கட்டுரைகள்

தமிழரின் எதிர்காலமும் தமிழ் தேசியமும்!…. -சங்கர சுப்பிரமணியன்.

தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கென்று ஒரு நாடில்லை. உலகிலேயே தமிழருக்கென்று ஒரு மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. இதை நினைத்து ஒரேயடியாக பெருமை அடைந்து விடவும் முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மொழி பேசுபவருக்கும் அவரவர்களுக்கு தனியாக மாநிலம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மாநிலத்தின் பெயரில் தமிழ் இருப்பதால் ஒரு அற்ப மகிழ்ச்சி அவ்வளவே. அதுகூட கூடிய சீக்கிரம் பறிபோகப் போகிறது. அதற்கும் காரணம் ஒற்றுமையின்மையும் தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற சுயநலமும் சாதி என்ற சனியனும்தான் முக்கிய காரணம்.

இதற்கெல்லாம் தமிழர் மண்ணை தமிழர் ஆளாததுதான் காரணம் என்பது ஒருபுறம் இருக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின் தமிழ்நாட்டை ஒருவருக்கு இருவராக தமிழர் ஆள்கிறார்கள். வேற்றுமொழிக் காரரான ஜெயலலிதாவைவிட இவர்களது ஆட்சியில் தமிழர் என்ன பயனடைந்தார்கள்? எந்த அளவுக்கு தலைநிமிர்ந்தார்கள்? ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பதின்மூன்று தமிழரை சுட்டுக் கொன்றார்கள். விடாப்பிடியாக நீட் தேர்வை அனுமதிக்காதிருந்தார் செல்வி ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நீட்டை உள்ளே விட்டுவிட்டார்கள்.

இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்தபடியாக சுயமரியாதையை பற்றிப் பார்ப்போம்.
ஜெயலலிதா இருந்தவரை தொன்னூறு பாகை முன்பக்கம் வளைந்தவர்கள் அவரது மறைவுக்குப்பின் சுயநலத்துக்காக தரையிலேயே தவழ்ந்தார்கள். சுயநலத்துக்காக இவ்வளவு பண்ணுபவர்கள் மொழிக்காகவும் இனத்துக்காகவும் என்ன சாதித்து விடப்போகிறார்கள்?

உலகில் எங்காவது தமிழர் தம்இனத்தை
தம் நாட்டுக்குள்ளும் நாடு கடந்தும் தமது சுயநலத்துக்காக இழிவு படுத்தாமலோ காட்டிக் கொடுக்காமலோ இருக்கிறார்களா? உண்மையில் நெஞ்சில் கைவைத்து எவராலும் இல்லை என்று சொல்லமுடியாது. அவரவர்கள் தம் புகழை எவ்வாறு உயர்த்தலாம் தம்மைப்பற்றி எல்லோரும் எப்பவும் பேசிக்கொண்டிருக்க என்ன வழிமுறைகளை எல்லாம் செய்யலாம் என்றுதான் அல்லும் பகலும் நினைத்து பாடுபடுகிறார்கள்.

இவர்கள் தமக்காக செலவுசெய்யும் நேரத்தில் ஒரு சிறிதளவு கூட தமிழர் பற்றியோ தமிழர் நலம் பற்றியோ தமிழர் எதிர்கொண்டுவரும் பிரச்சினை பற்றியோ சிறிதளவும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நாங்களும் தமிழர் என்று மார்தட்டிக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் பாரதி “வாய்ச்சொல்லில் வீரரடி” என்றாரோ?

தமிழ்நாடு இப்போது தலைகுனிந்து நிற்கிறது. தமிழரான பெருந்தலைவர் காமராஜ் இருந்தபோது மத்திய அரசில் காய்களை நகர்த்தும் வல்லமையுடன் இருந்தார். மறைந்த முதல்வர் வேற்றுமொழிக்காரராய் இருந்தாலும் அவரை நாட்டின் பிரதமர் மோடியே வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அமைச்சர்கள் பட்டாளம் விமான நிலையத்துக்கே சென்று வரிசைகட்டி வளைந்து நின்றது.

ஆகையால் தமிழர் நிலத்தை தமிழர் ஆண்டாலும் அவர்கள் பெருந்தலைவர் காமராஜ் அறிஞர் அண்ணா போன்று இருந்தால்தான் தமிழரின் நலமும் தமிழரின் உரிமையும் உடமைகளும் பாதுகாக்கப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் எவர் ஆண்டாலும் தமிழர் வாழ்வு குழிதோண்டி புதைக்கப்படும். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஆண்டிருந்தபோதும் வேற்றுமொழிக்காரர்கள் முதல்வராக இருந்தபோதும் தொழில் கட்டுமானத்திலும் முன்னேற்றத்திலும் மற்ற மாநிலங்களை தமிழ்நாடு எப்போதே முன்னேறி விட்டது.

ஆனால் இவர்கள் கைகள் கறைபடியாதிருந்து கோடிக்கணக்காக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்காமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். ஒவ்வொருவரிடமும் கொள்ளயடித்து கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கும் பணம் அத்தனையும் முறைப்படி தமிழ்நாட்டுக்கு செலவு செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னும் மேம்பட்டிருக்கும். அடுத்து தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த முன்னேற்றம் வரும் என்ற கனவுடன் இருப்போம்.

இந்தியாவின் ஒரு மாநிலம்தான் பீஹார். அந்த மாநிலத்தை மண்ணின் மைந்தர்கள்தான் ஆண்டு வருகிறார்கள். இந்தியாவில் இன்னும் முன்னேற்றம் அடையாத மாநிலமாகத்தான் பீஹார் இன்றும் இருக்கிறது. ஆதலால் யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்?

தமிழர் என்றால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் நல்லதுதான் செய்வார்கள் என்பதை உறுதிபடச் சொல்ல இயலுமா? ஒரு காலத்தில் தமிழுக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஓங்கிக் குரல்கொடுத்த மருத்துவர் ராமதாஸின் இன்றைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டையே மூன்றாகக் கூறுபோட துடிக்கிறார். அப்படி கூறுபோட்டால் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம் எளிதாக ஈடேறிவிடும். தமிழ்நாட்டின் பெயரை முற்றாக அழித்து தெட்சின ராஜ்யா, உத்தர ராஜ்யா, மற்றும் கொங்கு ராஜ்யா என்று மாற்றி தமிழரின் நாடு என்ற அடையாளத்தையே மாற்றிவிடுவார்கள்.

அதன்பின் என்ன நடக்கும்? தமிழினம் தமிழ்மொழி எல்லாம் மறந்து சேர சோழ பாண்டியர்கள்போல பிரிந்த மாநிலங்கள் மூன்றும் ஒன்றையொன்று அடித்துக் கொள்ளும். தென் தமிழ்நாட்டில் நாட்டில் நடக்கும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடைகொண்டு வருவார்கள். பகைமை பாராட்டும் மற்ற பிரிந்த தமிழ் மாநிலங்கள் இதற்கு முன் கொடுத்த ஆதரவைக் கொடுப்பார்களா? இந்த பிரிவுனையை ஊதி ஊதி பெருக்கவைத்து நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தி மொழியுணர்வையும் இன உணர்வையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழித்து விடுவார்கள்.இதற்கு வேறு யாருமல்ல தமிழரே துணைபோவார்கள்.

இச்சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடவே மாட்டோம் என்றவர்கள் அதிமுகாவுடன் சேர்ந்து ஆக்ஸிஜனுக்காக
திறக்கலாம் என்ற மென்மையான போக்கை கையாண்டவர்கள் ஆட்சியமைத்தால் என்ன செய்வார்கள் என்பது யாருக்கு தெரியும்? சரி, தமிழ்நாட்டில் தமிழர்தான் ஆளவேண்டும் என்றால் திமுகாவை மீண்டும் தேர்ந்தெடுத்தது இந்த தமிழர்தானே. அல்லது அண்டை மாநிலத்திலிருந்து வந்து வாக்களித்து தேர்ந்தெடுத்தார்களா?

இந்த திமுக தான் இந்திதிணிப்புக்கு எதிராக போராடியது. சென்னை மாநிலமாக இருந்ததை தமிழ்நாடு என்ற பெயர்மாற்றம் செய்தனர். இருமொழி கொள்கைக்கு தொடர்ந்து குரல்கொடுத்தனர். சாதியும் தீண்டாமையும் ஓரளவுக்காவது ஒழிய துணைநின்றனர். இனி இவர்கள் எப்படி நடப்பார்கள் எனப்பார்க்க வேண்டும். தமிழினத்துக்கும் தமிழருக்கும் நல்லது செய்யத் தவறினால் அவர்களை தீமை செய்யவிடாது கண்காணித்து தடுக்கவேண்டும்.

அதவரை தமிழர் நிலத்தை தமிழர்தான்  ஆளவேண்டும் என்ற நாம்தமிழர்  கட்சி ஒட்டுமொத்த தமிழினமும் அவர்களுக்கு வாக்களிக்கும்படி மக்களை தயார் படுத்த வேண்டும். ஆரம்ப காலத்தில் திமுக ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை. பத்து ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்தான் மற்ற கட்சிகளின் துணைகொண்டு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அப்போது இன்றிருந்ததுபோல் சமூக ஊடகங்களோ மக்களிடம் விழிப்புணர்வோ இருந்திருக்கவில்லை. அந்த சூழலில் எவ்வாறு போராடியிருப்பார்கள்?

எனவே தமிழ் தேசியம் மலரவேண்டும் என்றால் தமிழர் அனைவரும் தமிழ்தேசியத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். அதைவிட்டு வேற்றுமொழிக்காரர்கள் ஆள்கிறார்கள் என்று அவர்களை மட்டும் குறை சொன்னால் எப்படி? இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களை மாற்றி திமுகவுக்கு வாக்களிக்க வைக்கவில்லையா?

இவ்வாறு தமிழரின் நிலைமை தத்தளித்துக் கொண்டிருக்க நமக்குள்ளே நாம் சாதி, மதம், நாடு என்று பிளவுபட்டு ஒற்றுமையை சிதைத்து நமக்கு நாமே குழிதோண்டினால் நம் இனத்தை அழிக்க நினைப்பவனுக்கு வேலை எளிதில் முடிந்துவிடும். நாம் தெரிந்தோ தெரியாமலோ வெட்டிக் கொண்டிருக்கும் குழியில் நம்மைத் தள்ளி மூடிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இனிமேலாவது சாதி, மதம், நாடு கடந்து தமிழினம் என்று நினைப்போமா? ஒற்றுமையாய் இணைந்து நம் இனத்துக்கு வரவிருக்கும் அழிவிலிருந்து நம்மை காப்போமா? அல்லது அவரவர் வழி அவரவர்க்கு என்று நமக்கு நல்லது எது என்பதை மட்டும் அறிந்து அவ்வழி செல்வோமா? இதற்கு
காலமும் ஒட்டுமொத்த தமிழினமும்தான்  பதில் சொல்ல வேண்டும். தனிப்பட்ட எந்த ஒருவராலும் பதில் சொல்லமுடியாது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button