இலங்கை

கட்டுநாயக்கவில் சிக்கிய 22 தேரர்கள்..!; அடுத்தடுத்து அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 112 கிலோகிராம் “குஷ்” மற்றும் ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பிய போது 22தேரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்கள், நேற்று சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களில் 19 பேர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்புரலிய பகுதியிலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த மூன்று தேரர்கள் மாத்திரம் இதற்கு முன்னர் தாய்லாந்துக்குச் சென்றுள்ளதாகவும், அப்போது அவர்களுடன் இணைந்து 12 தேரர்கள் அந்த பயணத்தில் பங்கேற்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நேரத்தில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருட்கள் அத்துருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் மேலும் 40 தேரர்களை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த வலையமைப்பை இலங்கையிலிருந்து இயக்கியதாகக் கூறப்படும் ‘அமிதாந்த’ எனும் தேரர், கம்பஹா பகுதியிலுள்ள விகாரையொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஏனைய தேரர்கள் விமான நிலையத்தில் சிக்கியதைக் கண்டு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, கைது செய்யப்படும் போதும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கடத்தல் தொழிலை இலங்கையிலுள்ள வர்த்தகர்கள் போன்று தோற்றமளிக்கும் இருவர் பின்னணியிலிருந்து வழிநடத்துவதும், அவர்களில் ஒருவர் ‘ஹாஜி’ என அழைக்கப்படுவதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *