‘தி கேரளா ஸ்டோரி’யை தொடர்ந்து அடுத்த பரபரப்புக்கு தயாராகும் ‘திப்பு’

‘தி கேரளா ஸ்டோரி’யை தொடர்ந்து, சந்தீப் சர்மா இயக்கத்தில், ‘திப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, சித்தி இட்னானி நடித்த, ‘தி கேரளா ஸ்டோரி’ படம், மே 5-ம் தேதி நாடு முழுதும் வெளியானது. கேரளாவை சேர்ந்த ஹிந்து இளம்பெண்களை ஏமாற்றி, கட்டாய மதமாற்றம் செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது தொடர்பான கதை என்பதால், இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், ‘இது பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் வெறுப்பு பிரசார படம்’ என விமர்சித்துள்ளன. ஆனால், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘இந்த படத்திற்கு தடை கோருவதன் வாயிலாக, பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவ முயற்சிக்கிறது’ என, குற்றம் சாட்டியுள்ளர்.

‘தி கேரளா ஸ்டோரி’யை தொடர்ந்து, சந்தீப் சர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘திப்பு’ படம், அடுத்த பரபரப்புக்கு தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறான, ‘அடல்’ படத்தை இயக்கிய சந்தீப், ‘சுதந்திரிய வீர் சாவர்க்கர்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

கர்நாடக மாநிலம், மைசூருவை மையமாக வைத்து ஆண்ட திப்பு சுல்தான், எப்போதும் சர்ச்சைக்குரியவராக இருந்து வருகிறார். ‘கர்நாடகா, கேரளாவில் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களை இடித்தவர். பல லட்சம் ஹிந்துக்களை, கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றியவர்’ என பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும் கூறி வருகின்றன.

ஆனால், ‘ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்’ என, முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், திப்புவை கொண்டாடி வருகின்றன. கர்நாடகாவில் அவரை முன்வைத்தே, பா.ஜ., — காங்கிரஸ் இடையே, பல ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது.

இந்நிலையில், விரைவில் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் ‘திப்பு’ படம், கர்நாடகா மட்டுமல்லாது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், ‘சினிமா துறையை வைத்து, பா.ஜ.,வுக்கு எதிரான கருத்தை மக்களிடம் சேர்ப்பதில், காங்கிரஸ், கம்யூ., கட்சிகள் வெற்றி பெற்று வந்தன. ‘ஆனால், இப்போது அதே சினிமாவை வைத்து, வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. ‘தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி’யை தொடர்ந்து ‘திப்பு’ படமும் பெரும் வெற்றி அடையும்’ என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button