ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவிலிருந்து ஆரம்பம்!!….10..…சங்கர சுப்பிரமணியன்.

மண்ணைக் காக்கும் அதிகாரம் கிடைத்தால் இனமும் மொழியும் காப்பாற்றப் பட்டுவிடும்.அதன் பின் மொழி அழிந்துவிடும் என்ற கூக்குரல் அர்த்தமற்றதாகிவிடும். ஆங்கிலத்தில் பல மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன. ஆங்கிலம் அழிந்தா போய்விட்டது? மாறாக உலகெங்கும் பேசப்படுகிறது.பல ஆயிரம் ஆண்டுகளாக பலர் பல வழிகளில் தமிழை அழிக்க முயன்றும் அழியாமல் இன்னும் இளமையாக பவணிவருகிறது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது எல்லாவற்றிற்கும் எல்லாவகையிலும் பொருந்தும். சங்ககாலத்தில் தமிழுடன் வேறுமொழி கலந்திருத்ததா? இல்லையே.இயற்கையாகவே சில மாற்றங்கள் நிகழ்வதை தவிர்க்க இயலாது. இலங்கைக்கு தெற்கே இந்திய மாக்கடலில் குமரிக் கண்டம் என்றொரு தமிழரின் பெருநிலப் பரப்பு இருந்ததையும் தமிழரின் நாகரிகத் தொன்மையையும் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஆனால் நம்மிடையே சில மேதாவிகள் இருக்கிறார்கள். அதெல்லாம் கட்டுக்கதை. இலக்கியங்களில் எழுதப்பட்டதை எல்லாம் எடுத்துக் கொண்டு வரலாறாகத் திரிக்க முடியாது என்கிறார்கள். எழுதுபவர்கள் எல்லாம் உண்மையையா எழுதுகிறார்கள் அவர்கள் மனதில் தோன்றியதைத்தானே எழுதுகிறார்கள் என்கிறார்கள்.இலக்கியங்களில் எழுதுவதை கட்டுக்கதை என்பவர்கள் இறைவனை இலக்கியத்தில் காணும்போது புலகாங்கிதம் அடைந்து பூரிப்படைகின்றனர். பொய் சொல்லவில்லை. துவாரகை கடலில் மூழ்கியுள்ளது என்றால் அதை கட்டுக்கதை என்பார்களா? ஆனால பூம்புகார்கடலுக்குள் உள்ளதென்றால் மட்டும் புரியாதவர்போல் இருப்பார்கள்.இதை வேற்றினத்தவன் சொன்னால் நம்மினம் முதன்மை பெற்றுவிடும் என்ற பொறாமையில் சொல்கிறான் என்று எண்ண வாய்ப்புள்ளது. ஆனால் நம்மினத்தவரே அதைவழிமொழியும்போது அவர்களை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடலின் வரிகளை முனு முனுத்தபடி கடந்து செல்வதைவிட யாதொன்றும் ஞான் ஏதொன்றும் அறியேன் கச்சி ஏகம்பா! எப்பொருளையும் அப்பொருளின் மெய்மொருள் காண்பதறிவு என்ற ஞானம் சிறிதுமின்றி நம்மவர்களே குழிபறிக்கும்போது உண்மையை எங்ஙனம் வெளிக்கொணர முடியும்.அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் எழுதிய நூலே உண்மைக்கு புறம்பாக எழுதியுள்ளதாக செய்தி உலாவருகிறது. அது உண்மை என்பதைப்போல ஒரு காணொளியைக் கண்டேன்.அந்நூல் தமிழரையும் தமிழ் அரசர்களையும் இழிவு படுத்தியுள்ளதாகவும் வேற்றினத்தையும் தமிழ்மண்ணை ஆண்ட வேற்றின அரசர்களின் புகழைத் துதி பாடுவதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தமிழரின் வரலாற்றை திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.வள்ளுவன் சொன்னதைப்போல் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கு இணங்க வரலாற்று ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். உண்மையை தோண்டியெடுத்து பொய்மையின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். உண்மை அவர்கள் சொல்வது போல் இருந்தால் அதை ஏற்பதில் தவறில்லை.மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற தத்துவ ஞானியின் கோட்பாட்டின்படி இயற்கையில் எல்லாமே மாறக்கூடியதுதான். நமது தோட்டத்தில் நாம் நட்டுவைத்த செடி என்பதால் அது வளர்ந்து மலரும்போது அம்மலர் வாடாமலராக இருக்காது. அது நன்றாக மலர்ந்து மணம் பரப்பி நிற்கும். சில நாட்கள் அம்மலர் வாடி உதிர்ந்துவிடும்.அச்செடியில் அந்த மலரின் உதிரலோடு அச்செடியின் வாழ்வு முடிந்து போவதில்லை. இன்னொரு மொட்டு மலரும் மணம் பரப்பும் வாடும் உதிரும். இவ்வாறு பூத்துக் குலுங்கும் செடியும் ஒருநாள் மடியும். திரும்பவும் இன்னொரு செடிதோன்றும். இதுபோன்றுதான் எல்லா உயிரினங்களும் தோன்றி வாழ்ந்து மடியும்.நமது உறவுகளும் நண்பர்களும்கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. நமது உறவுகள் நண்பர்கள் போன்றோர் அவர்கள் இயற்கையின் சுழற்சியில் மறையும்போது மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. இப்படித்தான் நம் இனத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லா இனங்களிலும் நிகழக்கூடியதே.இவ்வாறு எல்லா இனங்களும் தோன்றி மறந்தாலும் அவை வாழும் காலங்களில் எவ்வாறு வாழ்ந்துள்ளது? எத்தகைய சிறப்பை அடைந்தது? மற்ற இனங்களுக்கெல்லாம் எப்படி முன்னோடியாகச் சிறந்து விளங்கியதுஎன்பதில்தான் ஒவ்வொரு இனத்தின் பெருமையும் உள்ளது. வெறுமனே தோன்றி மறைந்து எந்த வித தடயங்களையும் வரலாற்றில் பதித்துச் செல்லாத இனங்கள் இனங்கள் அல்ல. அது வாழ்ந்து மடிந்த ஒரு மக்கள் கூட்டம் அவ்வளவே.
ஒரு இனம் வரலாற்றுச் சிறப்படைய அவ்வினத்தின் பண்புகளே காரணம். காதல், வீரம், அறத்தைப் பின்பற்றி வாழும் தன்மை, மாற்றானுக்கும் தீங்கிழையா மாண்பு, கையில் ஆயுமின்றி இருக்கும் ஒருவனை பலர்சூழ்ந்து பலவகை ஆயுதங்களுடன் மூர்க்கத்தனமாகவும் வஞ்சகமாகவும் வீழ்த்த எண்ணாத உயர்குணம், பழிக்குப்பழி என்று பகைவரின் பெண்களைக்கூட பழிவாங்காத பண்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.மற்றபடி வாழ்வதும் வீழ்வதும் இயற்கேயே. அதிலும் வஞ்சகத்தால் ஓர் இனத்தை வீழ்ச்சியடையச் செய்யும் போது அதுவும் ஒருவகை எழுச்சியே. வரலாற்றில் இதற்கான சான்றுகள் உள்ளன. ஒரு இனம் உலகெங்கும் ஓடும்படி சிதறடிக்கப்பட்டு சிதறுண்டது. பின் அவ்வினம் மீண்டும் உருவெடுத்து உலக வரைபடத்தில் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கியது. இன்று அவ்வினம் உலகையே ஆட்டிப்படைக்கிறது.இதை வரலாற்றின் ஊடாக அறிய முடிகிறது. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வீரச்செரிவுடன் தமிழினம் வாழ்ந்திருக்கிறது. கங்கை முதல் கடாரம்வரை வென்று தன் வீரத்தை உலகுக்கு பரைசாற்றியுள்ளது. உலகம் முழுக்க பரவி வாழ்ந்திருக்கிறது. உயர்ந்த நாகரிகத்தை உலகறியச் செய்திருக்கிறது. உலகமே பாராட்டுமளவுக்கு இலக்கியத்தை வாழும்முறையாக வரையறுத்துள்ளது.இவ்வாறு வரலாற்றில் தடம் பதித்த தமிழினம்இயற்கையோடு இயைந்து இயற்கையையே இறைவனாக வணங்கி மூதாதையாரை வழிபட்டு செயற்கையான எவற்றின் பின்னும் செல்லாமல் கட்டுக்கதைகளைகளை நம்பாமல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயர்பண்புடன்வாழ்ந்திருக்கிறது. நம்மினம் வீழ்ச்சியையும் எழுச்சியையும் கண்டுள்ளது.வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சியுற்ற நாட்களை படித்துள்ளோம். அது எல்லாம் கட்டுக்கதையல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் நிகழ்காலத்திலும் வீரத்தையும் எழுச்சியையும் கண்கூடாக கண்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து வஞ்சகத்தால் தற்போது வீழ்ந்தும் இருக்கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது.வரலாறு திரும்பும். இயற்கை தன் சுழற்சியை நிகழ்த்தும். இப்போது நடந்திருப்பது ஒரு முடிவுதான் என்றாலும் வரலாற்றில் முடிவல்ல. முடிவோடு நின்றுவிடாது. நின்றுவிடப் போவதும் இல்லை. அடிமைத் தளைகளை தகர்த்தெறிந்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ இது ஓர் ஆரம்பமாகும். ஆம், முடிவிலிருந்து ஆரம்பம்.(முற்றும்)-சங்கர சுப்பிரமணியன்
![]()