விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்… 8….. சங்கர சுப்பிரமணியன்.

முள்ளிவாய்க்காலில் இரத்தமும் சதையுமான படுகொலை என்றால் இது இரத்தமின்றி ஆயுதமின்றி தமிழருக்கு ஏற்பட்ட படுகொலை. இது இப்படியிருக்க
நான் இதை வேறுமாதிரி எடுத்துக் கொண்டு மனதை தேற்றிக் கொண்டேன்.
பாரத ஜனதா கட்சி கழகமில்லா தமிழகத்தை உருவாக்கி இந்துத்வா கொள்கையை தமிழகத்தில் விதைத்து மதவேறுபாடின்றி சுமுகமாக வாழ்ந்த மண்ணின் நிறத்தை மாற்ற முயன்றனர். கழகமில்லா தமிழகம் என்ற அவர்களது கனவை முறியடித்து வென்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் அதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நான் திராவிடன் என்று முதல்வர் ஸ்டாலின் கழகத்தை நினைவுறுத்தும் வகையில் சொல்லியிருக்க கூடும் என்பதே அது.
ஆனால் அது அப்படி இருக்குமா என்ற சந்தேகம் உடனே தொற்றிக் கொண்டது. எப்படி? எதனால்? ஆந்திராவிலுள்ள பிரகாசம் மாவட்டத்திலுள்ள முதல்வர் ஸ்டாலினின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள தெலுங்கர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி ஒரு தெலுங்கர் தமிழ்நாட்டின் முதல்வரானதை கொண்டாடியிருக்கிறார்கள். சரி, அவர்கள் கொண்டாடுதற்கு இவரை எப்படி குறை சொல்லமுடியும்?
இதில் தவறில்லை. அவர்களது இன உணர்ச்சியை மதிக்க வேண்டும். நம்மைப்போல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனாரின் பெருமையை சொல்லிக் கொண்டு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்று நடப்பதில்லையே?
நான் வேறு நீ வேறு என்பதில்லையே?
உள்ளொன்று வைத்து புறமென்று பேசாதார் உறவு கலவாமை வேண்டுமென்று தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் துய்யமணியே என்று அந்த எம்மெருமான் முருகனிடம் வேண்டித் தொழுவதென்ன அதன் பின் நாங்கள் வேறு நீங்கள் வேறு என்பது என்ன?
இதையெல்லாம் பார்த்தால் எனக்கு அந்த முருகனிடம்,
வெண்ணீரணிந்தது என்ன?
வேலைப் பிடித்ததும் என்ன?
என்ன? என்ன? என்ன?
கண்மூடி நின்றதும் என்ன?
காவியுடுத்ததும் என்ன?
என்ன? என்ன? என்ன?
என்று கே. பி. சந்தரம்மாள் பாடுவது போல்,
உள்ளொன்று வைப்பதும் என்ன?
புறமொன்று பேசுதல் என்ன?
என்ன? என்ன? என்ன?
என்றெல்லாம் பாடத்தோன்றுகிறது.
இந்த ஆந்திர மக்களைப் பார்த்தாவது
இன உணர்வு நமக்கு வருமா?
நான் இல்லாததைப்பற்றி ஒன்றும்
சொல்லவில்லை. நண்டு கதைகளில் வருவதைப்போல் ஒரு நண்டு மேலே ஏறினால் அடுத்த நண்டு காலை வாரிவிடுவதாக நம்மை நோக்கிப் புனையப்பட்ட கதைகள்தானே? ஓரிருவர் இருந்தால்கூட ஒருகுடம் பாலுக்கு ஒரு சொட்டு நஞ்சைப்போல் நம் இன உணர்வு சிதைந்து விடும் என்பதில் ஐயமில்லை. ஒரு வேளை அப்படி இருப்பதுதான் தமிழின அடையாளமோ? அப்படியென்றால் அப்புறமென்ன இன உணர்வு வெங்காயமெல்லாம்?
அப்படியும் அவர்களை மட்டும் குறை சொல்லமுடியாது. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்பதுபோல் பொதுமக்களில் மருத்துவர் விஞ்ஞானிகள் பொறியாளர்கள் வணிகர்கள் எழுத்தாளர்கள் என்று இருப்பவர்களில் பலர் தமிழ்மொழியைப் பற்றியோ தமிழினத்தைப் பற்றி கொஞ்சம்கூட நினைத்துப் பார்ப்பதில்லையே ஏன்? நம்மைப் பொருத்தவரை பிழைப்பு நன்றாக ஓடுகிறதா? அது சரியாக நடக்கும்வரை பிரச்சினை இல்லை என்ற மனப்பாங்கில்தானே இருக்கிறார்கள்.
தமிழ்மொழியா ? எங்காவது நாலுபேர் தமிழ் தமிழ் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு வேலை வெட்டி கிடையாது என்றும் அவர்கள் மட்டுமே சமுதாயத்துக்கு உழைப்பவர்கள் மாதிரி எண்ணிக்கொண்டு இருப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஒருவேளை தமிழ், தமிழ் என்பவர்கள் எல்லாம் அவர்கள் பார்வையில்
உருப்படாதவர்களோ? ஆனால் தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்கூட தமிழைப்பற்றி பேசுவதில்லையே ஏன்?
பேசாமல் இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான். ஏனெனில் சில இதழ்களும் மனிதர்களும் தமிழரிடையே பிரிவு இருக்க வேண்டும் என்றும் அந்த பிரிவு இருந்தால்தான் அவர்கள் பிழைப்பு ஓடும்
என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதலால் அவர்கள் ஒரு நாட்டினுள் என்றால் எப்படி தமிழர்களை இணையவிடால் தடுப்பது ஒருநாட்டு தமிழரை மற்றொரு நாட்டுத் தமிழருடன் எப்படி இணையவிடாமல் தடுப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே கைவந்த கலை.
அவர்கள் அந்த பகடைக்காயை உருட்டும்போது இந்த உலகுக்கே நாகரிகம் கற்றுத் தந்ததாக மார்தட்டும் தமிழர் அவர்கள் சூழ்ச்சியில் சிக்கி ஒருவரை ஒருவர் ஏதாவதொரு வகையில் வெறுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியெல்லாம் சூழ்ச்சியில் சிக்காமல் இருந்திருந்தால் கடாரம் வரை சென்று கோலோச்சிய தமிழன் இன்று கையாலாகாத தமிழனாக இருப்பானா? நாம் கையாலாகாத தமிழராய் இருந்தாலும் அவனைவிட நான் எந்த வகையிலும் குறைந்தவனில்லை என்று ஒருவரை ஒருவர் வெறுத்து வெற்று வேதாந்தம் பேசிக்கொண்டே இருப்போம்.
தமிழரிடையே சிலர் இடியே விழுந்தாலும் என்னவென்று கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்கிறார்களே. சான்றுக்கு ஒன்றை சொல்கிறேன். வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று ஒன்று இருக்கிறது. அதில் நல்ல வரையறைகள்தான் நிச்சயமாக இருக்கும்.
வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டு என்று ஒன்றை இப்போது இந்தியாவில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஈழத்தமிழர் பங்கெடுப்பு என்பது இன்றியமையாதது. இதில் அவர்களது பங்கெடுப்பு என்பது எந்த அளவில் உள்ளது? இதனால் சிறிதே நன்மை
ஏற்பட்டாலும் பரவாயில்லை. நன்மை ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை தீங்காகி விடக்கூடாது. அதுவும் ஒரு அரசியலாகிப் போய்விடக் கூடாது.
ஏனென்றால் தமிழருக்கு நல்லது நடப்பது என்றால் பலருக்கு பிடிப்பதில்லை? சில வருடங்களுக்கு சிங்கப்பூர்வாழ் வட இந்தியர்கள் ஒன்றுகூடி சிங்கப்பூர் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். அதாவது சிங்கப்பூரில் தமிழரைவிட வட இந்தியர்கள் அதிகமிருக்கின்றனர். மேலும் இந்தியாவின் தேசியமொழி இந்தி என்றார்கள். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ் உட்பட இருபத்திரெண்டு மொழிகள் தேசிய மொழிகள் உள்ளன.
இந்தி தெரியாத மற்ற மாநிலங்களுடன் தொடர்புக்காக ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. இதை மாற்றித்தான் இந்தியை தேசிய மொழியாக கொண்டு வந்துவிடவேண்டும் என்று வட இந்தியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இதை எதிர்த்து தமிழ்நாடு மட்டுமே முழு மூச்சுடன் போராடி வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாத அரசியல் தெளிவற்றவர்கள் தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஆங்கிலத்தில் அதிக மோகம் என்கிறார்கள்.
ஏன் தமிழர் மட்டும் ஆங்கிலத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று மன்னார்குடி மாடசாமி அண்ணாச்சி நினைப்பது சரிதான். அதற்கு காரணத்தைச் சொல்கிறேன். இந்தியாவிலுள்ள எந்த ஒரு மொழியும் தனிமொழியல்ல. மற்ற மொழிகளுடன் கலந்துதான் மொழி உருவம் அடைந்துள்ளன. சமஸ்கிருதம் கலந்த இந்தோ ஆரிய மொழிகள் அல்லது தமிழ்கலந்த திராவிட மொழிகள்.
மற்ற மொழிபேசுபவர்களுக்கு அவரவர் மொழியில் பற்றிருந்தாலும் அது தமிழரைப் போன்று இருக்காது. இந்தோ ஆரியமொழினருக்கு அதில் சமஸ்கிருதமும் கலந்திருப்பதால் இந்தியை தமிழரைப்போல் எதிர்க்க மாட்டார்கள். திராவிட மொழியினர் மொழிகளிலும் சமஸ்கிருதம் கலந்திருந்தாலும் தமிழ் மொழிதான் மிஞ்சி நிற்கிறது. இருந்தாலும் திராவிட மொழியினர் தமிழரை ஆதரிப்பதில்லே? ஏன் என்ற காரணம் உங்களுக்கே தெரியும்?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()