கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 26 …. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்.

வீட்டுக்குப் போன நான் பணிஸ் பாண் ஆகியவற்றை நண்பர்களுக்கு கொடுத்து நானும் சாப்பிட்டன்.

சாப்பிட்டதற்குப் பிறகு கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருந்தவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தம் செய்தார்கள்.பாஸ்கரன் அடுப்படிக்குள் வரவே,முதலில் அவர் சமைச்சுப் போட்டு விடட்டும் பிறகு சமைப்பம் என்பதற்காக மீண்டும் எல்லோரும் அவரவர் அறைக்குள் போனம்.

வாசித்து முடிச்ச தமிழ் முரசுப் பத்திரிகையை எடுத்து கட்டிலில் சாய்ஞ்சு இருந்து கொண்டு மீண்டும் வாசிச்சன்.கண்கள் பத்திரிகையில் இருந்தனவே தவிர மனம் யோகமலரிடமும் மனைவியைச் சுற்றியுமே வந்தது.

யோகமலருக்கு தாலி கட்டப் போறன் என்ற எண்ணம் வரும் போது அது ஒரு கனவான கற்பனையாகவும் மனதில் தோன்றியது.ஆனால் அது நிசமாக நடக்கப் போவதுதான் என்பதே உண்மையாகும்.

தெல்லிப்பழை – மனைவி பிள்ளைகள் சொந்தக்காரர் எனவும் மலேசியா ஜோகூர்பாரு யோகமலர் என மனம் அலை பாய்ஞ்சது.

பாஸ்கரன் சமைச்சு முடிஞ்சதை அறிந்த நாங்கள் மீண்டும் அடுப்படிக்குள் போய் சமையலுக்கான வேலைகளில் ஈடுபட சச்சி என்ற நண்பன் „பொஸ் நாங்கள் செய்யிறம் நீங்கள் ரூமுக்குப் போங்கள் „ என்றான்.இராஜரட்ணம் „ என்ன பொஸ் எதிர் பில்டிங் தங்கச்சிமாரைப் பார்க்கப் போகேலையோ „ என்று அக்கறையாக யதார்த்தமாகக் கேட்பது போலக் கேட்பதாக நினைச்சுக் கொண்டு கேட்டாலும்,அதில் உள்குத்து இருப்பதை உணர்ந்தன்.

எனக்கும் யோகமலருக்கும் இடையில் இருக்கும் உறவு பற்றி அனைவரும் விலாவரியாக அறிந்திருப்பார்களோ என்று எனது உள்மனம் சொல்லியது.

நான் இல்லாத போது என்னைப் பற்றி என்ன விமர்சனம் வைச்சிருந்தாலும் நான் அவர்களைவிட வயதுக்கு மூத்தவன் என்ற ரீதியில் அவர்கள் என்மீது மதிப்பு வைச்சிருப்பதை உணர முடிஞ்சுது.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் எங்கேயோ புறப்பட்டுச் சென்றார்கள்.எங்கே போகிறீர்கள் என்று அவர்களைச் சாடை மாடையாகக்கூட கேட்கவில்லை. ஏனென்றால் என்னை அவர்கள் கேட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு படுத்த எனக்கு நித்திரை வரவில்லை.யோசிச்சுக் கொண்டு படுத்திருந்தன்.யோசனை முழுக்க முழுக்க வரப்போகிற வெள்ளிக்கிழமை யோகமலரின் கழுத்தில் விதி தாலி கட்ட வைக்கின்றதே என்ற மன உளைச்சலில் தவிச்சன்.

என்னையறியாமல் நித்திரை கொண்டு எழுந்த போது நேரம் மூன்று மணியாகியிருந்தது.படுத்திருந்தபடியே திரும்பிப் பார்த்தேன் பாஸ்கரனையும் காணவில்லை கனகேஸ்வரனையும் காணவில்லை.

எழுந்து மேல்தட்டு கட்டிலைப் பாரத்தன்.அப்பதான் அருண்டு எழுந்த ஞானேஸ்வரன் „ என்ன பொஸ் ஆட்கள் ஒருத்தரையும்காணேலைப்; போல, எல்லாரும் வெளியிலை போயிட்டினம் போல „ என்றான்.

„நானும் அப்படித்தான் நினைக்கிறன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே „நானும் யூரோங் பக்கம் போகப் போறன் எனக்குத் தெரிஞ்ச தம்பாலைப் பொடியன் வரச்

சொன்னவன்’ என்று சொல்லிக் கொண்டே கட்டடிலைவிட்டு இறங்கியவன் முகம் கழுவவெண்டு போனான்.

மீண்டும் திரும்பியும் கொஞ்ச நேரம் படுத்திருந்து கொண்டே இன்னுமொருக்கா யோகமலருக்கு ரெலிபோன் செய்து போட்டு முன் பில்டிங்கு போவம் என்று யோசிச்சன்.

ஞானசேகரன் உடுப்பை மாத்திக் கொண்டு „வாறன் பொஸ் நீங்கள் எங்கேயும் போகலையோ’ என்று கேட்க,’பார்ப்பம் „ என்று பதில் சொல்லிக் கொண்டே எழுந்து முகம் கழுவுவதற்காக போன நான் குளிக்க வேண்டும் என்று எண்ணம் வர குளிச்சன்.பிறகும் ஒரு தேத்தண்ணியைப் போட்டுக் குடிச்சிட்டு யோகமலருக்கு ரெலிபோன் பண்ண போய்க் கொண்டிருந்தன்.

ரெலபோன் பண்ணியவுடன் கலோவென்று மறுமுனையில் ஒலித்த குரல் யோகமலருடைய குரல் அல்ல என்பதை உணர்ந்த நான் தயங்க,’யோசிக்காதீங்க நான் உங்க வைபோட சின்ன அண்ணிதான், வைபை கூப்பிறேனுங்க „ என்று சொன்ன யோகமலரின் சின்ன அண்ணி’யோகி உன்னோட கஸ்பெண்ட் கூப்பிடுறாரு’ என்று யோகமலரைக் கூப்பிடுவது கேட்டது.ஒரிரு விநாடிகள் செல்வதற்குள்ளேயே „கலோ புருசனாரே செர்ப்பிறைஸ்ஸா இருக்கு, ஈவினிங்ள தூங்குவீங்களேன்னுதான் உங்கள மாலைல ரெலிபோன் பண்ணச் சொல்றதில்லை, லஞ்ச் சாப்பிட்டீங்களா, தூங்கினீங்களா, ஆமா என்னோட பேசினக்கப்புறம் என்ன செய்வீங்க’ என்று அவள் கேட்டதும்’ காலமை சொன்னேனே முன் பில்டிங் பொம்பிளப் பிள்ளைகளில ஒருத்தி தங்கடை வீட்டுக்கு வரச் சொன்னதாக உங்களோடை கதைச்சுப் போட்டு அங்கைதான் போகப் போறன்….’ என்றவுடன் „உங்க சிஸ்ற்ரேஸ்சிட்டைப்: போறீங்களா „ என்று அவள் கேட்க „ம் „ பதிலளித்தன்.

„சிஸ்ற்ரேர்ஸ் „ என்ற சொல்லை அழுத்திச் சொன்னதைக் கவனித்த போது, பெண்களுக்குரிய தன்னுரிமையில் அவள் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்தன்.

„சின்ணண்ணி ஏன் வந்திருக்கிறாங்க தெரியுமா, எல்லாமே வெள்ளிக்கிழமை நீங்க என்னோட கழுத்தில தாலிக்கட்டப் போறீங்கல்லா அதைப் பற்றி அப்பா அம்மாவோட பேசத்தான் வந்திருங்காங்க, இன்னொன்னு நாங்க இரண்டு பேரும் இருக்கிற வீட்டையும் அண்ணாக்கள் என்எம்பி பக்ரறியோட அரேஞ் பண்ணிட்டாங்க,மற்றெல்லாம் உங்களுக்கு சேர்ப்பிரைசுங்க…என்று சொல்லிக் கொண்டிருந்தவள்’ ஏங்க எதுவுமே பேசமாட்டீங்களா, புரியுதுங்க தாலிகட்டிறது சாதாரண மாற்றர் இல்லங்க,நீங்க சங்கடப்படறுதும் புரியுதுங்க, உங்களோட கொஞ்ச நாள்னாலும் உங்க முழு மனைவியா வாழ்ந்திடனும்ங்க’ குரல் தழுதழுத்தவளை „அழாதீங்க நான் விரும்பித்தான் உங்களுக்கு தாலிகட்டிறன் அழாதீங்க „ என்று சமாதானப்படுத்தினன்.

„சரிங்க நாளைக்கு சந்திப்போம்க’ என்று அவள் ரெலிபோனை வைச்சாள்.

யோகமலருடன் கதைச்சு முடிச்ச நான் நேராக பொம்பிளைப் பிள்ளைகள் இருந்த முன் பில்டிங்குக்குப் போய் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டினன்.

கதவைத் திறந்த அந்த வீட்டின் லீடர்’ அண்ணை வாங்க எங்களை மறந்திட்டியளோ என்று நினைச்சம்.மாப்பிள்ளையாகப் போறியளாமே பேருக்கு ஏற்ற மாதிரி

முருகனின் அவதாரம் எடுக்கப் போறியள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு அறைக்குள் இருந்து கதைச்சுக் கொண்டிருந்த பொம்பிளைப்பிள்ளையள் ஒருவர் பின் ஒருவராக வந்து என்னை மிருகக்காட்சிச் சாலையில் இருக்கும் அதிசயமான ஒரு மிருகத்தைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.

அதில் ஒருத்தி „அண்ணை உங்களை நாங்கள் பெரிய இடத்தில் வைச்சுப் மதிப்போடை பார்த்தனாங்கள், உண்மையோ பொய்யோ தெரியாது உங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்படுகிற கதையளை எங்களாலேயே நம்ப முடியேலை .நாங்கள் கேள்விப்படுறது பொய்யான செய்தி என்று இருந்தால் சந்தோசப்படுவம்’ என்றாள்.

அவர்களில் சாவித்திரி என்ற பிள்ளை’ அது பொய்யாத்தான் இருக்கும் என்று நினைக்கிறன், அண்ணை அப்படிப்பட்டவரல்ல’ என்றாள்.

„நீங்கள் கேள்விப்படுகிற அத்தனையும் பொய், அந்த ஜோகூர்பாருப் பிள்ளை நான் கல்யாணம் செய்து எனக்கு பிள்ளைகளும் இருப்பதை அறிந்து நான் சோர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறன் என்று அப்பப்ப சாப்பாடு கொண்டு வந்து தந்தது உண்மைதான், மற்றும்படி அந்தப் பிள்ளைக்கும் எனக்குமிடையில் வேறொன்றுமில்லை’ என்ற நான் „அன்றைக்கு விமலா நூடில்ஸ் கொண்டு வந்து தந்ததைக்கூட றூம் பொடியங்கள் ஒரு மாதிரித்தான் கதைச்சவங்கள், அதுக்கெல்லாம் காது குடுத்துக் கொண்டிருக்க ஏலாது, நரம்பில்லாத நாக்காலை சனங்கள் வரம்பில்லாமல் கதைக்கத்தான் செய்வினம்; „ என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்தன்.

பிறகு பல விசயங்களைப் பேசினம்.வாற வியாழக்கிழமைக்குப் பிறகு நான் என்எம்பி என்ற பக்ரறிக்குப் போகப் போவதையும் சாய்ச்சி என்ற இடத்தில் இருக்கப் போவதையும் சொன்னன்.

நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கும் போது சாவித்திரி என்ற பிள்ளை தேத்தண்ணியும் கேக்கும் கொண்டு வந்து தந்தாள்.ஒவ்வொரு பிள்ளைகளாக அவர்கள் மீண்டும் தமது அறைகளுக்குப் போக விமலாவும் சாவித்திரியும் என்னோடிருந்து கதைச்சார்கள்.

நேற்று நானும் மச்சாளின் மகளும் படத்திற்குப் போன கதையைச் சொன்னன்.விமலா நேற்றுக் காலை பஸ் ஸ்ராண்டில் சந்திச்சிருந்தார்.’எனக்குத் தெரிஞ்சால் நானும் வந்திருப்பன் „என்று சாவித்திரி சொன்னாள்.நான் அதற்கு எதுவும் சொல்லாமல் அiமாதியாக இருந்தன்.

யோகமலரைப் பற்றி எந்தக் கதையுமே வராதவாறு வேறு வேறு கதைகளை கதைச்சு அவர்களின் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டிருந்த நான், இரவு எட்டு மணியாகி விட்டதை உணர்ந்து „எட்டு மணியாச்சு வாறன், இனி நான் சாய்ச்சிக்குப் போனதுக்குப் பிறகு சனி இல்லாட்டி ஞாயிறுகளில் வந்து சந்திக்கிறன்’ என்று எழ விமலா „ இருங்கண்ணை புரியாணி செய்தனாங்கள் சாப்பிட்டுப் போங்கள்,நீங்கள் சாய்ச்சிக்குப் போய்விடுவீங்கள்,மாட்டன் என்று சொல்லாமல் சாப்பிட வேணும் „ என்று விமலா கட்டாயப்படுத்த, அங்கு சாப்பிட்டன்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது’ அண்ணை திரும்பத் திரும்ப கதைக்கிறன் என்று நினைக்காதையுங்கோ, நாங்கள் கேள்விப்பட்டதை உண்மையாக்கிப் போடாதையுங்கோ’என்று விமலா சொல்ல, „ என்னை நம்புங்கோ அப்படி ஒன்றுமில்லையென்று’ மனமறிஞ்சு பொய் சொன்னன்.

அங்கு சாப்பிட்டுவிட்டு எங்களுடைய வீட்டுக்கு வந்த போது அங்கு யாரையுமே காணவில்லை. நான் படுத்து நித்திரை கொள்ளத் தொடங்கினன்.

அடுத்த நாள் திங்கட்கிழமை ஜிஇ பக்ரறிக்கு எங்களை ஏற்றிக் கொண்டு போன பஸ் ஜோகூர்பாருவிலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து வேலை செய்பவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போது போய்ச்சேர, யோகமலர் தனது பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தவள் தற்செயலாக நான் வந்த பஸ்ஸலிருந்து நான் இறங்குவதைக் கண்டவள் புன்னகை

மலர தாமதித்து என்னோடு அருகருகா நடந்தவள் „புருசனாரே டின்னர் என்ன சாப்பிட்டீங்க, நைற் நல்லா தூங்கினீங்களா’ ஒய்யாரமாக தலையைத் திருப்பிக் கேட்டவள்’ என்னையே நினைச்சீங்களா’ என்றவள் „நான் தூங்கவேயில்லை உங்களயே நினைச்சிட்டே இருந்தேங்க „ என்றவள் நைற் பிறட்டா சாப்பிட்டீங்க’ என்று கேட்க, „ இல்லை முன் பில்டிங் பிள்ளைகள் வீட்டில் புரியாணி சாப்பிட்டனான்’ என்று சொல்ல, „புரியாணியா அதைதாங்க நான் உங்களுக்கு இன்னைக்கு கொண்டு வந்திருக்கேங்க’ என்று சொல்லும் போதே பக்ரறி பில்டிங்கள் நுழைந்துவிட்டோம்.

இன்னைய விட்டா, இன்னும் மூனு நாட்கள்ள நான் உங்களுக்கு விதம் விதமாக சமைச்சுத் தருவேணுங்க’ என்றவள், „அத்துடன்’ என்று எனது காதுக்குள் சொன்ன விசயத்தால் அவளின் முகம் சிவந்தது

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *