கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள் – 6…..சங்கர சுப்பிரமணியன்.

சிரிஷா சொன்ன வார்த்தைகள் தரமான பசுமாடுகளையும் அவற்றிலிருந்து கிடைக்கும் பாலையும் பற்றி பால்பண்ணை விளம்பரங்கள் அங்கீகரிப்பதை நினைவூட்டியது. இவர்கள் உண்மையான மக்கள். இதில் பாலின் தரம் என்ற எண்ணம் இருக்குமா? என்று நினைத்தேன்.

அவள் அவளது வேலையை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். “ஏன் நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள்? ஏன் அவர்கள் அப்படி நினைத்தார்கள் என்று இங்குள்ள எல்லா பெண்களையும் கேளுங்கள்”.

மாட்டிறைச்சி உணவு:

அந்த பெண்கள் மடிகா இனத்தவரின் உணவுப் பழக்கங்களையும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

தலித்தைத் தவிர பெரும்பாலான இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை ஏனென்றால் மாடுகள் புனிதமான பிராணிகளாக கருதப்படுகின்றன. ஆனால் இது என்னைப்போன்ற தலித் இனமக்களின் அவசியமான உணவாக இருக்கிறது.

இறந்த மாடுகளை அப்புறப்படுத்தி அதிலுருந்து கிடைக்கும் இறைச்சி மடிகா இனமக்களுக்கு உணவின் ஒரே ஆதாரமாகும். மேலும் நாங்கள் மாட்டிறைச்சி உண்டு பழகிவிட்டோம். தலித் அல்லாத மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை

தூய்மையற்றவர்கள் என்று சொல்லி

நீண்டகாலமாக  அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் மாட்டிறைச்சி எளிதாக கிடைக்கக் கூடியதோடல்லாமல் புரதச்சத்து நிறைந்த உணவாகவும் எங்கள் இனத்திற்கு இருப்பதோடு ஊட்டச்சத்து பழக்க வழக்கங்களிலும் அவசியமான பங்காற்றுகிறது.

எந்த கலாச்சார நடைமுறைக்காக அவமானப் படுத்தப்பட்டோமோ அதிலிருந்தே விடுபட எங்கள் இனம் முயற்சித்திருப்பதால் அந்த பழக்க வழக்கங்கள் மழுங்கி வருகிறது.

மாட்டிறைச்சி உண்போரின் இந்த கைவிடப்பட்ட நிலை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பதவிக்கு வந்தபின் 2014ல் இருந்து அதிகரிக்கவே செய்திருப்பதுடன் மாடுகளை வெட்டுவதும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டதோடு சிறுபான்மையினரான மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக வன்முறை விழிப்புணர்வும் ஊதி பெரிதாக்கப் பட்டது.

மாட்டிறைச்சி மடிகா இனத்தவரில் பிரசவத்திற்குப்பின் குறிப்பிட்ட பங்காற்றியது. “குழந்தை பிறந்தபின் சுமார் பன்னிரண்டு நாட்களுக்கு சத்தான உணவாக

மாட்டின் ஒவ்வொரு பகுதியையும் வகைப்படுத்தி நாங்கள் சாப்பிடவேண்டும் என்று உறுதிப்படுத்தி இருந்தார்கள்” என்று நரசம்மா சொன்னாள்.

நாங்கள் குழந்தை பெற்றபின் பலமாக இருப்பதற்காகவும் குழந்தைக்கு தேவையான அளவுக்கு சத்தான பால் சுரக்கவும் ஒவ்வொரு நாளும் உண்ணவேண்டிய உணவை பெரியவர்கள் கவனமாக குறிப்பிட்டிருந்தார்கள். எல்லா சாதியினரும் இந்த பழக்கவழக்கத்தை அறிந்திருந்ததாலேயே எங்கள் பெண்கள் சத்தான பாலை சுரப்பார்கள் என்ற பிரபலமான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஏறக்குறைய சூரியன் மறைந்துவிட பெண்கள் கொசுவை விரட்ட கையை வீசிக் கொண்டிருந்தனர். அவர்கள் கூடிய சீக்கிரம் குடும்பங்களை பராமரிக்கவும் மாலை வேலைகளை பார்க்கவும் வீடு திரும்புவார்கள்.

“அவர்கள் நாங்கள் மாமிசம் சாப்பிடுவதால் எங்களை தூய்மையற்றவர்கள் மற்றும் அசுத்தமானவர்கள் என்று அவமானப் படுத்தினார்கள், ஆனால் மாட்டிறைச்சி உண்போரின் பால் வேண்டும்” நரசம்மா சொன்னாள்”.

“அவர்கள் சுவாசிக்கும் காற்றை நாங்கள்

அசுத்தப் படுத்துவதாக சொல்கிறார்கள், ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்ட எங்களின் உடல் தேவைப்படுகிறது”.

அதிகாரவர்க்க பெண்களின் பங்கு:

சில மாதங்களுக்கு பிறகு, தொர்னாக்கல்லின் அருகிலிருந்த ஒரு கிராமத்திலிருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நான் இருந்த அதே வரிசையில் இரண்டு பெண்கள் சத்தமாக வீண்பேச்சு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நான் அவர்களை சூத்திர பண்ணையார்களான ரெட்டியார் சாதியினர் என கண்டுபிடுத்தேன். ஒரு பெண்ணின் வயது ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடையில் இருக்கும். மற்றவளுக்கு ஏறக்குறைய எழுபது வயது இருக்கலாம். அவளுக்கு தலித் பெண்கள் முலைப்பால் கொடுப்பதுபற்றி கொஞ்சம் தெரியும் என்று நினைத்தேன்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

நன்றி: ஜான்வி உப்பலெடி / அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *