இலங்கை

வடபகுதி மீனவர் பிரச்சினை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் விஜய்யுடன் பேசுவேன் – திருமாவளவன் உறுதி

இலங்கையில் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் கலந்துரையாடுவதற்கு அவசியமான ஏற்பாடுகளை செய்து தருவதாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொல்.திருமாவளன் உறுதியளித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (21) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை வடக்கு மாகாண மீனவ சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்துரைத்த வடக்கு மாகாண மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாவது,

தமிழக மீனவர்களின் தொடர் அத்துமீறல்களால் எமது மக்கள் கொதிப்படைந்து போயிருக்கின்றனர். அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் முன்னர் இந்தியா எமக்கு வேண்டாம் என்றும், சீனாவையும் அமெரிக்காவையும் முன்னிறுத்தப் போகின்றோம் என்றும் பெரும் போராட்டம் நடாத்தப்பட்டது. ஏனெனில் இந்தியாவின் இழுவை மடிப் படகில் ஆரம்பித்து, இன்று எமது மக்கள் இந்தியாவையே வெறுத்து, இந்தியத் தூதரகமே இங்கு இருக்கக்கூடாது என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவற்றுக்கு மத்தியிலேயே வடக்கு மாகாணத்துக்குள் சீன பிரவேசித்துவிட்டது. சீனாவின் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளன. அட்டைப்பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டைப்பண்ணை வேண்டாம் என்று நாங்கள் கொழும்பிலே வழக்குத்தாக்கல் செய்திருக்கிறோம். இவையனைத்தையும் நாங்கள் இந்தியாவையும் தமிழக உறவுகளையும் நம்பியே செய்தோம். அவர்களை நம்பியே வடக்கிற்குள் யாரையும் காலூன்ற விடாமல், எம்முடைய சொந்தப் பணத்தை செலவிட்டு, கொழும்புக்குச் சென்று வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறோம். எனவே உங்களுடைய மனசாட்சிக்கு அமைவாக எமக்கு எத்தகைய தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர்.

அவற்றை செவிமடுத்த திருமாவளவன், இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும், இங்கு இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முதலமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது முதலமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவதாகவும் உறுதியளித்தார்.

அதேபோன்று ‘தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றி நீங்கள் குறிப்பிடும்போது தெளிவடைந்துள்ளேன். இதுவரை காலமும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் தாக்குவதாகவுமே தமிழ்நாட்டு மீனவர்கள் கூறியதை அறிந்துள்ளேன்.

கடந்த காலங்களில் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் மேற்கொண்ட சந்திப்புக்கள் மற்றும் துறைச்சார்ந்த அமைச்சுக்களுடனான சந்திப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியுள்ளார்கள். அத்தகைய சந்திப்புக்களைத் தொடர்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடி ஏற்பாடு மேற்கொள்வேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *