எழுத்து மூலம் கடிதம் வழங்க அதிகாரிகள் மறுப்பு தையிட்டி காணி அளவீடு! நேற்றும் கைவிடப்பட்டது

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்றைய தினம் கைவிடப்பட்டது.
அதிகாரிகள் எழுத்து மூலம் காணி உரிமையாளர்கள் கோரிய கடிதத்தை வழங்கியபோதும் கடிதத் தலைப்பில் வழங்கவில்லை என தெரிவித்து காணி அளவீட்டுக்கு சம்மதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் காணி அளவீடு நிறுத்தப்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டனர்.
அதற்காக விகாரை பகுதிக்கு வந்தவர்களை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் பொலிஸார் வீதி சோதனை சாவடியை அமைந்து , காணி உறுதிகள் , அடையாள அட்டைகளை பரிசோதித்து தான் அனுமதிப்போம் என கூறியமையால், காணி உரிமையாளர்களுக்கும் , பொலிஸாருக்கும் தர்க்கம் ஏற்பட்டது.
அதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த கிராம சேவையாளர் காணி உரிமையாளர்களை அங்கிருந்து விகாரை பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு, காணி உரிமையாளர்கள் ” காணியை விடுவிக்கும் நோக்குடனேயே காணிகளை அளக்கின்றோம்” என எழுத்தில் உறுதி மொழி தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரியதால், அதனை வழங்குவது தொடர்பாக நீண்ட கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.
நீண்ட இழுபறியின் பின்னர் காணி அளவீட்டு பணிகளுக்காக வந்திருந்த திணைக்களத்தினர், அமைச்சின் அதிகாரிகள் மாவட்ட செயலர் , பிரதேச செயலர் உள்ளிட்ட 07 தரப்பினரும் ஒரு கடிதத்தில் ஒப்பம் வைத்து கையெழுத்திட்டனர்.
அதிலும் திருத்தங்கள் தேவை என கூறி , மறுபடியும் ஒரு கடிதம் எழுதி , அதிலும் திருத்தங்கள் சொல்லி, கடிதத்தினை ஏற்றுக்கொண்டனர்.ஆனாலும் , அதனை ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் எழுதி , அதற்கு கீழ் 7 அதிகாரிகளும் கையெழுத்து வைக்க வேண்டும் என கோரினார்கள்.
ஏழு அதிகாரிகளும் வெவ்வேறு திணைக்களத்திற்கு உரியவர்கள். ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பின் கீழ் ஏழு பேரும் ஒப்பமிட முடியாது என தெரிவித்த நிலையில் அவ்வாறெனில் காணி அளவீட்டுக்கு இணங்க முடியாது என காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் காணி அளவீடு கைவிடப்பட்டது.
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்றைய சம்பவங்களின் அறிக்கை உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 17ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட வேளை, விகாராதிபதி அதற்கு சம்மதிக்காது , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையால் அன்றைய தினம் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் , நேற்றைய தினம் இரண்டாவது தடவையாக காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் , காணி உரிமையாளர்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றாததால் , அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டன.
![]()