கட்டுரைகள்

நெருப்பாய் பற்றி எரியும் பாரீஸ் : பிரான்ஸ் வரலாற்றில் ‘தீ’ கலாச்சாரம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் ஜனாதிபதி பதவிக் காலம் முழுவதும், அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்கள், மற்றும் சமூக செலவினங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை நேட்டோ மறுஆயுதமாக்கல் மற்றும் ரஷ்யாவுடனான போருக்கு திருப்பும் அவரது கொள்கையும், அத்துடன் குடியேற்றவாசிகளுக்கு எதிரானதும்,
தொழிலாள வர்க்க எதிர்ப்பை கொடூரமாக ஒடுக்க இந்த பொலிஸ் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன)

பற்றி எரியும் பிரான்ஸ்! ஊடகங்களின் தற்கால தலைப்புச் செய்து இது தான். கடந்த ஒரு வாரமாக பிரான்ஸ் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. இது போன்று வன்முறை சம்பவங்கள் பிரான்ஸில் நடைபெறுவது இது முதல் முறையல்ல.

அமெரிக்காவில் இருப்பது போல் நிறவெறி பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பரவலாக இன்றளவிலும் நீடித்து வருகிறது. இதற்கு ஓர் உதாரணம்தான் தற்போது 17 வயது சிறுவன் பிரான்ஸ் பொலிஸ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகும். இப்போ மட்டுமல்ல 1979லிருந்தே இதுதான் நிலைமை.

1979 ‘பான்லியூ’ கலவரம் :

கடந்த 1979ம் ஆண்டிலிருந்தே இது போன்ற கலவரங்கள் பல வெடித்து வருகிறது. லியோன் புறநகர் பகுதியான வால்க்ஸ்-என்-வெலினில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்கினர். இது ‘பான்லியூ’ கலவரம் 1979 என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல 1991ம் ஆண்டு அரபு நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் பாரிய அளவில் வெடித்தது. இதே ஆண்டில் கார் திருடப்பட்டதாக ஒரு பெண் மற்றும் இளைஞர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவமும் பாரிய கலவரத்திற்கு அடித்தளமிட்டது.

இதன் பின்னர் 1992 மற்றும் 1995ம் ஆண்டுகளிலும் கலவரங்கள் அதிக அளவு நடந்திருக்கிறது. முதல் கலவரம் போலீஸ் தடுப்பு நோக்கி சென்ற காரை அவர்கள் சுட்டனர். இதில் காரை ஓட்டி வந்த 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தீ வைத்தனர். அதேபோல இரண்டாவது சம்பவத்தில் அல்ஜீரிய தீவிரவாதி காலித் கெல்கலை போலீஸ் சுட்டுக் கொலை செய்தது. இதனால் வன்முறை வெடித்தது.

2005ல் உச்சக்கட்ட பயங்கரம் :

இந்த கலவரங்களின் உச்சமாக 2005ம் ஆண்டு நடந்த சம்பவங்கள் சொல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸின் வடக்கில் உள்ள Clichy-sous-Bois எனும் பகுதியில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் மீது மின்சாரத்தை போலீசார் பாய்ச்சியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்ச்சியாக 3 வாரம் வரை கலவரங்களை உருவாக்கியது.

இப்படியாக பல்வேறு வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. இதை தடுக்க முயலும்போது ஏற்படும் மோதல்களில் காவல்துறையினர் சிலரும், பொதுமக்கள் தரப்பில் சிலரும் உயிரிழப்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது.

பிரான்ஸ் காவல் துறையில் இனப் பாகுபாடு :

பிரான்ஸ் தனது காவல் துறையில் வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, “பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது.

பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதே சமயம், சிறுவனை சுட்டுக்கொன்ற காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசு இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய சீர்திருத்த எதிர் போராட்டம்:

இந்த ஆண்டு ஜனவரியில், மில்லியன் கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் இமானுவல் மக்ரோனின் பரந்தளவில் செல்வாக்கற்ற ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் ஜூன் 6 அன்று முடிவடைந்தது. முக்கால்வாசி பிரெஞ்சு மக்களின் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்பட்ட இந்த சீர்திருத்தம் மற்றும் இராணுவ நிரலாக்கச் சட்டத்தின் மூலம் 2020களின் மீதமுள்ள 100 பில்லியன் யூரோக்கள் ஓய்வூதியத்திலிருந்து இராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரான்சில் தொழிலாள குடியேற்றவாசிகளுக்கு எதிரான சமூக அடித்தளமாக வளர்ப்பதற்கு, போலீஸ்காரர்கள் மத்தியில் மிகவும் வன்முறையான பிற்போக்கு மனநிலைகளை தூண்டப்பட்டுள்ளதை இத்தகைய கலவரங்களின் மூல காரணமாக காணலாம். பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் ஜனாதிபதி காலம் முழுவதும், அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்கள், மற்றும் சமூக செலவினங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை நேட்டோ மறுஆயுதமாக்கல் மற்றும் ரஷ்யாவுடனான போருக்கு திருப்பும் அவரது கொள்கை, ஆகியவற்றுக்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை கொடூரமாக ஒடுக்க இந்த பொலிஸ் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

தற்போதய பாரிஸ் கலவரம்:

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நான்டேர் (Nanterre) பகுதியில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் ஜூன் 27 செவ்வாய்க்கிழமை அன்று போக்குவரத்து சிக்னலில் நின்றபோது காரை நிறுத்துமாறு போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால், நஹேல் அதற்கு கட்டுப்படாமல் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் போலீசார் மீதே காரை ஏற்றியதாகவும் இதனால் தற்காப்புக்காக நஹேலை போலீசார் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இளைஞரை போலீசார் துப்பாக்கியால் மிரட்டுவது போலவும் கார் நகர்ந்ததால் பின்னர் போலீசார் நஹேலை சுட்டதும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இளம் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. நாட்டின் பெரிய நகரமான மார்செய் தற்போது கலவரபூமியாக காட்சியளிக்கிறது.

போராட்டக்காரர்கள் பொது இடங்களில் உள்ள காா்களுக்குத் தீ வைத்தல், அரசு கட்டடங்கள் மீது தாக்குதல், சூறையாடுதல் என கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் சிறுவர்களும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சில பகுதிகளில் இன்னமும் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்
மார்செய் நகரின் ஒரு துப்பாக்கிக்கடையில் புகுந்து போராட்டக்காரர்கள் துப்பாக்கியை திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசுத் தரப்பில் வன்முறையைக் கட்டுப்படுத்த பதற்றமான பகுதிகளில் 40,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனா். தலைநகா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடா்பாக இதுவரை 1,000 போ் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 200 போலீஸாா் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *