செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சென்னையில் ஓட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், வரும் 29-ந்தேதி அன்று அதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:-

சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் 75 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நைஜீரியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுதொடர்பான குற்றங்களில் கைதாகி உள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சைபர் குற்றங்களை விசாரிக்க சென்னையில் ஒரு போலீஸ் நிலையம்தான் இருந்தது. தற்போது 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தற்போது தினமும் நடந்து வருகிறது. புத்தாண்டு தினம் வரை இந்த நடவடிக்கை தொடரும். புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை ஜாலியாக கொண்டாடலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டு போன்றவைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவுக்குதான் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் வழங்கக்கூடாது. இதனால் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, என்பது பற்றி உரிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினருடன் வரும் 29-ந்தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறித்தும் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *