நடுகைக்காரி!….தொடர் 21 ….. (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

![]()
![]()
பாறு தோய்ஞ்சு தலையை ஈரம் எடுத்து காயவிட்டதாலும் வயலில் அடிச்ச வெயிலும் வெக்கையும் அவளின்ரை தலைமயிரை நன்றாக உலர்த்திக் காயவிட்டிருந்தது.
காற்றும் மெலிதாக அடிச்சுக் கொண்டிருந்ததால் தலைமயிர்கள் அங்குமிங்குமாக அலைஞ்சு ஞானத்தின் முகத்திலும் பட்டுப்படர ஞானம் அதை ஒதுக்கிவிட்டபடியிருக்க யாரோ வரும் ஆளரவம் கேட்டு, அட்டாளையைவிட்டு வேளியே வந்து ஞானம் யாராகவிருக்கும் என்று பார்க்க காராளபிள்ளையின் மனைவி ஞானத்தின் தோட்டத்திற்கு அருகில் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் ஞானம், வெளியே வரவேண்டாம் என பாறுவுக்கு கையைக் காட்டினான்.
காராளபிள்ளையின் மனைவி கொஞ்ச நேரத்திற்கு முந்தி தனது தோட்டத்திற்குப் போய் வீட்டுக்குத் திரும்பிப் போகும் போதுதான் இப்ப ஞானத்தின் தோட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறாள்.
தனது தோட்டத்திற்குப் போன போது காராளபிள்ளையின் மனைவி கிணற்றில் ஒரு பொம்பிளைப் பிள்ளை தண்ணி அள்ளுவதைக் கண்டிருக்கிறாள் .அது யாராக இருக்கும் என்பதை நோண்டி எடுக்கவே இப்ப வந்து கொண்டிருக்கிறாள்.
புpத்தளை மூக்குப் பேணிகள் கழுவி அட்டாளைக்கு வெளியே ஒரு வாழை மடலில் கவிட்டுக் காயவிட்டிருப்பதைப் பார்த்தவாறு வந்தவள் வந்தவுடனேயே „மெய்யே ஞானம் உங்கடை குடும்பத்துக்கு ரோசம் வெட்கம் எதுவுமில்லையோ, எங்கடை ஆட்களின்ரை வீட்டுப் படிகளில் இருந்து சிரட்டையிலை குடிக்கிறவைக்கு![]()
உன்ரை கொப்பாவும் கொம்மாவும் விறாந்தையிலை கதிரையிலை இருத்தி தேத்தண்ணி குடுக்கிறதைப் பார்க்கேக்கிளை எங்கடை மானம் சீலையாலை போகுது.தோட்டத்துக்குள்ளையும் நாலுபேர் பார்க்கிற இடத்திலையும் அவைக்கு மூக்குப் பேணியிலை தேத்தண்ணி குடுக்கிறியள், உங்களுக்கு வெட்கம் மானம் ரோசம் சூடு சுரணை எதுவுமே இல்லையோ உங்கடை குடும்பத்தை எங்கடை சொந்தம் சொல்லவே நாக்கூசுது„ என்று காராளபிள்ளையின் மனைவி நக்கலும் நளினமுமாயச் சொல்ல.
அதைக் கேட்ட ஞானம் கோபத்தில் „நிற்பாட்டுங்கள் நாங்கள் எல்லாரையும் மனுசர் என்று மதிச்சு நடக்கிறனாங்கள்.
உங்களுக்கு விருப்பமில்லாட்டில் எங்களைக் கழிச்சு வையுங்கோ, இப்படிப்பட்ட குணமுள்ள நீங்களும் உங்களைப் போல உள்ளவையும் எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஞானம் கத்த, நீயும் உன்ரை கொப்பரும் கொம்மாவுந்தான் இப்படி,கொக்காமாரும் கொண்ணைமாரும் அவையவையின்ரை புருசன்மாரும் பெண்சாதிமாரும் இப்படி இல்லை’ என்று காராளபிள்ளையின்ரை மனைவி சொல்ல,’ அவையும் எங்களைப் போலத்தான் ஆனால் அவை வெளியிலை காட்டிக் கொள்ளுறதில்லை,அது சரி நீங்கள் எதுக்காக இஞ்சை வந்தனீங்கள் இதைச் சொல்லவோ வந்தனீங்கள்’என்று வாக்குவாதப்பட „ போற போக்கைப் பார்த்தால் நீ அவையிலை ஒருத்தியைத்தான் கட்டப் போறாய் போல,அப்போதை கிணத்தடியிலை தண்ணி அள்ளிக் கொண்டிருந்த பெட்டையைத்தான் கட்டுவாய் போல’ என்று சொல்ல, கோபத்தின் உச்சிக்கே போன ஞானம் வேகமாக அட்டாளைக்குள் நுழைஞ்சவன் பாறுவின் கையைப் பிடிச்சு வெளியே கூட்டிக் கொண்டு வந்து „இவாவைத்தான் நான் கட்டப் போறன், இவாதான் என்ரை பெண்சாதி, நீங்களும் உங்கடை ஆட்களும் எங்களைக் கழிச்சு வைச்சாலும் அதைப் பற்றி எனக்கு கவலையே இல்லை’என்று; சொல்ல காய்ஞ்சு பறக்கும் தலைமயிருடன் நின்ற பாறுவைக் கண்டதுடன்,பாறு கட்டிக் குளிச்ச கைலி துவாய் அட்டாளைச் சட்டத்தில் காய்வதைக் கண்டள் மெதுவாக நடந்து அட்டாளைக்குள் சாக்கு விரிச்சிருப்பதைக் கண்டும் காணாதவளாக ஞானத்தின் தோட்டத்தை விட்டுப் போகிறாள்.
காராளபிள்ளையின் மனைவிக்குப் முன்னால் „இவள்தான் என்ரை பெண்சாதி „ என்று ஞானம் சொன்னதைக் கேட்ட பாறு கண்கலங்கி நின்றாள்.
பாறுவும் ஞானமும் அட்டாளைக்குள் போய் இருக்க, பாறு அவனின் தோளில் சாய்ஞ்சு விக்கி விக்கி அழுகிறாள்.அவளின் முகத்தை கைகளால் உயர்த்தி „இப்ப எதுக்காக அழுறியள் அந்த மனுசி விசர்க் கதை கதைச்சுப் போட்டுப் போகுது அழாதையுங்கோ’ என்று சொல்ல, „நான் அழுறது எனக்கு நீங்கள் கிடைச்சிருக்கிறதை எண்ணித்தான், அவாவுக்கு முன்னாலை இவதான் என்ரை பெண்சாதி என்று துணிஞ்சு சொன்னதை நினைச்சு அழுறன், அவ கதைச்சதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தன், எங்களைப் புழு பூச்சிகளைவிடக் கேவலமாகப் பார்க்கினம் ஒரு உயிருள்ள மனுசராய் எங்களைப் பார்க்கினமே இல்லை’ என்று அவள்
கவலைப்பட „ அவை சொல்றதைச் சொல்லட்டும் அதுக்கெல்லாம் மனசைக்; குழப்ப வேண்டாம்,’ என்று அவளின் கண்களைத் துடைச்சுவிட்டவாறு தனது நெஞ்சோடு அவளை தலையை வைச்சு அணைச்சுக் கொண்டே „ இண்டைக்கு ஊருக்குள்ளை என்ன கதையை அந்த மனுசி பரப்பப் போகிறாளோ தெரியாது’ என்றவன்,’நான் நினைச்சன் நீங்கள் மனதாலும் திடகாத்திரமான ஆள் என்று இப்படிக் குழந்தைப் பிள்ளை மாதிரி அழுறியள் அழாதையுங்கோ, எப்பவும் அநியாயத்தைக் கண்டால் அழக்கூடாது கோபப்பட வேண்டும் „ என்ற ஞானம்’சரி மத்தியானச் சாப்பாட்டுக்கு நேரமாகுது நான் போய் லிங்கத்தின்ரை கடையிலை சாப்பாடு எடுத்துக் கொண்டு வாறன், பூரணியையும் தனத்தையும் வரச்சொல்லி கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள் „ என்று எழுந்த ஞானத்தின் கையை இழுத்து அவனின் கழுத்தில் கையை வைச்சு முகத்தை தனக்கு நேரே கொண்டு வந்தவள் தனது மூக்கை அவனின் வாய்க்குக் கிட்டக் கொண்டு போக’ ஓகோ அதுக்கா’ என்று ஞானம் கேட்க, „என்ன ஓகோ அதுக்கும் இல்லை இதுக்கும் இல்லை வாயிலை கள்ளு மணக்குதோ என்று பார்த்தனான்’ என்றவள் „சரி மணக்கேலை போங்கள், ஆனால் கடையிலை எட்ட நின்று கதையுங்கள் „ என்று சொல்ல, சரி என்று தலையாட்டிவிட்டு அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு லிங்கம் கபேக் கடைக்கு போவதற்காக் போய் கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் அட்டாளைக்குள்ளிருந்து வந்த பாறுவும் பூரணியையும் பாறுவையும் கூட்டிக் கொண்டு வருவதற்காக வெங்காயத் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
பாறு வெங்காயத் தோட்டத்திற்கு கிட்டப் போகவே தனம்’ தோட்ட முதலாளியம்மா வாறா,குளிச்சு தோய்ஞ்சு வாறவள் மாதிரி தலைமயிரை பறக்கவிட்டுக் கொண்டு வாறா’ என்று சொல்வது பாறுவின் காதிலும் விழ, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே அவர்களுக்கருகில் வந்தவள் „ எனக்கும் தனமக்கா சொன்னது கேட்டது,நான் தோட்ட முதலாளியம்மா இல்லை, என்ன என்னை நக்கலடிக்கிறியளோ „ என்று சொல்லியவள், „தனமக்கா பூரணியக்கா இரண்டு பேரும் வாங்கோ, இல்லாத புல்லை புடுங்காமல் வாங்கோ அவர் சாப்பாடு எடுக்கப் போயிட்டார்……
„உங்கள் இரண்டு பேரையும் வந்து அட்டாளைக்குள்ளை ஓய்வெடுக்கட்டாம் வாங்கோ…’ என்று பாறு சொல்ல,’ ஓம் தோட்ட முதலாளியம்மா, நீங்கள் சொன்னால் நாங்கள் கேட்காமல் விடக்கூடாது வாறம் „ என்று பூரணி சொல்லிக் கொண்டே , பாறுவுக்கருகில் வந்து „பாறு நாங்கள் பகிடிக்கு கதைக்கிறம் கோபிக்காதையடி’ என்று சொல்ல „தெரியுமக்கா நீங்கள் இரண்டு பேரும் பகிடிக்குத்தான் கதைக்கிறியள் என்று நானும் பகிடிக்குத்தான் கோபப்படுகிற மாதிரிச் சொன்னனான்’ என்ற பாறு சொல்லிக் கொண்டே தனத்தையும் பூரணியையும் கூட்டிக் கொண்டு அட்டாளையை நோக்கி போய்க் கொண்டிருக்கையில் பாறுவை உற்றுப் பார்த்த தனம், அவளின் தலைமயிர்கள் பறந்து கொண்டிருப்பதையும் தலைமயிர்களிலிருந்தும் அவள் உடம்பிலிருந்தும் கோம்பா சவர்க்காரத்தின் சுகந்தமான வாசனை வந்து கொண்டிருப்பதையும் சுவாசத்தின் மூலம் உணர்ந்த தனம் „ பாறு குளிச்சியா இல்லாட்டி தோய்ஞ்சனியா, கோம்பா சவர்க்காரத்தின் வாசம் அந்தமாதிரி வருது’ என்று கேட்ட,’நான் தோய்ஞ்சனான்’ என்று பாறு சொல்ல, „என்னடி திடீரென்று தோய்ச்சல், வந்த இடத்திலை அதுவும் தோட்டத்திலை தோய்ச்சல்’ என்று தனம் பாறுவின் வாயைக் கிழறவென்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க அட்டாளையும் வந்துவிடுகிறது
தனமும் பூரணியும் அட்டாளையைச் சுற்றி கிணத்தடிக்கு முகம் கைகால் கழுவப் போகிறார்கள்.
கிணற்றில் தண்ணியை அள்ளிய தனம் பக்கத்தில் கிடந்த வாளிக்குள் ஊத்திப் போட்டு முகம் கழுவப் போனவள் கிணத்தோடு இருந்த வாய்க்கால் முகரிக் கட்டில் சவர்க்காரப் பெட்டியின் மூடியில் வைச்சிருந்த கோம்பாச் சவர்க்காரத்தைக் கண்டதும்’பாறு சவர்க்காரத்தை எடுத்து முகம் கழுவட்டா’என்று கேட்க, பாறு „இல்லை ..இல்லை …எடுக்க வேண்டாம் அது அவருடையதும் அது என்னுடையதும், அவர் பாவிக்கிற சவர்க்காரத்தை நான் மட்டுந்தான் பாவிக்கலாம்’ என்றவள், அட்டாளைக்குள்ளால், தனமும் பூரணியும் மறைச்சு சவர்க்காரத்தை எடுக்கினமோ என்று எட்டிப் பார்க்க’ அங்கை பார் நாங்கள் சவர்க்காரத்தை எடுக்கிறமோ என்று ஐமிச்சத்திலை எட்டிப் பார்க்கிறாள்,இவள் இப்பவே இப்படியென்றால் கல்யாணம் முடிச்சாப் பிறகு அது ஆர் தனம் அது ஆர் பூரணி என்று கேட்டாலும் கேட்பாள். எனக்கு அவையைத் தெரியாதே’ என்று சொன்னாலும் சொல்வாள் என்று
பாறுவின் காதுபட வேண்டுமென்றே சத்தமாக பூரணி சொல்ல’ என்ன இருந்தாலும் அவளின்ரை அவர் அங்கை இங்கை நல்லாய்ப் போட்டு உரைஞ்சிக் குளிச்ச சவர்க்காரத்தை இவளும் அங்கை இங்கை போட்டு உரைஞ்சிக் குளிச்சவள்;,அங்கை இங்கை எல்லா இடத்திலையிருந்தும் வாசம் வரவேண்டும் என்று „ என்று தனமும் பூரணியும் சொல்வதை பாறு புன்சிரிப்படன் இரசித்தவாறு எட்டி கேத்தில் கிடந்த அடுப்பில் விறகுகளைத் தள்ளி ஊதி எரியவிட்டிட்டு அட்டாளைக் கப்போடை சாய்ஞ்சு இருக்க தனமும் பூரணியும் அட்டாளைக்குள் வந்து இருக்கிறார்கள்.
விட்ட இடத்தியலிருந்து தனம் „ அது சரி நீ ஏன் தோய்ஞ்சனி „ என்று கேட்ட தனம் ஒரு மூலையில் கடகத்தோடு கிடந்த வெறுமனையான போத்தலைப் பார்க்க, அதிலிருந்து சாதுவான கள்ளு மணம் வர „ கள்ளுக் கொண்டு வந்து குடுத்தனியே’ என்று கேட்க, பாறு எந்தப் பதிலுமே சொல்லாமல் குனிந்து சாக்கில் விரலால் ஞானம் பாறு என்று எழுதிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால்,பூரணியும் தனமும் விடுவதாயில்லை.’அவர் குடிச்சவரே அது சரி உனக்கேன் கண் சிவந்திருக்கு,காலமை பார்த்தால் சொண்டுகள் இரண்டும் சிவந்திருந்தது,இப்ப கண்ணுகள் இரண்டும் சிவந்திருக்கு,பாறு கள்ளு குடிச்ச உசாரிலை ஏதாவது நடந்ததாடி, நாங்களும் கல்யாணம் முடிச்சு பிள்ளை குட்டியோடை இருக்கிறவை, எங்கடை புருசன்மாரும் கள்ளுக் குடிச்சால் அந்த மயக்கத்திலை எப்பிடி அதுக்கு நடக்கிறவையெண்டு எங்களுக்குததான்; தெரியும், எதுக்கும் கவனமாயிரடி உன்ரை ஆள் வேறை நாங்கள் வேறை எதுக்கும் ஒரு முடிவு கட்டாமல் மயங்கிப் போடாதை குழம்பாமல் இரு.
இரண்டு பேருக்கும் திமிற வயசு, நீங்கள் இரண்டு பேரும் சம்மாயிருந்தாலும் வயசு விடாது,உன்ரை அக்கறையிலை சொல்றம், கொம்மாவும் முந்தி மாதிரி இல்லை உன்னை நினைச்சு சரியாப் பயப்படுறா, கவனம் பாறு’ என்று தனம் சொல்லி முடிக்க’ தனமக்கா நீங்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் நடக்கேலை, நானும் அவரும் புடலங்கொட்டை ஊன்றினனாங்கள், அங்கை அந்தத் துண்டுக் காணிக்குள்ளை…
அது வெறுங் காணி,வனாந்தர வெயில் வேர்த்து உடம்பு மணக்கத் தொடங்கிச்சுது அதுதான் தோய்ஞ்சனான்’ என்று சொல்லி முடிக்க,
„எதைக் கட்டிக் கொண்டு தோய்ஞ்சனி „என்ற பூரணி கேட்க „ அவர் ஒரு கைலி தந்தவர் அதைக் கட்டிக் கொண்டு தோய்ஞ்சனான், மேலை பாருங்கள் பரணிலையிருந்துதான் எடுத்துத் தந்தவர் அங்கை சேர்ட்டு கைலி துவாய் சவர்க்காரம் எல்லாம் இருக்குதக்கா’ என்று பாறு சொல்லி முடிக்க முந்தி’ அது சரி கண் இரண்டும் ஏன் சிவந்திருக்கு’ என்று பூரணி கேட்க’ உங்களுக்கு ஐமிச்சம் இன்னும் போகேலை அதுவும் பகலிலை…’ என்று ஒரு புன்சிரிப்புச் சிரித்தவள்’ இஞ்சை ஒரு பிரச்சினை நடந்தது. ஆரோ ஒரு பொம்பிளை இஞ்சை வந்து எங்கடை படியிலிருக்கிறவைக்கு அவற்றை குடும்பம் மதிப்புக் குடுக்கினமாம், வித்தியாசமில்லாமல் பித்தளை மூக்குப் பேணியிலை தேத்தண்ணி குடுக்கிறவை „ என்று சொல்ல அவர் அந்தப் பொம்பிளையோடை கோபத்தோடு வாக்கவாதப்பட அதை இதிலையிருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கோபமும் அழுகையும் வந்துவிட்டுது,அதுதான் கண் இரண்டும் சிவந்திருக்கு என்றவள் தொடர்ந்து …
அவர் கோபத்திலை என்னை வெளியிலை கூட்டிக் கொண்டு வந்து அந்தப் பொம்பிளைக்கு முன்னாலை என்னைக் காட்டி நிற்க வைச்சு என்னை அணைச்சபடி இவாதை;தான் கட்டப் போறன்’ என்று சொன்னார்’ நான் எதிர்பார்க்கவேயில்லை, அவர் இந்த ஊர் உலகம் எதிர்த்தாலும் அவரை யார் ஒதுக்கி வைச்சாலும் அவர் என்னைக் கைவிடவே மாட்டார்’ என்ற சொல்லி முடிச்சவள் ,கப்போடு சாயஞ்சு அழத் தொடங்கினாள்.
அதைப் பார்த்த தனமும் பூரணியும் அவளருகில் சென்று கண்ணீரைத் துடைச்சுக் கொண்டே „ பாறு அழாதை புளியடி வைரவர் உன்னைக் கைவிட மாட்டார் „ என்று ஆறுதல்படுத்தினர்
(தொடரும்)
![]()