தஞ்சைக்கு வரும் உலக தலைவர் யார்?

ஜி – 20′ எனப்படும், உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் அடுத்த மாநாடு வரும் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக, இந்த 20 நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பர்.

இந்நிலையில், ஜி- – 20 மாநாட்டில் பங்கேற்கும் ஒரு முக்கிய சர்வதேச தலைவரை, தமிழகத்திற்கு அழைத்து வர, பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளாராம். இந்த சர்வதேச தலைவர் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை நகரத்திற்கு ஜூலையில் வருவார் என புதுடில்லி அதிகார வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து பல்லவர்களின் சரித்திரத்தை உலகம் முழுதும் பிரபலப்படுத்தினார். தமிழகத்தின் சரித்திரம் உலகம் முழுக்கத் தெரிய வேண்டும்; இதன் வாயிலாக தமிழகத்தின் நகரங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும் என விரும்புகிறார் மோடி.

இதே போல, தற்போது சோழர்களின் புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும்; தஞ்சைக்கு அந்த சர்வதேச தலைவரை அழைத்து வருவதன் வாயிலாக, ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் பெற வேண்டும் என்பது மோடியின் விருப்பம்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்ய அடுத்த மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருவார் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்த சர்வதேச அரசியல் தலைவர் யார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தான் அவர் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் சொல்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button