கவிதைகள்

“அந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
     மெல்பேண்    ….. அவுஸ்திரேலியா 

ஓலைக் குடிசை ஒழுகும் வீடு
கூழே உணவு கீழே படுக்கை
அரிக்கன் லாம்பு புகையும் அடுப்பு
அம்மா சமையல் இன்னும் மனத்தில்
கதவும் இல்லை பூட்டும் இல்லை
களவு கொடுக்க எதுவும் இல்லை
ஓலைப் பாயும் கிழிந்த சீலையும்
ஓட்டை வீட்டின் உயர்ந்த சொத்தே

அறைகள் இல்லை அலங்காரம் இல்லை
அடுப்பின் புகையே வீட்டை ஆளும்
அப்பா திண்ணையில் எப்பவும் இருப்பார்

அம்மா சமையலில் மூழ்கியே நிற்பார்
 
தென்னை மரங்கள் சுற்றி இருந்தன
தேங்காய் வாங்கத் தேவையே இல்லை
இளனி விற்போம் தேங்காய் விற்போம்
வருவாய் தந்தன தென்னை மரங்கள் 
 
பத்து பசுக்கள் பத்து ஆடுகள்
பாலைத் தந்து எம்மைக் காத்தன
தோட்டம் விளையும் பயிர்கள் எமக்குத் 
துணையாய் இருந்து வருவாய் தந்தன 
 
பழைய சோறு பாயிற் படுக்கை
தோட்டக் காய்கறி சுவைமிகு பாலும்
நினைக்க நினைக்க நெஞ்சம் மகிழுது
அந்த வாழ்க்கை ஆனந்தப் பரவசம்
 
வீட்டின் அருகில் வில்வமும் அரசும்
விருட்சம் போல வளர்ந்தே இருந்தன
மாரி வந்தால் நிரம்பும் குழமும்
மரங்கள் அருகில் இருந்ததும் அழகே
 
தண்ணி நிரம்பினால் தவளைகள் நிறையும்
தவளைகள் கச்சேரி இரவெலாம் இருக்கும்
கச்சேரி எங்களைக் கஷ்டப் படுத்தா
காசே இல்லாது கேட்டிடச் செய்யும்
 
காலையில் கத்திய தவளைகள் பலதும்
அடங்கி ஒடுங்கிக் குழத்தில் கிடக்கும்
அடங்காக் கத்திய தவளைகள் செத்துக்
கரையில் கிடக்கும் காகங்கள் சுவைக்கும்
 
மாரியும் அழகு கோடையும் அழகும்
மாரி அம்மனின் திருவிழா அழகு
சித்திரைக் கஞ்சி எத்தனை மகிழ்ச்சி
இப்பவும் நினைக்கிறேன் ஏக்கமே வருகுது
தேவைகள் குறைவு திருப்தியே மிகுதி
கிடைத்தவை அனைத்தும் பெரு மகிழ்வாகும்
இப்போ வாழ்வில் எத்தனை எத்தனை
ஆனால் மனமோ அங்கே போகுது
 
திருப்தி என்பது வசதியில் இல்லை
மனத்தின் விருப்பமே திருப்தியே ஆகும்
அந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன்
அனைத்தும் அகத்தில் அமர்தே இருக்குது  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *