நடுகைக்காரி!….தொடர் 16 ….. (குறுநாவல்)…. ஏலையா க.முருகதாசன்.

![]()
![]()
அறைக்குள் போன தாய் அங்கை கள் வாசனை வரவே,அடுப்படிக்குள் வைச்சுத்தானே கணவர் குடிப்பார், இன்று என்ன அறைக்குள்ளேயே கள்ளு வாசனை வருகுதே அறைக்குள் வைச்சுக் குடிக்கத் தொடங்கிவிட்டாரோ இது என்ன புதுப்பழக்கம் என்று யோசிச்ச ஞானத்தின் தாய் அடுப்படிக்குள் போய் கணவருக்கு கள்ளை வாங்கி வைக்கும் இடத்தில் பார்க்கிறாள்,
அரைவாசி குடிச்சபடி போத்தலில் கள் இருப்பதைக் கண்டதும் முற்றத்தில் வந்து நின்று வெற்றிலைத் தோட்டத்தை பார்த்த போது கணவர் சரிந்த வெற்றிலைக் கொடிகளை முள்முருக்கையோடு சேர்த்து கட்டுவதைக் கண்டதும் ஒருவேளை அப்படி இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெற்றிலைத் தோட்டத்திலிருந்து வந்தவர் மனைவி முற்றத்தில் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் „ ஏன் இதிலை நின்று யோசிச்சுக் கொண்டு நிக்கிறியள் முகமே சரியில்லையே என்ன விசயம் என்று கேட்க,கள்ளுமணம் வீட்டுக்குள் இருந்து வருவதைச் சந்தேகத்துடன் சொல்ல எதுவுமே பேசாது அறைக்குள் நுழைந்தவர் போன வேகத்திலேயே திரும்பி வந்து „அப்படி ஒன்றும் மணக்கவில்லை’ என்று சொல்கிறார்.
இரவுச் சாப்பாடடு வேளை சுப்பையா ஒருமுறை மகனின் கண்களை உற்றுப் பார்க்காத மாதிரி உற்றுப் பார்த்துவிட்டு „ நாளைக்கு எத்தனை பேர் புல்லுப் பிடுங்க வருகினம்’ என்று கேட்க, மூன்று பேர் வருவினம்’ அவைக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றவுடன் லிங்கண்ணையின்ரை கடையிலையிருந்து வாங்கிக் கொடுக்கிறன் „ என்றவன், தேத்தண்ணிக்கு கேத்தல் தேயிலை சீனி எல்லாத்தையும் தோட்டத்தடிக்கு கொண்டு போய் அங்கேயே அடுப்பு மூட்டி வைச்சு போட்டுக் கொடுக்கப் போறன், தேத்தண்ணி போட சருவச்சட்டியும் அவை குடிக்க எங்கடை மூக்குப் பேணிகளையும் கொண்டு போகப் போறன், சீனயம்மானின் கடையில் வடை வாங்கிக் குடுக்கலாம் என்றிருக்கிறன் „ என்று சொன்னதும் „ சரி பார்த்துச் செய்’ என்று தகப்பன் சொல்கிறார்.
நடுகைக்காரிகளுக்கு சிரட்டையிலை தேத்தண்ணி தண்ணி குடுத்த மிலேச்சத்தனமான காலத்தில் அவர்களுக்கு வீட்டிலிருந்து பித்தளை மூக்குப் பேணிகளைக் கொண்டு போய் அதில் தேத்தண்ணி குடுத்தவர் ஞானத்தின் தாயும் தகப்பனும்.
சுப்பையா குடும்பத்தில் உள்ள அனைவருமே நூல்களை சஞ்சிகைகளை வாசிப்பவர்களே.அந்த வாசிப்பு அவர்களுக்குச் சமூகத்தில் இருக்கும் மனிதர்களை ஏழை பணக்காரன் என்றோ, பிரிவுகள் ரீதியாக வேறுபடுத்திப் பார்த்தல்களையோ நினைக்க வைக்கவில்லை. நூல்களில் காணப்படும் மனிதர்கள் அனைவருமே சமமே என்ற தத்தவம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
அதனால் அவர்களின் தோட்டத்தில் நிலத்தைக் கொத்துவதற்கென்றும் நடுகைக்கென்றும் புல்லுப்பிடுங்கவென்று வருபவர்களை சமனாகப் பார்க்க வைச்சது.அவர்கள் நடுகைக்காரிகளுக்கு தமது வீட்டுப் பேணிகளில் தேத்தண்ணி குடுப்பதை விரும்பிச் செய்தார்கள்.
அவர்களுடைய இந்த அனைவரையும் சமனாகப் பார்க்கும் முற்போக்குச் செய்கையால் அவர்களை ஊருக்குள் விமர்சிக்கத்தான் செய்தார்கள்.பட்டும் படாமல் சிலர் உங்கடை வீட்டிலும் இனி செம்பு தண்ணி எடுக்கேலாது போல இருக்குது என்ற போதெல்லாம்’நாங்கள் இப்படித்தான் நடப்பம், நீங்கள் எங்கடை வீட்டிலை செம்பு தண்ணி எடுக்கிறதும் எடுக்காமல் விடுறதும் உங்கடை விரும்பத்தைப் பொறுத்தது „ என்று சுப்பையா எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்லி விடுவார்.
நித்திரை கொள்ளாமல் ஞானம் புரண்டு புரண்டு படுத்தான்.இராத்திரி சாப்பிடும் போது அப்பா ஏன் எனது முகத்தை கூறு குறிப்பாகப் பார்தார்.ஒரு வேளை சோடாப் போத்தல் விசயத்தைக் கண்டு பிடிச்சுவிட்டாரோ, அப்பாவும் பாவிக்கிறபடியால் அது உடம்பில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அறிஞ்சு விட்டாரோ என்ற குழப்பத்துடன் படுத்திருந்தவன் விடிய நான்கு மணிக்கே நித்திரையை விட்டு எழுந்துவிட்டான்.
இன்று முழுநாளும் பாறுவுடன் இருக்கப் போகிறன் என்று சந்தோசம் ஒரு புறமும்,அப்பாவுக்கு சோடாப் போத்தல் விசயத்தை ஊகித்திருப்பாரோ என்று நினைச்சவன் குளிப்பதற்காக கிணத்தடிக்கு போய்க் கொண்டிருக்க, „ஞானம் தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் குடிச்சிட்டுப் போய் குளி என்று தாய் சொல்ல’குளிச்சிட்டு வந்து குடிக்கிறனம்மா’ என்று ஞானம் சொல்ல’ நீ குளிச்சிட்டு வர அது ஆறிப் போயிடும் இப்ப வாயைக் கொப்பளிச்சுப் போட்டு குடி,பிறகு வெள்ளெனச் சாப்பாட்டோடை மல்லிக் கோப்பி குடிக்கலாம்’ என்று சொல்லியவள் ஒரு சிறு பெட்டியை எடுத்துக் கொண்டு முற்றத்து மல்லிகைப் பந்தலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
காரைநகரில் நடக்கும் கல்யாண வீட்டுக்குப் போக வேணுமென்பதற்காக தாய் நான்கு மணிக்கு முன்பே நித்திரையை விட்டெழும்பி குளிச்சு,தேத்தண்ணி போட்டுக் குடிச்சிட்டு தோசை சுட்டு வைச்சிட்டு வீட்டு முற்றத்து மல்லிபை; பந்தலிலிருந்து மல்லிகைப் பூக்களை கிள்ளி வந்து தலையில் வைப்பதற்காக சரம் கட்டிக் கொண்டிருந்தாள்.
ஞானத்தின் தகப்பன் கிணத்தடிக்குப் போகும் போது ஞானம் குளிச்சுக் கொண்டிருந்தான். குளிச்ச தண்ணீர் மிதியடிப் பானாவால் ஓடி வாய்க்கால் வழி போய் கிணத்தடியோடு நின்ற வாழை மரங்களுக்கு போய் நிரம்ப தகப்பன் மண்வெட்டியால் பாத்தி முடக்கை மறிச்சுக் கட்டி தென்னை மரப் பாத்திகளுக்கு போக வைச்சுக் கொண்டிருந்தார், ஞானம் குளிச்சு முடிச்சு போக எத்தனிக்க, „செல்வம் நில் „ என்றவர்,அவனருகில் வந்து „சில விசயங்களை உனக்குச் சொல்ல வேண்டும் என்று கனநாளாய் நினைச்சனான்.ஆனால் அது காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது.நல்லாயப் படிச்சு எஸ்.எஸ்.சயில் நல்ல மார்க் வாங்கியும்
தொடர்ந்து படிச்சு யூனிவேர்சிற்றிக்கு போவாய் என்று நினைச்சம். நூன் யூனிவேர்சிற்றிக்குப் போகேலை ஏதாவது வேலைக்குப் போறன் என்று சொன்னாய்.கொக்காமாரும் அத்தான்மாரும், கொண்ணை மாரும் உன்ரை அண்ணிமாரும் „செல்வம் ஏன் இப்படி இருக்கிறான், அவன் படிக்கோணும் இல்லாட்டி ஏதாவது வேலைக்குப் போகோணும் நீங்கள் இரண்டு பேரும் சொல்ல மாட்டியளா என்று என்னையும் கொம்மாவையும் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
„ அதை நாங்கள் காதிலை விழுத்தேலை.முசுப்பாத்தியாய் திரியிறான் நானும் அந்த வயசைக் கடந்துதானே வந்தனான் என்று இருந்தம்.ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு.நேற்றுப் பின்னேரம் கொம்மா அறைக்குள்ளை வைச்சா பாவிச்சனீங்கள் என்று கேட்க அறைக்குள்ளை போய்ப் பார்க்க புத்தகங்கள் இருந்த பைக்குள்ளை சோடாப் போத்தல் இருந்ததைக் கண்டன்.நான் அதை விலாவாரியாக சொல்ல விரும்பேல’.
„தொடர்ச்சியாக இந்த வயசில் ஒரு பழக்கத்துக்கு அடிமையானால் வாழ்க்கை தடம்மாறிவிடும்.இது கடைசியிலை சாராயம் விஸ்கி விறண்டி என்று போய் நின்றுவிடும்’
„நான் எனது உடல் களைப்பிற்காக மூலிகையான பனஞ்சாறைக் குடிக்கிறன்.அதுவும் யாருக்கும் தெரியாமல் இந்தக் குடும்பத்துக்குள்ளை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியதாக பாவிக்கிறன்’
„பாவிக்கிறவர்களும் உடலைக் கெடுத்துக் கொள்ளாமல் ஒழுக்கமாக வாழ முடியும்.பாவிக்கிறவர்கள் தமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலும் ஒழுக்கமாக வாழ்வதையும் அவர்களே தீர்மானிச்சுக் கொள்ள வேண்டும்’
„இதை நீ பழகிப் போடாதை.முதலிலை ஒரு வேலையைத் தேடு.பிறகு குடும்பமாகு.அதற்குப் பிறகு உன் வாழ்க்கையில் உனக்கு வரப் போறவளுடன் யோசிச்சு முடிவெடு’
„நீ தனிக் குடும்பமானதற்கு பிறகு நாங்கள் தலையிடவே மாட்டம்.கொழுந்துத் தோட்ட முன்துண்டு உனக்குத்தான்.அதிலை நீ வீடு கட்டலாம்’
„சரி எல்லாத்தையும் புரிஞ்சு நடந்து கொள்.நீ எத்தனையோ பேருக்கு புத்தமதி சொல்பவன்.நீ சறுக்கி விழாமல் இருக்கப் பார்’
„ஒரு தகப்பனாக சொல்றதைச் சொல்லியிருக்கிறன்.யோசித்து நட’ என்று பட்டும் படாமல் தகப்பன் சொல்லி முடிக்க,தகப்பனின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாதவன், வேறுபக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
„சரி தோட்ட வேலைக்கான ஆயத்தத்தைச் செய்.கேத்தல் சருவச்சட்டி சீனி தேயிலை மூக்குப் பேணிகள் எல்லாத்தையும் மறக்காமல் கொண்டு போ’ என்று தகப்பன் சொல்ல,ஓம் என்பது போல தலையை ஆட்டியபடி கிணத்தடியைவிட்டுப் போனான் ஞானம்.
ஞானத்தின் தகப்பன் படிக்கிற காலத்திலேயே தாய்தகப்பனுக்குத் தெரியாமல் கள்ளுக் குடிச்சவர்தான்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து கல்லூரிகளுக்குப் போகாமல் களவாக கீரிமலைக்கு வந்து நீந்திப் போட்டு கூவிலில் கள்ளுக் குடிச்ச மாணவர்களும் இருந்தார்கள்.அத்தகைய மாணவர்கள் பின்னாட்களில் அரசாங்க அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள், இருந்தும் வருகிறார்கள்.
அத்தகையவர்கள் மாணவ பருவத்தில் தாம் செய்த குழப்படிகளின் இனிய தருணங்களை நினைச்சு மகிழ்வார்கள்.
ஞானம் தான் சொல்வதைக் கேட்டு ஓரளவேனும் நடப்பான் என்று தகப்பன் நினைச்சாலும் ஞானம் எப்படி நடக்கப் போறான் என்பது அவனைப் பொறுத்ததே.
படிக்கிற காலத்தில் மாணவ மாணவிகளும் இளைஞர்களும் யுவதிகளும் அன்றைய அவர்களின் வயதுகளில் அச்சூழ்நிலையைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தன.அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படுத்தாத வெளிப்படுத்த முடியாத,வெளிப்படுத்தினால் வாழ்க்கையே பாதிக்கப்படும் இரகசியங்கள் இருக்கவே செய்கின்றன.
மல்லிகைச் சரத்தை கட்டி முடிச்ச ஞானத்தின் தாய், „ஞானம் நீ கேட்டதென்று இராஜகுலேந்திரன் தெல்லிப்பழைப் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கத்திலை சங்கக்கடை மனேஜர்,அலுவலகத்திலை கிளார்க் வேலை, காங்கேசன்துறை பெற்றோல் செற்றிலை மனேஜர் வேலைகளின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு வந்து தந்தவன் அலுமாரிக்கு மேலை வைச்சிருக்கிறன்.
முடிவு திகதிக்கு இன்னும் ஒரு கிழமைதானிருக்குதாம்,கெதியிலை நிரப்பிப் போட்டு தன்னட்டைத் தரட்டாம் இல்லாட்டி நேரை கொண்டு போய் கோப்பிறற்றிவ் யூனியன் மனேஜர் நவரத்தினத்திட்டைக் குடுக்கட்டாம் „ என்று தாய் சொல்ல அறைக்குள் போய் விண்ணப்ப படிவங்களைப் பார்த்தவன், திருப்பி அலுமாரிக்கு மேலே வைச்சிட்டு தோட்டத்திற்கு தேவையான சாமான்களை எடுக்கத் தொடங்கினான்.
இரண்டு கைலிகள்,மூன்று சாக்குகள், கேத்தல், சருவச்சட்டிகள் இரண்டு, பித்தளை மூக்குப் பேணிகள் ஐஞ்சு, தேயிலை சீனி எல்லாவற்றையும் எடுத்து இரண்டு பெரிய புல் ஓலைப் பைகளில் வைச்சவன் மூன்று சாக்குகளையும் சைக்கிள் கரியரில் வைச்சுக் கட்டிப் போட்டு வர தாயும் தகப்பனும் கல்யாண வீட்டுக்குப் போக வெளிக்கிட்டு ஆயத்தமாக நிற்கிறார்கள்.
வெளிக்கிட்ட உடுப்போடை அடுப்படிக்கள் இருந்து சாப்பிடுவது கஸ்டம் உடுப்பிலை ஊத்தைபடலாம் என்றபடியால் விறாந்தையில் கிடந்த கதிரையில்
இருந்து கொண்டு காலைச் சாப்பாடான தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
„அம்மா தோட்டத்திலை வேலை செய்யேக்கை இடைப்பசி வருமம்மா, அதுக்கு மிச்சத் தோசையளை நான் கட்டிக் கொண்டு போறன் என்று சொன்ன ஞானம் தாயின் பதிலுக்கு காத்திருக்காமல் மிச்சமாயிருந்த பத்துத் தோசைகளையும் வாழையிலை வைச்சு அதற்குத் தேவையான சம்பலையும் வைச்சுக் கட்டி அதைக் கொண்டு போய் சைக்கிள் காண்டிலில் கொழுவியிருந்த பைக்குள் வைச்சவன், தாய் தகப்பனைப் பார்த்து „கெதியிலை போவம் இப்ப வாற பஸ்ஸை விட்டால் பிறகு ஒரு மணித்தியாலம் காவல் இருக்க வேணும் „ என்று தாயையும் தகப்பனையும் துரிதப்படுத்திக் கூட்டிக் கொண்டு வேகமாக நடந்து போய் பண்டத்தரிப்பு வீதியில் காரைநகருக்குப் போகும் பஸ்சுக்காக காத்து நின்றார்கள்.
தாய் தகப்பனுடன் காத்திருக்க காத்திருக்க பாறு வெளிக்கிட்டு வந்து கொண்டிருப்பாளே என்று ஞானத்தின் மனம் தவியாய்த் தவிக்கத் தொடங்கியது.அவன் படபடப்புடன் காத்திருக்க பஸ் வந்து கொண்டிருப்பதைக் கண்ட தகப்பன் அவனுடைய கையில் தாள்அகாசுகளைக் குடுத்து’ நடுகைக்காரிகளுக்கு குடு, நீயும் ஏதாவது வாங்கிச் சாப்பிடு லிங்கம் கடைக்கும் சீனியம்மானின்ரை கடையளுக்கும் குடுக்க இதிலை இருக்குது ‘ என்கிறார். தாயும் தகப்பனும் பஸ்ஸில் ஏறியதும் வேகமாக சைக்கிளில் தோட்டத்திற்குப் போனவன்,வீட்டிலிருந்து கொண்டு வந்த சாமான்களை அட்டாளைக்கு கீழ் வைச்சுவிட்டு பாறுவை கூட்டி வரப் போகிறான்.
பாறுவும் இன்னும் இரண்டு நடுகைக்காரிகளும் சின்னத்துரையின் கடைக்கு கிழக்குப் புறமாக உள்ள அரசமரத்தடியடிக்கு வந்து கொண்டிருக்கும் போது ஞானம் அவர்களைக் கண்டு விடுகிறான்.
ஞானத்தைக் கண்ட பாறு அரசமரத்தடியில் நின்றுவிட , மற்றைய இரண்டு பேரும் நடக்க அவர்களை எதிர்கொண்ட ஞானத்திடம் அவர்களில் ஒருத்தி „உங்கடை ஆள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்’ என்று சொல்கிறாள்.
பாறு நின்ற இடத்திற்கு ஞானம் வந்ததும், தானாகவே சைக்கிள் பாரில் ஏறி உட்கார்ந்தவள்.பாறுவை ஏற்றிக் கொண்டு ஞானம் ஓடிக் கொண்டிருக்க தான் கொண்டு வந்த பையைச் சைக்கிள் காண்டிலில் கொழுவிக் கொண்டே „இவ்வளவு தூரம் நான் நடந்து வரும் வரையும் நீங்கள் என்ன செய்தனீங்கள் „ என்று கேட்க’ அப்பாவும் அம்மாவும் காரைநகருக்கு சொந்தக்காரற்றை கல்யாண வீட்டுக்கு போகினம் அவையோடை நடந்து வந்து பஸ் ஏத்திப் போட்டு வாறன் அதுதான் பிந்திப் போச்சுது,அது சரி இதென்ன பைக்குள்ளை „ என்று கேட்க உங்களுக்கென்று முழுப் போத்தல் கொண்டு வந்திருக்கிறன், இராத்திரி அம்மா கண்டு பிடிச்சிட்டா,இப்ப காலமையும் அம்மா ஒரே உபதேசம் „ என்று பாறு சொல்ல, „என்னத்தை அம்மா கண்டு பிடிச்சவ „ என்று ஞானம் கேட்க,என்ரை சொண்டு சிவப்பானதைத்தான் அம்மா சந்தேகத்துடன் பார்த்தவ, ஏன் உங்களுக்குத் தெரியாதா ஏன் என்ரை சொண்டு சிவப்பானது „என்று அவள் வெட்கத்தடன் சொல்ல, „ ஓ….அதுவா அதுக்கு இன்டைக்கு கன
சந்தர்ப்பம் இருக்கு…என்று அவன் முடிக்குமுந்தி „ கலோ அது சரிவராது அதுவும் பகலிலை ….’ ஏன்று பாறு சொன்னாலும், சொற்களின் கடுமையற்ற தன்மை அவளும் அதை விரும்புகிறாள் என ஞானம் கண்டு கொண்டு, காண்டிலைப் பிடிச்சுக் கொண்டிருந்த பாறுவின் கைகளுக்கு மேல் தன் கையை வைச்சு பொத்திப் பிடிக்கிறான்….
அவர்களின் சைக்கிள் மகாஜனா கல்லூரியின் கிழக்குப் பக்க எல்லையைத்
தாண்டிய போது….
(தொடரும்)
![]()