கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ்தேசியத்தின் அவசியமும்!…..தொடர்…3….சங்கர சுப்பிரமணியன்.

ஒரு தேசிய இனத்துக்கு இன்னொரு தேசிய இனம் உதவுமா? அதற்கு இன்றைய நடப்பையே சான்றாக வைத்து பார்ப்போம். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் போர் மூண்டது. உலகில் அதே தேசிய இனத்தைச் சேர்ந்த எத்தனையோ நாடுகள் உள்ளன? அவர்கள் பாலஸ்தீனத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார்களே? இரண்டாம் உலகப் போருக்குமுன் இஸ்ரேல் என்ற நாடே கிடையாது. உலகெங்கும் யூதர்கள் சிதறிக்கிடந்தனர். ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் லட்சக் கணக்கான யூதர்கள் கொன்று அழிக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் இங்லாந்து யூதர்கள்மேல் கொண்ட பரிதாபத்தால் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை மற்ற நாடுகளின் ஆதரவோடு பாலஸ்தீனியரின் விருப்பத்துக்கு எதிராக உருவாக்கியது. அன்றிலிருந்து இன்றுவரை இரு நாடுகளுக்கும் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது போல் இந்திய விடுதலையின்போது பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாகியது. அப்போது
உலகின் தொன்மையான பண்பாட்டையும் தனக்குண்டான கலப்படமற்ற தொன்மையான மொழியையும்  கொண்ட தமிழ்நாடு தனிநாடாக உருவதற்குண்டான சந்தரப்பத்தை இழந்துவிட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். அதில் ஒன்று என் ஊகிப்பு. அல்லது ஊகிப்பு என்ற போர்வையைப் பயன்படுத்தும் சப்பைக்கட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழர் வேண்டும்போது தனிநாடு பெறும் தகுதிபெற்றவர்கள். எரிகின்ற கொள்ளியில் பிடுங்கியவரை லாபம் என்று
விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் போராடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமக்காக ஒருநாட்டை பெறவிரும்பாத பண்பாகக்கூட அது இருந்திருக்கலாம். அதேபோல் இலங்கையிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழ்ந்த தமிழரும் தமக்கென ஒரு நாட்டை உருவாக்காது
இருந்திருக்கலாம். அவர்களும் அதைச்செய்யவில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக போராடி பல தலைவர்களை இழந்து விடுதலைக்காகப் போரடினோம். பல தேசிய இனமக்கள் ஒன்றிணைந்து போராடினோம். அந்த போராட்டத்தின் வலியும் வேதனையையும் போராடிய எல்லா தேசிய இனமக்களுக்கும் நன்றாகவே தெரியும். எல்லா தேசிய இனமக்களுக்கும் அடிமை வாழ்வு எப்படி இருக்கும் என்பதும் அந்த அடிமைத்தளையை உடைத்தெறியத்தான் போராடினோம் என்றும் தெரியும்.

அதனால் எல்லா தேசிய இனமும் ஒன்று சேர்ந்து நாட்டின் வளங்களை சமமாகப் பகிர்ந்து உரிமையுடன் பாரபட்சம் இன்றி ஒருதாய் பிள்ளைகளாக வாழலாம் என்று நினைத்தோம். ஆனால் நடந்தது என்ன? அடிமையாய் இருந்ததை மறந்து அடிமையாய் இருந்தபோது அனுபவித்த வேதனையையும் மறந்தோம்? அதையெல்லாம் எப்படி மறக்க முடிந்தது? நான் பெரியவன்? நீ பெரியவன் என்ற எண்ணமெல்லாம் தலைதூக்க ஆரம்பித்தன.

சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடின்றி ஒன்றாக இணைந்து எதிரியோடு போராடியவர்கள் விடுதலை அடைந்தபின் இத்தனை வேறுபாடுகளையும் பார்க்கத்தொடங்கினர். இது எப்படி இருக்கிறது தெரியுமா? பசி பட்டினி என்று பஞ்சத்தில் இருந்தபோது எது கிடைத்தாலும் உண்ணும்படி இருந்த மக்கள் வசதி வாயப்புக்கள் வந்ததும் அது சுவையானது இது சுவையற்றது இது ஏழைகளின் உணவு இது செல்வந்தர்கள் உணவு என்ற மனப்பான்மை ஏற்பட்டது.

இந்த உணவையெல்லாம் மனிதன் சாப்பிடுவானா? என்று உணவிலே பேதம் பார்க்க ஆரம்பித்தவன் மனிதருக்குள்ளும் பேதம் பார்க்கத் தொடங்கினான். அடிமையாக இருந்ததை மறந்து தன்னோடு இணந்து அடிமையிலிருந்து விடுபட போராடியவர்களையே அடிமைப்படுத்த
ஆரம்பித்தான். தம் நாட்டு மக்களையே சாதி, மத,  மொழியணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒருவருடன் ஒருவரை மோதவிட்டான். மக்களுக்குள் பகைமையை உருவாக்கினான். அந்த பகைமையை நீர்த்துப் போகவிடாமல் அப்படியே வைத்திருக்க அரும்பாடுபட்டான்.

இந்த பகைமையை வைத்தே அரசியல் பண்ணினான். அதே பகைமையை வளர்த்தே மக்களை அடிமையாக்கினான். அரசியலை வைத்தே ஆட்சியைப் பிடித்தான். ஆட்சி அதிகாரம் ் கிடைத்ததும் அந்த பலத்தை வைத்துக் கொண்டே உரிமைக்கு போராடும் மக்களின் குரல்வளையை நெறித்தான். தாம் அடிமையாக இருந்த வரலாறு மறந்து அதே வரலாற்றை மறுபடியும் எழுதினான்.

எல்லோரையும் கேளிராக என்னும் எண்ணமுடைய மக்கள் தம் நாட்டு மக்கள் தமக்கு தீங்குவிளைவிக்க மாட்டார்கள் என்று எல்லாவற்றையும் நல்லதாகவே எண்ணும் நம்பிக்கை தான் காரணம். அவ்வளவு நல்லவங்களா நீங்க? அப்படியென்றால் சேர, சோழ, பாண்டியர்கள் ஏன் அடித்துக் கொண்டார்கள்? விடுதலை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஏன் மோதின? என்று மாயவரம் மயில்சாமி அண்ணாச்சி நக்கலாக புன்னகைப்பார் என்பதும் எனக்குத் தெரியாமலில்லை.

சேர, சோழ, பாண்டியர்களை இப்போது கேட்க அவர்கள் இப்போது இங்கில்லை. விடுதலை இயக்கங்களில் இருந்த தமிழரும் இனி அப்படி இருக்கமாட்டார்கள் என எண்ணுகிறேன். அது எப்படி நடக்கும்? அப்படி எல்லாத் தமிழரையும் இணைய விட்டுவிடுவேனே நான் என்று சிலரும் நம்மில் இல்லாமல் இல்லை. அதைத் தவிர்க்க இயலாது. அப்படி இல்லாவிட்டால்தான் நாம் யோசிக்கவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு சிறப்புக் குணம் இருக்கும். அதுபோல் இணையவிடாமல் தடுப்பது தமிழினத்தின் தமிழ்ச் சிறப்பென எண்ணி கடந்து போக வேண்டியதுதான்.

சரி, இனி தடம் புரண்டுசென்ற மனக்குதிரையைத் திருப்பி நேர்வழிக்கு கொண்டு வருகிறேன். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உலகநாடுகள் இந்த இரு நாடுகளில் எந்த நாட்டிற்கு ஆதரவளிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அவரவர்களுக்கு அவரவர் நாட்டுக்கான வியாபாரம் மற்றும் பாதுகாப்பு என்பதே முக்கியம்.

தமிழராகிய நாம் மற்றவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நம்பி நம்பியே ஏமாந்ததே அதிகம். இதற்கு சூழலும் ஒரு காரணம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழருக்கும் தமிழ்மொழிக்கும் குறிப்பாக
தமிழகத்தில் பெரிதாக நன்மையொன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. நம்மை பயன்படுத்தி நம்முதுகில் சவாரி செய்துகொண்டே மற்றவர்கள் வளம் கண்டனர்.

இந்நிலை விடுதலைக்குப் பின்னும் தொடர்ந்தது. உடனிருந்து அழித்தவர்களோடு சேர்ந்து ஒன்றிய
அரசும் தமிழ்மொழிக்குண்டான சிறப்பை தகர்க்கும் முறையில் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. தமிழரென்று கூறுக்கொண்டே தமிழர் முன்னேற்றத்துக்கு தடையாக
குலக்கல்வியை கொண்டு வரத் துடித்தார்கள் சிலர். அப்போதுதான் தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு மரக்கிளை கிடைத்தாற் போல திராவிடர் கழகம் கிடைத்தது. அவர்களது சமூகநீதிக் கொள்கைகளால் தமிழர் ஈர்க்கப்பட்டனர்.

தீண்டாமை, சாதிக் கொடுமை, பெண்ணடிமை, கல்விமறுப்பு, ஆதிக்கமனப்பான்மை போன்றவற்றால் அடிமைப் பட்டிருந்த தமிழருக்கு திராவிடர் கழகம் ஒரு விடிவெள்ளி போல தென்பட்டது. ஏனென்றால் அப்போதிருந்த சென்னை ராஜதானி எல்லா மொழியினரையும் உள்ளடக்கி இருந்ததால் பாதிக்கப்பட்ட எல்லா மொழியினரும் இக்கொடுமைகளில் இருந்து மீளவேண்டி இருந்ததால் தமிழரும் இவ்வியக்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதை தமிழ்தேசிய இனம் உணரவேண்டும்.

தமிழர் அன்று எதிர்கொண்டிருந்த சூழல் வேறு. இன்று தமிழ் தேசிய இனம் எதிர்தோக்கி வரும் பிரச்சினைகள் வேறு. அன்று சம உரிமை, தீண்டாமை, கல்விக்கெல்லாம் போராட வேண்டியிருந்தது. அப்போது எதற்காக போராடுகிறோம் என்றுதான் தமிழர் சிந்தித்தார்களேயன்றி எந்த மொழிக்காரர்கள் போராடுகிறார்கள் என்று எவரும் பார்த்தமில்லை.

இதை எளிதாக விளங்கும்படி சொல்லவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நாம் மிகவும் பசியோடு இருக்கிறோம். அப்போது ஒருவர் நமக்கு உணவளிக்க முன்வருகிறார் என்றால் நாம் என்ன செய்வோம்? உடனே கை நீட்டி அவர் கொடுக்கும் உணவை வாங்கி வேகமாக உண்போமா? அல்லது அவர் எந்தமொழி பேசுபவர் என்று ஆராய்ந்து கொண்டிருப்போமா? இதுதான் அன்று சென்னை ராஜஸ்தானியில் வாழ்ந்துவந்த தமிழர் நிலை.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button