கட்டுரைகள்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!…. ( 20) …. ( கட்டுரை )…. சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.

“இது என் கதையல்ல,

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை…

 

1978 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் புயல் அடித்தது. 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி உலகை உலுக்கி, நமது நாட்டையும்

சிதைத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலையைக்

கண்டவர்களுக்கு சூறாவளி அப்படியொன்றும் பெரிய தாக்கமாகத் தெரியாது. உண்மையும் அதுதான். ஆனால், அதுவரை வாழ்நாளில் அவ்வாறானதொரு அனர்த்ததை எதிர்கொண்டிராத மக்களுக்கு ஒரே இரவுக்குள் ஊர்களையெல்லாம் அடித்துச் சிதைத்துத் துவைத்தெடுத்த

சூறாவளி கோர அனுபவமாக இருந்தது.

அப்போது நான் வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். புயல் வருவது பற்றிய எவ்வித தகவலோ, முன்னறிவிப்போ இல்லாதிருந்தமையால், வழமைபோலப் பிற்பகல் 4.00 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறினோம். அன்று உதவி அரசாங்க அதிபர் வந்திருக்கவில்லை. குருமன்வெளி தவப்பிரகாசம், பழுகாமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை, தாந்தோன்றி அண்ணன் முதலியோர் துவிச்சக்கர வண்டியில் சென்றுவிட்டார்கள். தலைமை எழுதுனர் செல்லத்துரை அவர்களுக்கு வெல்லாவெளியில் தங்குமிடம் இருந்தது. வழமையாக 4.15 மணிக்கு வருகின்ற பஸ் வரவில்லை. நானும் இராணி அக்காவும் (திருமதி. ஈஸ்வரநாதன்). பாலசுந்தரம் அவர்களின் கடைக்குமுன்னால் பேருந்துக்காக அரை மணிநேரம் காத்திருந்தோம். வேறு எவ்விதமான வாகன வசதிகளும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஏதோ, நிலைமை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த நாங்கள் இருவரும் களுவாஞ்சிகுடிக்கு நடந்தே செல்வது என்று தீர்மானித்தோம். வழியில் ஏதாவது வாகனம் அகப்படலாம் என்ற சிறிய நம்பிக்கயுடன் நடந்தோம். காற்று பலமாக வீசியது. ஒவ்வொரு நிமிடமும் காற்றின் வேகம் கூடிக்கொண்டிருப்பதை உணர்ந்தோம். போரதீவைத் தாண்டிக்கொண்டிருக்கும்போது நேராக நடக்க முடியாமல் நிலை குலையும் அளவுக்குக் காற்றின் வேகம் கனத்தது. மழையும் தூறத் தொடங்கியது.

வீதியின் ஒருபக்கம் குளம், மறுபக்கம் வயல். முன்னாலும், பின்னாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த வீடுகளும் இல்லாத பிரதேசம். சேலையுடன் நடக்கும் இராணி அக்காவுக்கு காற்றின் தாக்கம் என்னைவிட அதிகமாகவே இருந்திருக்கும். கட்டுறாம்பூச்சி மரத்தடியைத் தாண்டும்போது, அவரால் நடக்க முடியவில்லை. இன்னும் சிலரும் எங்களின் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். பழுகாமம் மற்றும் பெரியபோரதீவில் இருந்து வந்துகொண்டிருந்தவர்களாக இருக்க வேண்டும். இருள் சூழ்ந்துவிட்டது. அப்படியே மெல்ல மெல்ல நடந்து பட்டிருப்புப் பாலத்தைத் தாண்டியதும்தான்

எங்களுக்குக் கொஞ்சம் தென்பு ஏற்பட்டது. இருந்தாலும், பட்டிருப்புச் சந்தியில் இருந்து மத்திய மகாவித்தியாலயம் வரை பயந்தான். இரண்டுபக்கமும் காடு. அதைத் தொடர்ந்து ஒருபக்கம் வண்ணாங்குளம் மறுபக்கம் பெரியகுளம். தெளிவாக வீதியும் தென்படாத ஒரே இருள். (இப்போது நகரத்து எழிலோடு ஒரு வர்த்தகவலயம் போலப் பகலும் இரவும் பரபரப்பாக இருக்கும் அந்த இடம் அப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தது). ஒருவாறு இராணி அக்காவை அவவின் வீட்டடியில் விட்டுவிட்டு அங்கிருந்து ஏறத்தாழ இருநூறு மீற்றர் தூரத்தில் இருந்த என் வீட்டுக்குச் சென்றேன். அம்மா, வீட்டுக்கு முன்னால், ஒழுங்கையில் காத்துக்கொண்டு நின்றார், கண்ணீரோடு.

அன்றிரவு நள்ளிரவில் புயலின் அசுரத்தனமான கோரத்தாண்டவம் உச்சம் பெற்றது. காற்று வீசும் சத்தமும், மரங்கள் முறிந்து விழுகின்ற சத்தமும், வானிலேயிருந்து கனமான பொருட்களை வீடுகளில் போடுவது போன்ற சத்தமும், அதனால் வீடுகள் உடைகின்றசத்தமும், “சோ”என்று கொட்டிக்கொண்டிருந்த பேய்மழையின் இரைச்சலையும் மீறிச் செவிகளைக் கிழித்து, நெஞ்சைப் பதறவைத்துக்கொண்டிருந்தன. எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மத வேறுபாடுகளைக் கடந்து, வாயில் வந்த கடவுள்களின் பெயர்களையெல்லாம் சொல்லிக் கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள். அதிகாலையாகும்போது புயலின் தாக்கம் குறையத் தொடங்கியது.

மறுநாள் காலை வீதியெங்கும் மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டும், உடைந்தும், நிலத்தில் கிடந்தன. மின்கம்பிகள் வீதிகள் எங்கும் பரவிக்கிடந்தன.

தரைமட்டமாகிக் கிடந்த வீடுகள், உடைந்து சிதைந்த வீடுகள், கூரையே இல்லாத வீடுகள் என்றிப்படி கண்ணுக்கெட்டிய தூரம் வரை, நான்கு பக்கங்களும், எங்கு பார்த்தாலும் வீடுகளே இல்லாது வெட்டவெளியாகத் தெரிந்தன. வேரோடு சரிந்த மரங்கள் சில வீடுகளில் வீழ்ந்து கிடந்தன. முறிந்த மரங்கள் மூலை முடுக்குகள் எங்கும் யானைகளால் சிதையுண்ட காடுபோலப் பரந்து கிடந்தன. வீடுகளின் கூரைகளில் இருந்த ஓடுகளும், அஸ்பெஸ்ரஸ் தகடுகளும் காற்றிலே பறந்து மாற்றாரின் வீடுகளிலும், மரங்களிலும் தொங்கிக்கொண்டிருந்தன. கதிரைகள், மேசைகள், கட்டில்கள், மெத்தைகள், பாத்திரங்கள் என்றிப்படி எல்லாப் பொருட்களும் அங்கிங்கெனாதபடி வீதிகளிலும், வளவுகளிலும் சிதறிக்கிடந்தன.

அந்தக் காலகட்டத்தில் மாவட்டத்தின் அதிஉயர் பொலிஸ் பதவி நிலை என்பது பொலிஸ் அத்தியட்சர் பதவியே. மட்டக்களப்பில் அந்தப் பதவியில் இருந்தவர் ஒரு தமிழர். சைவப் பழமும்கூட. அவரது பெயர் நினைவுக்கு வரவில்லை.

புயல் ஆரம்பமாகும்போதே அவர், மாவட்டம் முழுவதும் மின்சாரத்தைத் துண்டிக்க ஆணையிட்டதாகப் பின்னர் அறிந்துகொண்டோம். அவர் அவ்வாறு செயற்பட்டு மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்படாதிருந்திருந்தால், அல்லது மின்சாரம் துண்டிக்கப்படுவது தாமதமாகியிருந்தால் வீழ்ந்து கிடந்த மின்கம்பிகளின் மின்னொழுக்கில் சிக்குண்டு ஏராளமான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். அப்படியிருந்தும் அந்தப் புயலில் கணிசமான தொகையினர் உயிரிழந்தார்கள்.

புயலுக்குப் பின் மக்களுக்கான நிவாரணப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டோம். இராணுவ ஜீப் வண்டி ஒன்று உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பணிக்கென வந்து சேர்ந்தது. அதன் சாரதியாக இராணுவச் சிப்பாயே கடமை புரிந்தார். என்வயது இளைஞரான அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும், மனிதநேயத்துடனும் தனது கடமையையும், கடமைக்கு மேலான பணிகளையும் செய்தார்.

பல்வேறு நாடுகளில் இருந்தும், இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்திற்கு வந்தன. அவற்றை மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணி மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச உதவி அரசாங்க அதிபர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் பதவிப் படிநிலை முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் இருந்து வெல்லாவளிப் பிரதேசத்திற்குரிய நிவாரணப் பொருட்களைப் பெற்று, இராணுவ லொறிகளில் கொண்டுவருவது எனது கடமையாகவும், அவற்றைப் பண்டசாலையில் வரவுவைத்துப் பதிவுகளை மேற்கொள்வது தவப்பிரகாசத்தின் கடமையாகவும் உதவி அரசாங்க அதிபரால் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு, வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்கள் ஆரம்பத்தில் கிராம சேவகர்களூடாக எல்லாப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. ஏறத்தாழ இரண்டு மாதங்களாகும்போது மக்களுக்கான விநியோகம் நடைபெறுவது மந்தகதியில் இருந்தது. புயலுக்குப் முன்னர் அலுவலகம் இயங்கிக்கொண்டிருந்த கட்டிடமே நிவாரணப்பொருட்களை வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டது. பக்கத்தில் இருந்த சிறிய கட்டிடம் அலுவலகமாக்கப்பட்டது. பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் புயலுக்குப் பின்னர் அவசரமாகத் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே கூரை ஓடுகளில் இருந்த வெடிப்புக்களால், மழை நேரத்தில் ஒழுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நிவாரணப் பொருட்கள், உதாரணமாக உடுப்புக்கள், படுக்கை விரிப்புக்கள், துவாய்கள், போர்வைகள் என்பன நனைந்து சேதமுற்றுக்கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் உரிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு, சிறப்பாக எனக்கும், குறுமன்வெளி தவப்பிரகாசத்திற்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இன்னும் சில உத்தியோகத்தர்களும், கிராம சேவகர்களும் எங்களிடம் மிகுந்த கவலையுடன் நிவாரணப் பொருட்கள் தேங்கிக் கிடப்பதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கதைத்தார்கள். பிரதான எழுதுவினைஞர் செல்லத்துரை அவர்கள் தனது வழமையான கடமையில்

நேர்மையானவராகவும், நேரம் தவறாமல் வேலைக்கு வருபவராகவும் இருந்தாலும் மக்கள் சார்ந்த இப்படிப்பட்ட விடயங்களில் எந்தவித முன்னெடுப்புக்களையும் எடுக்கக்கூடியவரல்ல. உதவி அரசாங்க அதிபருக்குத் தலையாட்டுவதே இராஜ விசுவாசம் என்று இருந்தார். இந்த நிலையில், உதவி அரசாங்க அதிபரிடம் பண்டங்கள் எல்லாம் பாழாய்ப் போவதைப் பற்றி நானும், தவப்பிரகாசமும், இன்னும் சிலரும் பல தடவைகள் எடுத்துரைத்தும் அவர் ஆம்..செய்வோம் செய்வோம்…என்று சொல்லிக்கொண்டே வந்தார். ஒருநாள்,

“எனக்குத் தெரியும் என்ன செய்வதென்று. நான் சொல்வதை மட்டும் நீங்கள் செய்யுங்கள், எனக்கு ஓடர் போடவேண்டாம்” என்று மிகவும் கடுமையான தொனியில் கூறினார்.

புயலுக்குப் பின்னர், ஆரம்பத்தில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலை செய்யவேண்டியிருந்தது. இப்போது அவர் சனி ஞாயிறு வேலைக்கு வரத்தேவையில்லை என்று சொன்னார். எங்களுக்கு ஒருவகையில் மகிழ்ச்சிதான், எங்கள் வீடுகளும் தரை மட்டமாகக் கிடக்கின்றன. எங்களுக்கும் சொந்த வேலைகள் உள்ளன. ஆனால், உதவி அரசாங்க அதிபரின் போக்கில் ஏற்பட்டுள்ள் அதிருப்தியால், அவரது சொல்லையும், செயலையும் சந்தேகத்தோடு நோக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருந்ததால், விடுமுறை நாட்களில் வேலைக்கு வரவேண்டாம் என்று அவர் சொன்னது முழுமையான சந்தோசத்தைக் கொடுக்கவில்லை.

திங்கட்கிழமை காலை, தவப்பிரகாசம் அலுவலகத்தில் எல்லோருக்கும் கேட்கும்வகையில் சந்தமிட்டார். குறிப்பிட்ட ஒரு அலுவலகத்திற்கு உடுப்புப் பார்சல்களும், கம்பளிப் போர்வைகளும் கொடுக்கப்பட்டமையை யார்மூலமோ அறிந்து கொண்ட தவப்பிரகாசம் கடுங்கோபத்தில் இருந்தார். அவங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். யார் கொடுத்தது? எவரிடமும் கேள்விக்குப் பதில் இல்லை. எல்லோருக்கும் ஆச்சரியம். சிறிது நேரத்தில் உ.அ.அ. வந்து சேர்ந்தார். அவரிடம் கேட்டோம்.

தானே கொடுத்ததாகவும், அதைப்பற்றிக் கேட்க எங்களுக்கு அதிகாரம் இல்லையென்றும் கடுந்தொனியில் கூறினார். மக்களுக்குக் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுக்காமல் வைத்திருக்கிறீங்க. ஆனால் இப்ப அவங்களுக்குக் கொடுத்திருக்கிறீங்க…அது நியாயமில்லை என்று கூறினோம்.

சரி, இனியாவது கொக்கட்டிச் சோலைப் பகுதிக்காவது அனுப்புவோம் என்று இரந்து கூறினோம்.

” வாயைப் பொத்துங்க. எனக்குத் தெரியும் என்ன செய்யவேணும், எப்ப செய்ய வேணும் எண்டு. நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்க. எல்லாரும் போங்க” என்று ஆங்கிலத்தில் கத்தினார்.

அப்போது தவப்பிரகாசம் அவரைப் பார்த்த பார்வை அசம்பாவிதம் ஒன்று நடக்கப்போவதற்கான அறிகுறிபோல இருந்தது. இருபத்தியைந்து வயதில் நிற்கும் எனக்கும் உடம்பெல்லாம் முறுக்கேறியது. கைகள் துருதுருத்தன. ஆனாலும், இயல்பாகவே எனக்கிருந்த பொறுமைக்குணம் என்னைக் கட்டிப்போட்டது. தவப்பிரகாசத்தை மெல்லத் தள்ளி நகர்த்திக்கொண்டே அறையை விட்டு வெளியேறினேன்.

ஏறத்தாழ அரை மணி நேரத்திற்குப் பின்னர், என்னையும் தவப்பிரகாசத்தையும், தன்னை வந்து சந்திக்கும்படி உதவி அரசாங்க அதிபர் சொன்னதாக அலுவலகச்

சிற்றூழியர் வந்து கூறினார். சென்றோம். ஒருநிமிடத்திற்கும் மேல், எங்கள் இருவரையும் மாறிமாறிக் கண்களைக் குறுக்கியபடி கோபத்துடன் பார்த்தார்.

“உங்களுடைய நடவடிக்கை சரியில்லை. என்னுடைய கையில் ஒரு சின்னச் சிராய்ப்பு ஏற்பட்டாலும் அதைச் செய்தவரின் கையையே எடுத்துவிடுவேன். அதுதான் என்னுடைய குணம். இப்ப நினைத்தாலும் எனக்குக்குக் கீழ்ப்படியவில்லை ( insubordination ) என்று உங்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கி விடுவேன். இது உங்களுக்கு இரண்டாவது எச்சரிக்கை (warning ). அடுத்தது வெறும் எச்சரிக்கையாக இருக்காது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று எச்சரித்தார்.

அதுவரை நின்று கொண்டிருந்த நான், அவரின் முன்னால் இருந்த கதிரையை மெல்ல இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். தவப்பிரகாசத்தையும் அமரும்படி சைகை காட்டினேன். மிக ஆறுதலாக அவரிடம் பேசத் தொடங்கினேன். கதிரையை இழுத்தபோது சற்றுக் கலவரமடைந்த அவர், நாங்கள் அமர்ந்து மெல்லக் கதைக்கத் தொடங்கியதும், ஏழனப் புன்சிரிப்பை வீசியபடி, கதிரையில் சாய்ந்து அமர்ந்தார்.

“சேர்…உங்களோட எங்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினை எதுவுமில்லை. நாங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனாலதான், எங்களுடம் பல முக்கிய பொறுப்புக்களை நீங்க தந்தீங்க. ஆனால், நீங்க செய்யுறது சரியில்லை. புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் இங்க ஏன் சேர் கிடந்து பழுதாக வேணும்? அதைச் சனங்களுக்குக் கொடுக்காமல் ஏன் வைத்திருக்கிறீங்க…?அதுதான் எங்கட பிரச்சினை” என்று அமைதியாகச் சொன்னேன்.

“அது உங்களுடைய பிரச்சினையுமில்லை, உங்களுடைய வேலையுமில்லை. நான் சொல்லுறதை செய்யுறது மட்டுந்தான் உங்களுடைய வேலை. நீங்க வாய் திறக்கக்கூடாது” என்பதாக அவர் கடுமையாகச் சொன்னார்.

“சேர் இது எங்களுடைய பிரதேசம். கஸ்டப்படுவது எங்களுடைய மக்கள். நாங்க சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றவாறு எங்கள் பதில் இருந்தது.

” அப்ப சரி..நீங்கள் எதுவும் செய்யுங்கள். என்ன செய்யுறதென்று எனக்குத் தெரியும்” என்பது போலக் கூறி எங்களைப் பயமுறுத்தினார்.

கதிரையுல் இருந்து எழுந்தேன். ” சேர்…உங்களால முடிஞ்சா எங்களை வேலையிலிருந்து நீக்கிப் பாருங்க. வேலை போனா…நாங்க வீதியில நிக்க மாட்டம். களுவாஞ்சிகுடி சந்தியிலதான் நிப்பம். சந்தியத்தாண்டித்தானே நீங்க போக வேணும். அப்ப பார்த்துக்கொள்ளுவம்” என்று திருப்பி அவரை அச்சுறுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறினேன். (அப்படி நான் சொல்லியிருக்கக்கூடாது என்று, பின்னர் நான் எண்ணியதுண்டு, ஆனால், அந்தநேரத்தில் அதைவிடக் கடுமையாக நடந்திருக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம்.)

எங்களுக்கு கோபம் தலைக்கேறியது. அலுவலகத்தில் எல்லோரும் எங்களைச்

சுற்றிக்கொண்டார்கள். என்ன…என்ன…நடந்தது என்று கேட்டுத் துளைத்தார்கள். நடந்தவற்றை எல்லாம் அவர்கள் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதுகூடத் தெரியாத சிறு பிள்ளகளா நாங்கள்?

அந்த நிமிடத்திலிருந்து நானும் தவப்பிரகாசமும் இரகசியக் கலந்துரையாடைகளில் ஈடுபடத் தொடங்கினோம். என்ன செய்வது? அவருக்கு என்ன செய்வது? அவர் இருக்கும்வரை நிவாரணப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்காது. அவரது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு வெளுப்போமா

என்ற அளவுக்கு எங்கள் வேதனைப்பட்ட மனம் எண்ணியது. ஆனால் மூளையோ வேறு வழிகளை உன்னியது! வென்றது மனமா? மூளையா?

அடுத்து என்ன நடந்தது?

 

(நினைவுகள் தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.