வரலாற்றைத் திசை திருப்பாதீர்கள்!…. ஏலையா க.முருகதாசன்.
அண்மையில் ஒரு செய்தியை வாசித்தேன்.யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு எதிரான முற்றவெளியில் ஒரு திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது என்று.
நல்ல விசயந்தானே என்று திருவள்ளுவரின் சிலையைப் பார்த்த போது இது என்ன கொடுமை என்று நினைக்கத் தோன்றியது.
திருவள்ளுவர் தீட்சை கேட்டது போல அவருக்குக் குறி வைத்த சிலையைத் திறந்திருக்கிறார்கள்.
திருவள்ளுவர் எப்படிப்பட்ட உருவம் என்று யாருக்கும் தெரியாது.அவர் ஒரு சமணர் என்ற அனுமானத்தை பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அவருக்குத் தாடி மீசை இருந்ததா என்றுகூடத் தெரியாது.ஏதோ ஒரு கதைவழிக் கேட்டலை வைத்து அவரை ஓவியமாக வரைந்தவர்களும் சிலையாக வடித்தவர்களும் அவருக்குத் தாடி மீசை வைத்துத் தமது கற்பனையை நிறைவேற்றியுள்ளார்கள்.
திருக்குறளில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தோ சைவத்திற்கு முககியத்துவம் கொடுத்தோ எந்தவொரு திருக்குறள் வரிகளும் எழுதப்படவில்லை என்பதை திருக்குறளை முழுமையாக வாசித்தவர்கள் அறிவார்கள்.
இந்த நிலையில் மனம் போன போக்கில் திருவள்ளுவர் தீட்சை கேட்டது போல அருக்கு திருநீற்றுக் குறி வைத்து சிலை செய்தது தவறாகும்.
சிலையைப் பார்க்கும் போது வணக்கத்துக்குரிய சிறீலசீறீ ஆறுமுகநாவலரே ஞாபகத்திற்கு வருகிறார்.
திருவள்ளுவர் பொது உலகிற்கும் ஒரு பொதுமறையைத் தந்தவர்.அவர் தமிழினத்தில் பிறந்தவராயினும் அவர் தமிழருக்கோ சைவத்துக்கோ உரித்தானவர் மட்டும் அல்லர்.
அத்தகையவரின் சிலையை இப்படி வடிவமைத்தமை ஒரு வரலாற்றுத் தவறாகும்.
மதிப்:புக்குரிய ஆண்மீகவியலாளரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமாகிய திரு.ஆறு திருமுருகன் அவர்களினதும்,நல்லை ஆதீன குருமுதல்வர் சிறீலசிறீல பரமாச்சாரியார் சுவாமிகளின் மேற்பார்வையிலும்,வரலாறு தெரிந்த சட்டத்தரணியும் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான திரு.மணிவண்ணன் மேற்பார்வையில் இத்தவறு நடந்ததுதான் வியப்பாகவும் கவலையாகவும் இருக்கின்றது.
பேராசிரியர்களும் கலாநிதிகளுந்தான் இலங்கை வரலாற்றை மனம் போனபடி எழுதுகிறார்கள் என்றால் ஆன்மீகவாதிகளும் இப்படிச் செய்யலாமா?
![]()