விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ்தேசியத்தின் அவசியமும்!….. தொடர்…5…சங்கர சுப்பிரமணியன்.

![]()
எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதைக் கூட புரியமுடியாத அளவுக்கு அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவர்களே தமிழ்நாட்டினர் என்றும் திராவிடக் கட்சிகளை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளவைத்திருக்கிறார்கள் என்று அவதூறு சொல்கின்றனர். எனவே தமிழ்நாட்டினர் வேண்டுமென்றே திராவிடக்கட்சிகளைத் தொடரவிடவில்லை. அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் பேசவந்தால் இப்படித்தான் பேசுவார்கள்.
ஆரம்பத்தில் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி தந்த திராவிடக் கட்சிகளே சிறிது சிறிதாக தமக்காகவும் நல்லதைச் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு நலன்சார்ந்த திட்டங்கள் சிலவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்துவிட்டு தமது நலன்களிலும் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தனி்த்தனியாகவும் கூட்டுக் கொள்ளையும் அடித்து தமிழ்நாட்டை லஞ்சக்காடாக மாற்றினர்.
ஆண்டியாக கட்சியில் இருந்தவனெல்லாம் அரசனானான். அரசனாக இருந்தவனெல்லாம் பேரரசனான். பரம்பரை ஆட்சிக்கும் வழிவகுத்தான்.
இப்படிப்பட்ட சூழலை உணரந்து
மாற்றாக சில மாநிலக் கட்சிகள் வந்தாலும் அவைகளும் தன்னலம் சார்ந்த கட்சிகளாகவும் சாதிக்கட்சிகளாகவும் திறனான கொள்கையற்ற கட்சிகளாவும் திறனான கொள்ககளை கொண்ட கட்சிகளோ அதைத்திறம்படக் கட்டிக்காக்க முடியாது போனதாலும் அவைகாளால் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் நீக்குமளவுக்கு பெரிதாக வளர்ந்து விடமுடியவில்லை.
எனவே தமிழ்நாட்டினர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.வேண்டுமென்றே
திராவிடக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தவில்லை. தமிழ்நாட்டுத் தமிழரை வேறுநடுகளில் வாழும் தமிழரொடு கண்மூடித்தனமாக ஒப்பிடக்கூடாது. சான்றாக ஈழத்தை எடுத்துக் கொள்வோம். ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் சிலோன் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறும் முன் பெருவாரியாக தமிழரே இருந்தனர். அப்படியும் வேற்றுமொழியினர் இருந்தனர் என்றால் மிகச் சிறிய அளவே சிங்களர்கள் இருந்தனர். அப்போது தமிழருக்கென ஒரு வானொலியாக இலங்கை வானொலியும்
இயங்கிவந்ததை மறுக்க இயலாது.
தமிழ்நாட்டின் நிலை அப்படியல்ல. இந்தியா விடுதலை அடையும் முன்னரே ஒரு மொழியல்ல ஒன்பது மொழிபேசுபவர்கள் மதராஸ் ராஜதானியில் இருந்திருக்கின்றனர். விடுதலை அடைந்தபின் கூட ஒரு வானொலிகூட தமிழருக்கென்று இருந்ததில்லை. சென்னை தமிழருக்கும் தெலுங்கருக்கும் தலைநகராக இருந்தது. எனவே சென்னை வானொலியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகள் இருந்தன.
தவிர சென்னையைச் சுற்றி தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக வாழ்ந்தனர். சென்னப்ப நாயக்கன் பட்டணம் என்பதே அப்பகுதியின் பெயராக இருந்தது. அதனாலயே மொழிவழி மாநிலமாக மாற்றும்போது சென்னையை தெலுங்கர்
குறிவைத்தனர். அப்போது சென்னையா திருப்பதியா என்று நிலை ஏற்பட்டபோது கோவில் வருமானத்தில் நாட்டமில்லா தமிழர் திருப்பதியை விட்டுக்கொடுத்து சென்னையே மீட்டனர்.
திருப்பதி தெலுங்கர் வசம்சென்றதும் அதன் அக்கோவிலுள்ள தமிழரின் அடையாளங்கள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன. அப்படி இருந்தும் நாம் திருமலைநாயக்கர் மஹாலின் அடையாளத்தை சிதைக்கவோ வீரபாண்டிய கட்டபொம்மனைக் கொண்டாடமலோ இல்லை. இதுதானே
தமிழரின் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தியவரிடம் கூட சுயமரியாதைக்காகத்தானே போராடினான் தமிழன்.
பலநூற்றாண்டுகளகவே சகோதரர்களாக எண்ணி வாழ்கிறான். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி நினைக்கவில்லையே? காவிரியில் உரிமை கேட்டால் அங்குள்ள தமிழரை அடிக்கிறான். முல்லைப் பெரியாறென்றால் முதுகில் குத்துகிறான். செம்மரம் கடத்தியதாக ஆந்திரக்காட்டில் தமிழ்நாட்டுக் கூலித்தொழிலாளிகளைச் சுட்டுக் கொள்கிறான். அதற்கு பழிதீர்க்கும் வகையில் இங்குள்ள அம்மக்களை திருப்பித் தாக்கும் அற்பகுணம் கொண்டவரல்லவே தமிழர். மற்றவர்களை வாழவைத்து பார்ப்பதுதானே தமிழனின் அடிப்படை குணம். அழிப்பதல்லவே!
சமீபத்தில் ஒரு வலையொளி பார்த்தேன். அதில் ஒரு நடிகர் பேட்டி காண்பவரிடம் இப்படிச் சொல்கிறார். தமிழ்நாட்டில் ஒரு தமிழன் சொந்த வீட்டில் சிறப்பாக வாழ்கிறான். அப்போது அவன் வீட்டுத்திண்ணையில் ஒரு வட இந்தியர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்து தன் குழந்தைகளுக்கு ரொட்டியை துண்டுதுண்டாக பிய்த்து ஊட்டிக் கொண்டிருக்கிறார். ஒதுங்க இடமில்லாமல் இருந்த அவர்களின் நிலையை அறிந்த தமிழன் இரக்கமடைகிறான்.
அதனால் அந்த வட இந்தியனைப்பார்த்து ஏனப்பா திண்ணையில் இருந்துகொண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கிறாய் வீட்டின் உள்ளே வா என்கிறான். அவனும் குடும்பத்தோடு வீட்டுனுள் நுழைகிறான். வீட்டில் நுழைந்தவன் மேல் பரிதாபம் கொண்டு உனக்கு இருக்க இடம் கிடைக்கும்வரை இங்கேயே இருந்து கொள் என்று ஒதுக்குப்புறமான அறை ஒன்றை அவர்கள் தங்குவதற்காக கொடுக்கிறான். கொஞ்சநாட்கள் செல்கின்றன.
வந்தவன் வீட்டுக்காரனிடம் இங்கேயே ஒரு ஒரமாக வட்டிக்கடை போட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு வாடகையாக சிறிது பணமும் தருகிறேன் என்கிறான். வீட்டுக்காரன் பாவம் அவனுக்கு தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கட்டும் என்று அனுமதி கொடுக்கிறான். ஆண்டுகள் பல ஓடுகின்றன. வந்தவன் வீட்டுக்காரனுக்கே வட்டிக்கு பணம் கொடுக்கிறான். வட்டி குட்டி போடுகிறது. வட்டியும் முதலும் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் வட்டியானது மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டால்கூட கட்டமுடியாத அளவுக்கு செல்கிறது.
ஒண்ட வந்தவன் வீட்டின் உரிமையாளனிடமே ஒழுங்காக வட்டியைக் கட்டு அல்லது வீட்டை எனக்கு எழுதிக் கொடு என்கிறான். வேறுவழியின்றி வந்தவனுக்கு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு எதிர்வீட்டுத் திண்ணைக்கு போகிறான். வந்தவன் அந்த இடத்தை இடித்துவிட்டு ஐந்துமாடி வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்கிறான். திண்ணைக்குப் போனவனோ வந்தவனைப் பற்றி பொறாமை பட்டதோ தன் நிலைபற்றி வருந்தியதோ கிடையாது. ஏனென்றால் அவன் வள்ளுவனைப் படித்திருப்பதால் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இன்றி அறவழி நடக்கிறான்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழர் நலனுக்கு கேடு விளைவிக்க வேண்டும் தமிழர் நலத்திட்டங்களை சரிவரச் செய்யாமல்
பணத்தை சூறையாட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்சிக்கு வந்திருப்பார்கள் என்று ஒரேயடியாக எண்ண முடியவில்லை. தமிழரும் நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமக்கு தீமை செய்வார்கள் என்று எண்ணவுமில்லை.
அறிஞர் அண்ணா கறைபடாத கரமுடையவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எம். ஜி. ஆர் சொத்து சேர்ந்ததாக சொல்லமுடியாது.
சத்தியா ஸ்டூடியோவையை விற்றதை அனைவரும் அறிவோம். அவரது சகோதரர் குடும்பம் கூட செல்லச்சூழலில் வாழ்ந்து வரவில்லை. மற்றவர்களது சொத்து மதிப்பு அவர்கள் முதல்வராவதற்கு முன்பும் அதன் பின்பும் இருப்பதை வைத்து நாம் சொல்ல வேண்டாம் உலகே அதை நன்கறியும்.
இவர்களில் ஏதோ வேற்று மொழியினர்தாம் தமிழ்நாட்டை கொள்ளையடித்தார்கள் லஞ்சக் காடாக மாற்றினார்கள் என்று ஒரேயடியாக சொல்லவும் முடியாது. தமிழரும் அவர்களது அருகில் இருந்தவர்களும் சேர்ந்தே தமிழ்நாட்டை சூறையாடினர். ஆதலால் தமிழ்நாட்டை தமிழன் ஆளாததால் தமிழ்நாடு நாசமாகி விட்டது என்று மொத்த பழியையும் வேற்றினத்தவர் மீது அநியாயமாகப் போட்டு
குறை கூறமுடியாது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()