கைது செய்ததும் மம்தாவை 3 முறை போனில் அழைத்த பார்த்தா சட்டர்ஜி
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, கைது செய்ததை தெரிவிக்க முதல்வர் மம்தாவை நள்ளிரவில் 3 முறை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மாநில தொழில் துறை அமைச்சராக உள்ள பார்த்தா சட்டர்ஜி, மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது இந்த மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. பார்த்தா சட்டர்ஜியின் கூட்டாளியான, நடிகையும், மாடலுமான அர்பிதா முகர்ஜி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ரெய்டில் அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அர்பிதா முகர்ஜி, அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்ட பிறகு முதல்வர் மம்தா பானர்ஜியை மூன்று முறை போனில் தொடர்பு கொள்ள முயன்றதாக ‛அரெஸ்ட் மெமோ’வில் கூறப்பட்டுள்ளது. அதாவது, அவர் அதிகாலை 1:55 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாலை 2:33 மற்றும் 3:37 மணிக்கும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பு ஏற்கப்படாததால் மீண்டும் காலை 9:35 மணிக்கும் மம்தாவை போனில் அழைத்துள்ளார்.அப்போதும் மம்தா அழைப்பை ஏற்கவில்லை.
கைது செய்யப்பட்ட அமைச்சர் ஒருவர், கைது செய்ததும் முதல்வரை தொடர்பு கொண்டு பேச முற்பட்டதும், அதனை மம்தா ஏற்காததும் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த செய்தியை திரிணமுல் காங்., தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.
எய்ம்ஸ்.,க்கு மாற்றம்
கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி, நெஞ்சுவலி காரணமாக அவர் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் இது குறித்து முறையிடவே, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சட்டர்ஜியை அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலமாக அவர் இன்று காலை புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அடுத்தகட்ட பரிசோதனைகள், சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது.
![]()