ சிவப்பிரகாஷ் வயித்தீஸ்வரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *