ஜனாதிபதி கொலைச் சதி வதந்தி; கிங்ஸ்பெரி ஹோட்டலிடம் 10 கோடி ரூபா கோரும் சரத்!; வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைப்பு

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு தான் வந்தபோது எடுக்கப்பட்ட பாதுகாப்பு கேமரா (சீசீரிவி) காட்சிகளை திரிபுப்படுத்தி, ‘ஜனாதிபதி கொலை சதி’ என பொய்யான தலையங்களை இட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர ஹோட்டல் நிர்வாகத்திற்கு தனது சட்டத்தரணிகள் ஊடாக 10 கோடி ரூபா கோரி முன்னறிவித்தல் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த ஆவணத்தில், சரத் வீரசேகர கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் குறித்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளதாகவும், ஹோட்டல் வளாகத்தின் பிரத்யேகப் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சீசீரிவி அமைப்பில் பதிவான காட்சிகள், ஹோட்டல் நிர்வாகத்தால் சில சமூக ஊடக ஆர்வலர்களுடன் இணைந்து வேண்டுமென்றே திரிபுப்படுத்தி வெளியே வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில், சரத் வீரசேகர மற்றும் ஒரு பௌத்த துறவி ஒரே நேரத்தில் ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைவதைக் காட்டி, அவர்கள் இருவரும் ஒன்றாக அல்லது ஒரே நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்ததாக முற்றிலும் தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சிதைக்கப்பட்ட காட்சிகள் ‘ஜனாதிபதி கொலை சதி’ என்ற தலைப்பின் கீழ் பரப்பப்பட்டுள்ளதாகவும், அதில் இருக்கும் சரத் வீரசேகரவின் செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரன என தவறாகச் சித்தரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹோட்டலின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டிய இத்தகைய இரகசியக் காட்சிகள் எவ்வித அனுமதியும் இன்றி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படுவது ஹோட்டலின் தனியுரிமைக் கொள்கையை மீறுவதாகும் என்றும், இதன் மூலம் தமது கட்சிக்காரரின் தனியுரிமைக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு, அவரை இணையவழியில் கடுமையான அவதூறுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வேண்டுமென்றே இத்தகைய தவறான அறிக்கைகள் மற்றும் காட்சிகளைத் தொடர்புகொள்வது 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் தீவிரமான குற்றமாகும் என்பதையும் ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
![]()