பலன் எதிர்பாராமல் பயணிப்பவர்!…. சங்கர சுப்பிரமணியன்.

![]()
மண்ணில் பிறந்த மனிதரெல்லாம் மாமனிதர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது
ஒரு பலனை எதிர்பார்த்துத்தான் செயலாற்றுவார்கள். நாம் உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் இயங்கவேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பதால்தானே. அப்படி ஒரு அவசியம் மட்டும் இல்லாதுபோனால் அதற்கு செலவிடும் பணம்கூட வீண்தானே என்று மனிதன் எண்ணிவிடுவான். அதற்காக அப்பணத்தை மிச்சப்படுத்தி பொதுத்தொண்டா செய்துவிடப்போகின்றான்? என்ன செய்வான்?
சொல்கிறேன் கேளுங்கள். பெரும்பாலானோர் இப்படித்தான் செய்வார்கள். ஒன்று அப்பணத்தை முறைப்படி சேமித்து இன்னும் இரண்டு வீடு வாங்குவார்கள். அல்லது அவர்களது விரும்பிய இறைவனுக்கு வைரத்தில் மணிமுடியே அல்லது மாலையோ செய்துகொடுத்து மகிழ்வார்கள். சிறிதாக ஒரு மருத்துவமனையை அல்லது கல்விச்சாலையையோ திறந்து உயிரோடு இருப்பவர்களுக்கு உதவமாட்டார்கள்.
ஆனால் மதர் தெரசா ஒருமுறை குழந்தைகளுக்காக உதவிவேண்டி ஒரு செல்வந்தரிடம் கை நீட்டினாராம். அப்படி நீட்டிய கையில் காரி உமிழ்ந்தாராம் அச்செல்வந்தர். ஆனால் சிறிதும் மனம் தளராத அவர் அந்த செல்வந்தரிடம் நீங்கள் கொடுத்தது எனக்கு ஆனால் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று அடுத்த கையையும் காட்டினராம். அந்த இடத்தில் நான் அவரை இயேசுவையும் மிஞ்சிவிட்டதாக எண்ணினேன்.
ஏனெனில் வலியைவிட அவமானம் வலிமிகுந்தது. இயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றார். காரி உமிழ்ந்த அவமானத்தைவிட கன்னத்தில் விழும் அறை வலிமிகுந்ததல்ல. இதுபோல் ஒரு நற்தொண்டு செய்வதற்கு பணம் ஈட்டுவது மட்டுமின்றி அதை பயன்படுத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பெரும்பாலானோர் ஒரு நற்செயலுக்கு பணம் வேண்டுமானால் கொடுப்பார்கள் அதை ஏற்று நடத்துவார்களா என்றால் யோசிக்க வேண்டிய அவசியமே?
இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பின் மூலம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கண் திறப்பதென்பது எளிதன்று. அத்தகைய செயற்கரிய செயலையும் அவ்வமைப்பின் தலைவராகவும் இருந்துகொண்டு ஒரு மனிதர் செயலாற்றி வருகிறார் என்றால் அவரை சாதாரண மனிதராகப் பார்க்க முடியவில்லை. அவர் வாய்மூலம் ஒரு கூட்டத்தில் அவ்வமைப்பில் இருக்கும் வைப்புநிதி பற்றி சொன்னபோது அதை திரட்ட என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை உணரமுடிகிறது. இச்சமயத்தில் அந்த அமைப்பையும் அதற்கு தடங்கலின்றி நிதி வழங்குபவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இடர்படும் காலங்களில் இயன்ற உதவிசெய்வது இயல்பென்று காட்டும் வகையில் இரண்டு கொள்கலன் நிறைய பொருட்களுடன் சுனாமியால் பாதிப்படைந்த சமயத்தில் இலங்கை சென்று உதவிய செயலையும் மறக்க இயலாது. தொண்டாற்றும் மனிதர்களில் இருவகையுண்டு. செய்யும் தொண்டினால் புகழ்வரும் என்று தொண்டாற்றுவது ஒருவகை. இன்னொருவகை இயல்பிலேயே வருவது அதனால் வரும் புகழ்பற்றி எல்லாம் எண்ணாமல் செயலாற்றுவது.
தொண்டு செய்வதிலும் சிக்கல் உள்ளது. என்ன அப்படி சிக்கல் வந்துவிடப் போகிறது என்கிறீர்களா? நான்குபேர் நல்லவிதமாகச் சொன்னால் கெட்டவிதமாகச் சொல்வதற்கும் ஒன்றிரண்டு மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? அப்படிப் பட்டவர்கள் இதில் இவர் எவ்வளவு அபகரித்தாரோ என்பார்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாம் கறைபடாத கரத்துடன் இருக்கிறோம் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று செயலாற்றுவதே தொண்டு. அப்படியெல்லாம் நினைத்திருந்தால் மதர் தெரசாவால்
தொண்டாற்றியிருக்க இயலுமா?
ஒரு தொண்டோடு நின்றால் பரவாயில்லை இவர் பல தொண்டுகளைச் செய்கிறார். சிலரை பன்முக கலைஞர் என்று சொல்வார்கள். அதாவது எழுதுவார்கள், நடிப்பார்கள், நடனம் புரிவார்கள். அப்படியானால் இவரை பன்முகத் தொண்டர் என்று சொல்லலாமா? ஏனென்றால் இவர் சமூகத் தொண்டுடன் சேர்த்து எழுதவும் செய்கிறார். எழுத்து என்பது ஒரு பணிதானே அதை எப்படித் தொண்டாகக் கருதமுடியும்? பணியை பணியாக மட்டும் செய்யாமல் அதற்கும் மேலாகச் சென்று செய்தால்
தொண்டாகிவிடும்.
எல்லா எழுத்தாளர்களுமே எழுதுவார்கள். நூல் வெளியிடுவார்கள். ஆனால் மற்ற எழுத்தாளர்களைப்பற்றி பாராட்டமாட்கள். அவர்களது எழுத்துக்களையும் பாராட்டமாட்டார்கள். அப்படியே பாராட்டினாலும் ஓரிரு வார்த்தைகளோடு அது முடிந்து போகும். இவரோ நமக்குத் தெரிந்த எழுத்தாளர்களையும் தெரியாத எழுத்தாளர்களையும் புகழ்பெற்றவர்களையும் புகழ்பெறாதவர்களையும் தேடிப்பிடித்து பாராட்டுவார் அவர்களைப்பற்றி கட்டுரை எழுதுவார் நூல் எழுதுவார். அதனால்தான் சொல்கிறேன் இவரைப் பன்முகத்தொண்டர் எனலாம்.
பாராட்டுவதால் ஒன்றும் குறைந்து விடமாட்டோம். சிலர் மற்றவர்களைப் பாராட்டினால் நம் புகழ் பாதித்துவிடுமோ என்று சிக்கனமாக பார்த்து பாராட்டுவார்கள். செல்வமா அள்ளி அள்ளி கொடுத்தால் குறைந்துவிட? செல்வத்தையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். உதவாத செல்வம் மரம் காய்க்காமல் இருந்தென்ன அது காய்த்தும் பயனில்லையெனில்
என்பதைப் போன்றாகிவிடும். ஒரு கட்டுரை எழுதினாலோ அல்லது ஒரு கதை எழுதினாலோ அவரை எழுத்தாளர் என்று அங்கீகாரம் கொடுத்து பாராட்டிவிடுவார் இவர்.
நானும் எழுத்தாளர் இவரையும் என்னையும் எப்படி ஒரே தட்டில் வைத்துப் பார்க்கமுடியுமா என்றெல்லாம் எண்ணமாட்டார். இது முற்றிலும் உண்மை. அதற்கு நானே சாட்சி. நான் கவிதை என்று சிலவற்றை கிறுக்கி வைப்பேன். கட்டுரை கதை என்று கொஞ்சம் எழுதுவேன். பெரிதாக நூல்கள் எதுவுமே வெளியிட்டதில்லை. நூல்கள் வெளியிட வேண்டும் என்றெல்லாம் எண்ணியதும் இல்லை. அப்படியே நூல்கள் வெளியிட வேண்டுமென்றாலும் சந்தர்ப்பம் என்னை நோக்கி வந்தால் பாரத்துக் கொள்ளலாம் என்று எண்ணுபவன்.
எங்கள் ஊரில்(திருநெல்வேலி) ஒரு சொலவடை(பழமொழி- மசால்வடை அல்ல) சொல்வார்கள். அது, “எல்லோரும் தேங்காய் உடைத்தால் நாம் ஒரு சிரட்டை(தேங்காய் மூடி)யையாவது உடைக்கவேண்டும்” என்று சொல்வார்கள். அதுபோல் எல்லோரும் எழதுகிறார்கள் நூல் வெளியிடுகிறார்கள். அதிலும் பல தளங்களில் பயணிக்கிறார்கள். நானும் எழுதுகிறேன் ஆனால் பல தளங்களில் எழுதுவதில்லை. நூல் வெளியிடுவதும் இல்லை. அப்படியருந்தும் இவர் வாயினாலேயே பொதுமேடைகளில் கவிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் என்னை அழைத்திருக்கிறார்.
இதிலிருந்தே இவரைப் புரிந்து கொள்ளலாம் மற்றவர்களை இவர் எப்படி
அங்கீகரிக்கிறார் என்பதை. அதேசமயம் இவர் எழுத்தைப் பொருத்தவரை உண்டென்பதை உண்டென்பார் இல்லை என்பதை இல்லை என்பார். உண்மையைச் சொல்ல அவர் யாராயிருந்தாலும் அஞ்சமாட்டார். குற்றம் கண்டால் அதை முகத்திற்கு எதிரே சொல்லிவிடும் பண்பு கொண்டவர் என்பதால் இவரிடம் புறம்கூறும் குணமிருக்கும் என்று எண்ணமுடியாது.
இவரை ஒரு நடமாடும் நூலகம் என்றால் அது மிகையாகாது. நமக்கெல்லாம் நேற்று நடந்தவை இன்று மறந்து போகும். ஆனால் எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் உள்ள அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தைதெரிந்த வித்தகர். இவர் அப்படிப்பட்டவரா? இந்த நிகழச்சியெல்லாம் நடந்ததா? என்று மூக்கின் நுனிமேல் விரல்வைத்து வியக்கவைக்கும் வியப்பை ஏற்படுத்துவார்.
வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினை அறுப்பான். சிலர் யாரையும் சிறிதளவும்
பாராட்டமாட்டார்கள். ஆனால் தன்னை மட்டும் எப்போதும் எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இவரோ யாரும் பாராட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பே இன்றி, இருப்பவர் இறந்தவர் என்ற பாகுபாடின்றி அவர்கள் யார்? எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் என்ன? அவர்களது சாதனைகள் என்ன? என்பவற்றை எல்லாம் கட்டுரையாக
எழுதி கௌரவிப்பார்.
சாகித்திய அகாடமி விருது வென்றவர்களில் சம்பாதித்தவர்களும் உண்டு சம்பாதிக்காதவர்களும் உண்டு. சம்பாதிக்க முயன்று தோற்றுப் போனவர்களும் உண்டு. சம்பாதிக்க முயன்று கொண்டே இருப்பவர்களும்
உண்டு. இவருக்கு சொத்து சேர்க்கும் எண்ணமெல்லாம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பணம் பண்ணவேண்டும் என்று எண்ணுபவர்கள் தம் எழுத்தை மூலதானமாகக் கொண்டு அதற்குண்டான வழிமுறைகளையும் ஆட்களையும் நாடி அதில் கவனம் செலுத்துவார்கள். இவர் கிடைக்கும் நேரம் அனைத்தையும் எழுத்துக்காகவே பயன்படுத்துகிறார். மற்றநேரம் பொதுத்தொண்டு. மற்றபடி சாமி பின்னோ இல்லை ஆசாமி பின்னோ செல்வதில்லை.
பெரும்பாலானவர்கள் என்ன செய்கிறோம்? பணம் சேர்க்க வழி பண்ணுகிறோம். இல்லாவிட்டால் படுத்து தூங்குகிறோம். அல்லது ஒரு சாமி அல்லது ஆசாமியைத் தேர்ந்தெடுத்து பின் செல்கிறோம். என் பயன் பணி செய்து கிடப்பதே என்று ஏதாவது ஒரு பணியில் ஐக்கியமாகி விடுகிறோம். இவர் பூர்வீகம் தமிழ்நாடென்றாலும் தமக்கு வாழ்வளித்த மண்ணின்மீது அளவிலா
பற்றுக்கொண்டவர். அவரது எழுத்துக்களை நுகரும் போது வெளிப்படும் மண்வாசனை அம்மண்ணுக்கும் அம்மண்ணில் வாழும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் என்பதை புலப்படுத்திவிடும். அதற்காக கிளையில் இருந்து கொண்டு அடிமரத்தையும் வெட்டமாட்டார்.
இதனை இவர் பூர்வீக மண்ணில் வாழ்ந்தவர்களையும் போற்றிப் புகழ்வதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் பயணிக்கும் இவர் யார் எனத்தெரியுமா?
தமிழர் அனைவரும் விடுகதைக்கு விடை சொல்வதில் திறமைசாலிகள். இந்த விடுகதைக்கு விடை தெரந்தவர்கள் சொல்லலாம். இவ்வளவு துப்புக்கள் கொடுத்திருக்கும் புத்திசாலியே இன்னுமா எங்களால் அவரை யார் எனக் கண்டுபிடிக்க இயலாது? என்ற தங்களது எண்ண ஓட்டம் எனக்கு புரிகிறது.
இருந்தாலும் அவர் பலன் எதிர்பாராமல்
பயணிப்பதுபோல் என்னால் முடியாது. நான் சுயநலவாதி. நான் பட்டபாட்டிற்கு பலன் வேண்டும். அதனால் தப்பாக விடுகதைக்கு யாரையாவது விடையாகச் சொல்லி சம்பந்தப்பட்டவருக்கு பலன் கிடைக்காது போவதை தவிர்க்க அந்த விடையை நானே![]()
சொல்லி விடுகிறேன். அவர் யாருமல்ல ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தையும் முன்னின்று இயக்கிவரும் அன்பிற்குரிய மாமனிதரான எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள்தான். உங்கள் விடையும் சரியாகவே இருந்திருக்கும்.
நான் பலதளங்களில் பயணிப்பதில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு தளங்களில் பயணித்திருக்கிறேன். ஆதலால் இக்கட்டுரையை படிக்கும் அன்பர்கள் பல எழுத்து ஊடகங்களில் இக்கட்டுரை
வருமாறு முயற்சியினை செய்யுமாறு வேண்டுகிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()