அழும் குழந்தைக்கு வாழைப்பழம்! அடம் பிடிக்கும் மக்களுக்கு பிரசாதம்!!… சங்கர சுப்பிரமணியன்.

பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பது ஒருபுறமிருக்க அவர் மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்க போராடிய பகுத்தறிவுவாதி. ஆனால் இன்னும் மூடப்பழக்கம் ஒழிந்தபாடில்லை. அதுவும் மதத்துடன் இணைந்து இந்த மூடப் பழக்கங்கள் அரங்கேற்றப்படுவதால் இவற்றையெல்லாம்
ஒழிக்க பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை ஆதாரமின்றியும் சொல்லிவிட முடியாது. அப்படிப் பட்ட ஆதாரம் ஒன்று என் கண்களில் தென்படவே அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. அதற்காக நூல்களை அதிகம் வாசிப்பவன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். நூல்களைப் பொருத்தவரை வாசிப்பதுநான் மிக குறைவுதான். ஆனால் பலதரப்பட்ட செய்திகளை வாசிப்பதில் நானொரு தீவிரவாதி. அப்படி நான் செய்திகளை படித்துக் கொண்டிருந்தபோதுஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. அட இன்னும் என்னென்ன மூடப்பழக்க வழக்கங்கள் நான் பிறந்தநாட்டில் கரையானாக அரித்துக் கொண்டிருக்கிறதோ என்று என்னை எண்ணவைத்தது.இணையதளத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சிராளி சர்மா என்பவர் ED Times என்ற தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைதான் அவ்வியப்புக்கு காரணம். இனிகட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்ப்போம். கர்னாடகாவிலுள்ள தெற்கு கனரா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணியா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.இத்திருவிழாவில் ஒருசடங்கு நடத்தப் படுகிறது. இச்சடங்கு ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அறுவறுக்கத்தக்க இந்த மதச்சடங்கை பெரியார் கண்டுகொள்ளவில்லையா? அல்லது கண்டும் காணாது இருந்துவிட்டாரா தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக போராடியவர் சொந்த மாநிலமான கர்னாடகாவில் நடைபெற்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்?மேலும் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்திலுள்ள நெரூர் சதாசிவ பரமேந்திரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதணையில் இந்த சடங்குநடைபெறுவதாகவும் கட்டுரையாளர் சொல்கிறார். கர்னாடகாவில் நடைபெறும் இச்சடங்குக்கு “மத குளியல்” என்ற பெயர். ஏனென்றால் இச்சடங்குக்கு பின் அருகிலுள்ள குமாரதா ஆற்றில் குளித்து சடங்கை முடிப்பார்களாம்.
இந்த மதச் சடங்கு என்ன என்று பார்ப்போமா? மதத்தினால் மக்களை பலவகையில் பிரிக்கப்பட்டதில் ஒரு இனத்தினர் இக்கோவிலில் உணவுண்ட எச்சில் இலைகளின் மேல் மற்றொரு இனத்தினர் உருண்டு புரள்வதுதான் இந்த மதச்சடங்கு.இந்த கட்டுரையுடன் வந்த புகைப்படத்தில் எச்சில் இலைகளின் மேல் உருண்டு புரள்பவர்களைப் பார்த்ததும் சுகாதாரத்தைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாத இப்படியும் மனிதர்களா? என்று ஆச்சரியமடைந்தேன். இப்படி எச்சில் இலைகளின்மேல் உருண்டு புரள்வதால் என்ன பலன்? இதனால் நோய்கள் குணமடைதல், கருத்தரித்தல் போன்ற பல நன்மைகள் நடக்குமாம். மேலும் திருமணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.கூடுதலாக இப்படி எச்சில் இலைகளின் மேல் உருண்டு புரள்வதன் மூலம் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவதுடன் மன அழுத்தங்களில் இருந்தும் விடுபடலாமாம். இதற்கு எதிராக சமூகப் போராளிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பாலும் போராட்டங்களாலும் கர்னாடக அரசு இந்த சடங்குக்கு2010 ல் தடைவிதித்தது. இருப்பினும் பக்தர்கள் மற்றும் இந்த சடங்கில் பங்கேற்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி இச்சடங்கிற்கான தடை 2011ல்நீக்கப்பட்டது.இருந்தாலும் இந்த சடங்கினால் உண்டாகும் இனப்பிரச்சனைகள் மற்றும் இனத்துக்குள் ஏற்படும் ஏற்றதாழ்வுகளை அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அதனால் இச்சடங்கிற்கு மாற்றாக மற்றொரு சடங்கை கொண்டு வந்தார்கள். இதற்கு முன்னால் கடைப்பிடித்த சடங்கிற்கும் மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள சடங்கிற்கும் வேறுபாடு உள்ளது.இதற்கு முன் ஒரு குறிப்பிட்டஇனத்தவர்களால் சாப்பிடாமல் விட்ட உணவுடன் விடப்பட்ட எச்சில் இலைகளுக்குப் பதில் கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவின் மேல் உருண்டு புரளலாம் என்பதே அந்த வேறுபாடு. இந்த வேறுபாடு என்னில் ஒன்றை நினைவு படுத்தியது. நம்மில் தீவிர கடவுள் பக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. காரணம் இந்த தீவிர பக்தியாளர்கள் இறைச்சியை விரும்பி உண்ணக் கூடியவர்கள்.இவர்கள் இறைவனை தஞ்சமடைந்தபின் மாமிசம் உண்பதை அடியோடு விட்டுவிட்டார்கள். இருந்தாலும் ஆலயத்தில் இறைவனை தொழுது கொண்டிருக்கும்போதே விலைமாதுவைப் பற்றி நினைப்பவர்கள் போல எப்போதாவது இறைச்சியின்மேல் வேட்கை ஏற்பட்டு விடுகிறது. அதை தீர்ப்பதற்காக மாற்று வழியைக் கண்டனர். அதுதான் சோயா சிக்கன். இது கோழி இறைச்சி இல்லாவிட்டாலும் சோயாவினால் தயாரிக்கப்பட்டு முழுக்க முழுக்க கோழிக்கறி போன்று இருக்குமாம்.
இதைச் சாப்பிடுவதன் மூலம் உண்மையான கோழிக்கறி சாப்பிட்ட மன நிறைவும் இறைவனிடம் தஞ்சமடைந்த நிலையும் கிடைக்கிறது. இதேபோல் எச்சில் இலைமேல் விழுந்து புரளாவிட்டாலும் அந்த நிலையை இறைவனது பிரசாதத்தின் மேல்விழுந்து புரள்வதால் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு இறைச்சி சாப்பிட முடியாது போனாலும் இறைச்சிபோன்ற ஒன்றையாவது சாப்பிட்டுவிட வேண்டும். அதேபோல் இவர்களுக்கு எச்சில் இலைமேல் விழுந்து புரளாவிடினும் எதாவதொன்றின் மீதாவது விழுந்து உருண்டு புரண்டுவிட வேண்டும்.அதெல்லாம் சரி, ஒன்றைக் கவனித்தீர்களா? மனிதன் சாப்பிட்ட எச்சில் இலையும் கடவுளின் பிரசாதமும் ஒன்றா? இறைவனை இழுக்கு படுத்துவதை விட்டு வெறும் தரையிலேயே உருண்டு புரளச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அதென்ன அப்படி ஒரு பிடிவாதம்? ஒன்று மனிதன் சாப்பிட்டுவிட்ட எச்சிலில் உருண்டு புரள்வோம் அல்லது இறைவன் உண்டபின் விட்ட பிரசாதத்தில் உருண்டு புரள்வோம் என்பது?இப்படியாக ஒரு குறிப்பிட்ட இனத்தினர் பின்பற்றிய அல்லது பின்பற்றும்படியான அறியாமைக்குள் வைக்கப்பட்டிருந்த இனத்தினர் பின் பற்றிய சடங்கை எச்சில் இலைகளுக்குப் பதிலாக இறைவன் பிரசாதம் என்பதால் எல்லா இனமக்களும் விரும்பினால் பின்பற்றலாம் என்றும் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த ஏற்பாட்டால் ஒரு இனத்தவர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரளும் சுகாதாரமற்ற போக்கு தடுக்கப்படுவதுடன் அதைப் பின்பற்றிய இனத்தின் சுயமரியாதை என்ற கௌரவமும் காப்பாற்றப்படுகிறது.ஆனால் சமூகம் மற்றும் பொருளாதார மாற்ற அமைப்பைச் சாரந்த G. K. கரந்த் என்பவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம். மத குளியல் என்ற சடங்கின் மூலம் சமூகத்திலுள்ள உயர்சாதியினர் தாம் செய்த பாவங்கள் மற்றும் தீங்குகளைக் கழுவி அவற்றை தாழ்த்தப்பட்ட சாதியினர்ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டருந்தனர் என்று கூறுகிறார். மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள சடங்கில் எச்சில் இலைகளுக்குப் பதிலாக இறைவனின் பிரசாதம் இருந்தாலும் பழையமாதிரியே உருண்டு புரள்கிறார்கள். ஆனால் இப்போது உயர்சாதியினரும் சேரந்து இச்சடங்கில் ஈடுபடுகிறார்கள்என்றும் கூறுகிறார்.இச்சடங்கு இயற்கையை கடந்த நம்பிக்கையையும் மூடப் பழக்கங்களையும் உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக எல்லோரும் விரும்பும்படியும் மிக்க மரியாதையுடனும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுகிறது என்று நம்பப் படுவதாக கட்டுரையை முடித்திருக்கிறார். மனிதர்களாக விழிப்புணர்ச்சி அடையாதவரை ஆயிரம் பெரியார்கள் தோன்றினாலும் மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியாது என்பதை உணர முடிகிறதல்லவா?-சங்கர சுப்பிரமணியன்.
![]()