நேர்கோடமை கதைகள்…. டாமினோ சினேகம் ….. அணிந்துரை …. அண்டனூர் சுரா.


கதைகளுக்கு உயிர் உண்டு. ஆகவேதான் அது காலத்திற்கேற்ப உருமாற்றம் கொள்கிறது. ஒரு கதை மனிதன் காதுக்குள் நுழைந்து, வாய் வழியே வெளிவருகையில், அது உருமாற்றத்துடனே வெளிவருகிறது. இந்தியாவின் பொன் வாத்து முட்டைக்கதை, கப்பல் ஏறி இங்கிலாந்து சென்று இந்தியாவிற்குத் திரும்புகையில், பொன் தோகை மயில் கதையாக இறக்குமதியானது. இவ்விரு கதைகளின் மையச்சரடு ஒன்றுதான்! ‘பேராசை’.
சிறுகதையில் கரு என்பது கச்சாப் பொருள். அதை வைத்துக்கொண்டு சுத்திகரிப்பு செய்கையில், அக்கதை புனைவு, அபுனைவு, அறிவியல் புனைவு, எதார்த்தவாதம், மிகைபடுத்தப்பட்ட எதார்த்தவாதம், மாய எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதம்,.. என்பதாக உருவாக்கமும் மீளருவாக்கமும் பெறுகிறது.
இது புனைவுகளின் காலம்! புனைவு என்பதற்கு பொய் என்றொரு பொருள் உண்டு. இங்கு, புனைவு என்பது கற்பனை. கற்பனையில் உண்மை இருக்கலாம். ஆனால், உண்மையெல்லாம் கற்பனை அல்ல!. கற்பனையோடு உண்மையைக் கலந்து எழுதுவதே புனைவு இலக்கியம். இந்த கலவையளவு மாறியும் இருக்கலாம். இந்த அளவு மாற்றத்தால், கதை மீள்உருமாற்றம் கொள்கிறது.
எழுத்தாளர் சந்திரா மனோகரன் அவர்கள், இந்த அளவு மாற்றத்தை வெளி ஒருவரால் கணித்துவிட முடியாத அளவிற்கு கச்சிதப்படுத்துகிறவர். இவர் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, இலக்கியத்தோடு புழங்குகிறவர். ஆகையால், தற்கால கதை போக்குகள் இவருக்கு அத்துப்படியானவை. கதையற்று, மொழிகளால் எழுதப்படும் கதைகள்; மொழியற்று சம்பவங்களால் கோர்க்கப்படும் கதைகள்; கதையற்ற கதைகள்,.. என சிறுகதை போக்குகளை நன்கு அறிந்தவர், ஆயினும், கருவும் நோக்கும் அற்று எழுதப்படும் எழுத்து, ஏன் என்றும், வீண் என்றும், இவரது கதைகள் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன.
அன்பு, பாசம், நெகிழ்ச்சி, காதல், நெருக்கம், நட்பு, உறவு இதைத் தாண்டி இவரது கதைகள் பயணிப்பதில்லை. இந்த உலகம் அன்பு சூழ்ந்தது, என்பதைக் கதைகளாலும், கதை எழுதப்படும் மொழியாலும், வாசகர்களுக்கு உணர்த்துகிறார். ஆகையால்தான், இவரால் ‘ டாமினோ சிநேகம்’ என்றொரு கதையை எழுத முடிந்திருக்கிறது. இச்சொல், தமிழ்ச் சிறுகதை பரப்புக்குப் புதிது. ‘ டாமினோ’ மருத்துவத் துறை சொல். இச்சொல்லை வைத்து, கட்டுரை எழுதிவிடலாம். ஆனால், இவர், சிறுகதையாகச் சாதித்திருக்கிறார். “ஒருவனுடைய இறப்பில், இருவரை உயிர்வாழ வைக்கும் இந்த மருத்துவ அதிசயத்துக்கு-அதாவது இந்த மாதிரியான அபூர்வ அறுவை சிகிச்சைக்கு ‘டாமினோ’ என்று பெயர்”. இக்கதை சொல்லால் புதிது, கருவால் புதிது. சொல்லும் விதத்தால் புதிது.
கறையான் என்ஜினியர் என்றொரு கதை. ஊர், தெரு கறையான்களுக்கு மருந்து அடிக்கும் ஒருவரின் வீடு, எப்படியாக இருக்கிறது, என்பதைச் சொல்லும் கதை! கறையான் மேயும் வேகத்தை ஓநாய்பசி, என்கிறார். இக்கதையில் வரும் பிக்காசோ ஓவியரும், அவரது ஓவியமும் அக்கதையினூடே இளையும் கறையான்களும், கதையை வாசிக்கும் வாசகனை நெகிழ வைக்கிறது. ஒரு படைப்பை அழிக்கும் கறையான்தனம், நம்மிலும் உண்டுதானே!.
மணமகன், என்கிற சிறுகதையில் தாகூரின் போஸ்ட் மாஸ்டர் நினைவுக்கு வந்துபோகிறார். வயது கடந்து மணப்பொருத்தம் தேடுவதும், மாறுவதுமான கதை. ‘நீர்ல பார்த்தேன் உன் சீரை; உப்பிலே பார்த்தேன் உன் துப்பை’ போன்ற சொலவம், கதையை கனப்படுத்துகிறது. மனித வாழ்க்கையில், வாலிபம் எத்தனை முக்கியமான பருவம், என்பதை யோகியத்துவத்துடன் பேசும் கதை, ‘ ஓருயிர்’. இதே போன்று, என் பேர் யமுனா, அவர், அவரவர் வாழ்க்கை,.. போன்ற கதைகள், உள்ளடக்கத்தாலும், கதை சொல்லுப்பட்ட பாங்காலும் கவனம் பெறும் கதையாகின்றன.
சந்திரா மனோகரன் அவர்கள் சிறந்த கவிஞர் என்பதால், இவரது கதைகளில் கவிதைச்சொற்களும் உவமைகளும் ஊடும் பாவுமாக பிணைகிறது. இவை, கதைகளை மொழியின் ஆழத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஓரிடத்தில் ‘உலக்கைத் தேய்ந்து உளிப்பிடியான மாதிரி’ என்கிற உவமையைப் பயன்படுத்துகிறார். இன்னொரு இடத்தில், ‘மரணத்தின் கருநிழல் பிடரியில் அமர்ந்து ஊர்கிறது’ என்கிறார். ‘பகலவனின் கதிர்கள், பறவையின் இறகைப்போல உதிர்த்துக்கொண்டிருந்தன’ என்கிற உவமை வரி, அழகியலாக மட்டும் இருக்கவில்லை. பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்துவதுடன், கதையின் போக்கையும், அதன் அடர்த்தியையும் கனப்படுத்துகிறது.
காதல் என்கிற பெயரில் அத்துமீறி கொலை செய்யும், அகௌரவ கொலையை ஒரு கதை பேசுகிறது. ஆள்மாற்றி, கொலை செய்யும் வன்மம், எத்தகைய கொடூரம்! வாகனம் எரிகிறது! வாசிக்கையில் இதயமும் எரிகிறது!. கவிஞர்கள் சிறுகதை எழுதுகையில், சிறுகதைக்குள் அவர்களையும் அறியாமல், கவிதைகள் நுழைந்துவிடுவதுண்டு. இவரது கதைகளில் அப்படியான சில இடங்கள் உண்டு. ஆயினும், திகட்டாது உள்வாங்குகிறது. வாசிப்பை மென்படுத்துகிறது.
வெளிநாட்டு கள கதைகளை இவர் கற்பனையாக எழுதிவிடவில்லை. ஜெர்மன் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் கதையில் மிளிர்கிறது. ‘ஊன்றல்’ கதை அப்படியானது. பெரும்பாலான கதைகள் ரகசியக்காப்பு அவிழ்ந்து, சுபம் பெறுகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பதினேழு கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு களம். எல்லா கதைகளும் இலக்குநோக்கு கொண்டிருக்கின்றன. கதைக்குள் சமூக அக்கறை இருக்கிறது. எந்தவொரு அரசியல் வட்டத்திற்குள்ளும் கதையைச் சிக்கவிடாமல், ஒரு சார்புத் தன்மையில்லாமல் நேர்கோடமை அமைந்த கதைகள் இவை. கனவு பதிப்பகம் வழியே வெளிவரும், “ டாமினோ சிநேகம்” என்கிற இச்சிறுகதைத் தொகுப்பு, வாசகப்பரப்பில் கனமும் கவனமும் பெறும். எழுத்தாளருக்கு எனது வாழ்த்துகள்!
அண்டனூர் சுரா.
![]()