பலதும் பத்தும்

விமான நிலையத்தில் ‘ரோபோ’ ஊழியர்கள்; ஜப்பான் ஏர்லைன்ஸின் அசத்தல் முயற்சி!

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) நிறுவனம், டோக்கியோவின் ஹனேடா (Haneda) விமான நிலையத்தில் வரும் மே மாதம் முதல் மனித உருவிலான (Humanoid) ரோபோக்களை தரைக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் வேளையில், அங்கு பணிபுரியும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

குறிப்பாக, சுமார் 4,000 தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களைக் கொண்டுள்ள JAL நிறுவனம், அவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் இந்த இரண்டு ஆண்டு கால சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.

சீனத் தயாரிப்பான இந்த ரோபோக்கள் ஆரம்பத்தில் கனமான சரக்கு பெட்டிகளை (Cargo containers) ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

இந்த சோதனை வெற்றி பெற்றால், விமானத்தின் உட்புறத்தைச் சுத்தம் செய்யவும், தரைக்கட்டுப்பாட்டு இயந்திரங்களை இயக்கவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படும்.

“விமான நிலையங்கள் பார்ப்பதற்கு நவீனமாகத் தெரிந்தாலும், அதன் பின்புலப் பணிகள் இன்னும் மனித உழைப்பையே நம்பியுள்ளன,” என்று இந்தத் திட்டத்தின் பங்குதாரரான GMO AI & Robotics நிறுவனத்தின் தலைவர் டோமோஹிரோ உச்சிடா தெரிவித்துள்ளார்.

கடினமான உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் ரோபோக்களைப் பயன்படுத்துவது ஊழியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றாலும், “பாதுகாப்பு மேலாண்மை” போன்ற மிக முக்கியப் பணிகளை மனிதர்களால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும் JAL நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே ஜப்பானின் சில விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் விற்பனைப் பிரிவுகளில் ரோபோக்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இப்போது சரக்குக் கையாளும் பிரிவிலும் அவை கால்பதிக்கத் தொடங்கியுள்ளன.

பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், ஜப்பானின் இந்த ‘ரோபோ’ புரட்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *