கதைகள்

பாலை நிலா!… 07 … ( நாவல் ) … க. ஷியா.

தனித்திருக்கும் கதீஜாவின்
மனது எதையெதையோ எண்ணுகிறது. தொண்டை வரண்டு மேல் முரசில் நாக்கு ஒட்டிக் கொள்ள பால் மாவை உம்மாவுக்குத் தெரியாமல் அள்ளித் தின்று அது முரசில் ஒட்டிக் கொள்ள அதை அகற்ற அவதிப்படும் குழந்தை போல தன் மேல் முரசிலும் தொண்டையிலும் ஏற்பட்ட வரட்சியை அகற்றத் திண்டாடினாள் கதீஜா. பொலிஸார் மறு புறத்தில் உள்ள அறையில் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கையில். சில மணி நேரங்கள் கழிந்ததும். அவளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அப்துல்லாஹ் என்பவர் வந்து அவளை அழைத்துச் சொன்னார். கதீஜா உன்னுடைய புதிய எஜமானன் உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறார். வெளியே வாவென்று சொல்லவே அவளும் மேலதிகாரியின் அறைக்குச் சென்றாள்.
அப்போது, பொலிஸ் அதிகாரி அப்துல்லாஹ் கதீஜாவிடம் அவளை வாங்கிச் செல்ல வந்த அரபியைக் காட்டி இதோ பார் கதீஜா இவர் தான் உனது புதிய எஜமானன் அவருக்கு சலாம் சொல் என்றார். அவளும் சலாம் சொல்லவே முன்னைய வீட்டில் என்ன நடந்தது என்று வினவினார் புதிதாக அவளை வாங்க வந்த அரபி. அப்போது அவள் தனக்கு நேர்ந்த பிரச்சினைகளை ஒன்று விடாமல் சொல்லி அழுதாள். எல்லாவற்றையும் கேட்டு விட்டு வெளியே சென்ற அந்த அரபி சிறிது நேரம் கழித்து வந்து. கதீஜாவிடம் கேட்டார்.
யா…. கதீஜா, உன்னுடைய பழைய எஜமானன் ஏதேதோ சொல்கிறாரே என்றார்.
அதற்கு அருகில் நின்ற பொலிஸ் அதிகாரி அப்துல்லாஹ் கேட்டார். அப்படி என்ன சொன்னார் அவர் என்று. அதற்கு அவரோ இந்தக் கதீஜா நகை, பணம் எல்லாம் சுருட்டி கொண்டு ஓடிவந்து விட்டாளாம் அதற்கெல்லாம் அபராதம் தந்தால் மட்டும் தான் நீ அவளை அழைத்துப் போக அனுமதிப்பேன் என்று சொல்கிறார். எனக்கு இந்த வேலைக்காரி கதீஜா வேண்டாம் என்று சொல்லி விட்டு அந்த அரபி சென்று விட்டார். பொலிஸார் எவ்வளவு சொல்லியும். அந்த அரபி கேட்கவில்லை.
கதீஜாவின் எஜமானன் அவள் மீது கொண்ட கோபத்தில் அவளை வாங்க வந்த அரபியர்கள் யாரையும் வாங்க விடாது செய்து விட்டு அவனாகவே வேறு ஒரு இடம் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவளின் எஜமானனின் எண்ணம் எல்லாம் கதீஜாவை அதிக விலைக்கு விற்று விட வேண்டும் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் தான் அவளை வாங்க வந்த அணைவரையும் விரட்டி விட்டான் அந்த எஜமானன். அதன் பின்னர் பொலிஸார் அவனிடமே பொறுப்புக் கொடுக்கவோ நல்லிரவு இரண்டு மணியளவில் கதீஜாவிற்கு வேறு இடம் ஒன்று முடிவாகியிருந்தது. அதுவரை பொலிஸ் நிலையத்தில் அவளுக்கு கொடுத்த சாப்பாட்டை பாதி சாப்பிட்டு விட்டு மிகவும் பயத்திலும், கவலையிலும் கழித்துக் கிடந்தாள் கதீஜா. சற்றுக் கண்ணயர்ந்தவளாகக் கிடந்த அவளை நள்ளிரவு இரண்டு மணிக்கு பொலிஸ் தரப்பினர் வந்து எழுப்பவே வாலைச் சுருட்டி எழுந்து குந்தினாள் கதீஜா அப்போது தான் தனது எஜமானி அடித்த அடி எல்லாம் வலி காட்டி நின்றது. முன் நெற்றியில் ஒரு புடைப்பு சிறு குடுகை போல் வீங்கி சற்று அதிகமாகவே வலித்தது அவளுக்கு.
அவளைத் தட்டி எழுப்பிய பொலிஸ் காரர்களோ அவளிடம் என்ன நீ தூக்கமா கதீஜா உனக்கு வேறு இடம் ஒன்று கிடைத்துள்ளது வேலை செய்ய நீ உன் நாட்டிற்கு இப்போது போக முடியாது அப்படி நீ போக வேண்டும் என்றால் எட்டாயிரம் றியால்களைத் தந்து விட்டு தான் போக வேண்டும். உன்னிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா என்று வினவினார். அதற்கு கதீஜாவோ என்னிடம் அவ்வளவு பணம் இல்லை நான் நாட்டிற்குச் செல்லவும் விரும்பவில்லை. எனக்கு வேறு நல்ல இடத்தில் வேலை தந்தால் நிச்சயமாக வேலை செய்கிறேன் ஆனால் எனது எஜமானனுடன் என்னை அனுப்பி விட வேண்டாம் என்று அழுதாள்.
அதற்கு அவர்களோ பயப்படாதே, உனது எஜமானனிடம் தான் உன்னை ஒப்படைக்கப் போகிறோம் ஆனால் அவர் உன்னை வேறு இடத்தில் கொண்டு சேர்ப்பார் என்றார்கள். ஆனால் கதீஜாவோ மிகவும் பயந்து அவனோடு போக மறுத்தாள். இருந்தும் அவனுடனேயே அவளை அனுப்பி வைத்தனர்.
கதீஜாவை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏறினார் அவளது எஜமானன். கதீஜாவுக்கோ பயம் நெஞ்சைப் பிளந்தெடுத்தது. எங்கே போகிறோம் என்று கேட்டுக் கொள்ள முடியாதவளாக வீதியை அவதானித்து வந்தாள் ஆனால் இரு சூழ்ந்ததால் அதைக்கூட சரியாகக் கவனிக்க முடியவில்லை அவளால். சிறிது தூரம் சென்றதும் வீதித்தடையில் வண்டி ஏறி விழுவே நெஞ்சைப் பொத்திப் பிடித்துக் கொண்டாள். காரணம் அவளது எஜமானனின் வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு முன்பாகவே அந்த வீதித்தடை உள்ளது. அப்போது தான் அவள் வாய் திறந்து பாபா எங்கே என்னை அழைத்துப் போகிறீர்கள். நான் உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன் தயவுசெய்து என்னை அங்கு அழைத்துப் போகாதீர்கள் இறைவன் போதுபானவன் என்று கதறி அழுதாள். அதற்கு எஜமானனோ
பயப்படாதே கதீஜா மேடத்தைப் பார்த்து விட்டு நீ போகலாம் உன்னை வேறு இடத்திற்கு வேலைக்கு நானே கொண்டு விடுகிறேன் அங்கு யாரும் இல்லை ஒரு வயதான மேடமும் அவருடைய மகளும் தான் இருக்கிறார்கள். உனக்கு விருப்பம் தானே என்றான் எஜமானன். அவளும் ஓம் என்றாள். பின்னர் எஜமானனின் வீட்டை அடைந்தார்கள் இருவரும். கதீஜாவை உள்ளே சென்று மேடத்திடம் சொல்லி விட்டு வா என்று அவன் எவ்வளவோ கேட்டான் ஆனால் அவள் பயத்தின் உச்சியில் நின்று நான் உள்ளே வரமாட்டேன் என்று மறுத்தாள்.
தனக்கு ஒரு வேலைக்காரி கிடைத்து விட்டாள். இனி இழுத்து மூடிக்கொண்டு நன்றாகத் தூங்கலாம், இஸ்டத்திற்கு வைத்து வேலை வாங்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த அவளுக்கோ கதீஜா வீட்டை விட்டுப் போனது பெரும் ஏமாற்றத்தை தந்ததால் கதீஜாவின் மீது கடும் கோபத்தில் இருந்தாள் எஜமானி. கதீஜாவைக் கண்டதும் வாசலுக்கு ஓடி வந்தவள் ஒரு வருடமேனும் இங்கு வேலை செய்து விட்டுப் போ எங்களோடு இரு கதீஜா என்று கேட்டாள்.
ஆனால் கதீஜாவுக்கோ அவள் செய்த அனியாயங்கள் திருடி என்று பழி போட்டது எல்லாம் கடும் வேதனையழித்ததால் கதீஜா மறுத்து விட்டாள். அவள் மறுத்து விட்ட கோபத்தில் அவளது எஜமானி கதீஜாவிற்கு சாபம் விட்டாள். நீ நல்லா இருக்க மாட்டாய் நாசமாகிப் போவாய் என்று அதைக் கேட்ட கதீஜா மனம் கலங்கிப் போனவளாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக நான் சென்று வருகிறேன் மேடம் என்றாள். அப்படிச் சொல்லியும் கூட மீண்டும் மீண்டும் கதீஜாவுக்கு அவளது எஜமானி சாபம் விட்டுக் கொண்டேயிருந்தாள். அதைக் கண்ட அவளது எஜமானன் தன் மனைவியிடம் இதற்கு மேல் அவளுக்கு சாபம் விடாதே அவள் போகட்டும் என்றான்.
அதற்கு கதீஜாவோ மேடம் நீங்கள் என்னைத் தூங்க விடாமல், நல்ல ஆடை அணிய விடாமல், நிம்மதியாகத் வேலை செய்ய விடாமல் வர்த்தைகளாலும் செயல்களாலும் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறான். இப்போது நீங்கள் விடும் சாபத்தை கூட இறைவன் நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று சொல்லி விட்டு போகிறேன் என்று கூடச் சொல்லாமல் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளது எஜமானனோ மேடத்திடம் போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு வா கதீஜா என்று பலமுறை சொல்லியும் கதீஜா மறுத்தவளாக வண்டியினுள் இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து வண்டி நகரத் தொடங்கியது. குறைந்தது இரண்டு மூன்று மணி நேரங்கள் வண்டி ஓடிக் கொண்டேயிருந்தது. எத்திசையை நோக்கிப் போகிறோம் என்று கூடத் தெரியாமல் கதீஜா பயணித்தாள்.
ஒளிரும்……..
க.ஷியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *