கதைகள்

இப்போதில்லை!…. ( சிறுகதை ) …. ஸ்ரீரஞ்சனி….. கனடா.

“அம்மா, போட்டுவாறன்!”, மதுவின் துள்ளல் நடையும், உற்சாகமான குரலும், தந்த இதமான வருடலை மேவி நின்ற, அந்த இனம் புரியாத ஆதங்கம் மீண்டும் என் கண்களை நனைக்கிறது.

“அச்சத்துக்குள் இருந்துதான் துணிவைப் பெற வேண்டும், துக்கத்துக்குள் இருந்துதான் மகிழ்வைத் தேட வேண்டும்”, பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் வார்த்தைகளைத் திரும்பவும் திரும்பவும் மனதுக்குள் வரித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். இருந்தாலும், தொலைத்துவிட்டவைதான் எத்தனை, எத்தனை என்ற பெருமூச்சுத்தான் என்னையும் மீறி எனக்குள் எழுந்துகொள்கிறது.

இலை தெரியாதளவுக்கு பழங்களால் நிரம்பிப்போயிருந்த கறுத்த கொழும்பான் மாமரத்தின் கீழ் சாய்மனைக் கதிரை ஒன்றில் சாய்ந்திருந்தபடி, எனக்குள் நானே தொலைந்து போயிருந்த என்னை நிஜத்துக்கு அழைக்கின்றது, மாமியின் குரல்.

“இருபது வருஷமா இந்த மரம் இப்படித்தானே காய்ச்சுக் கொட்டியிருக்கும், சாப்பிடத்தான் ஆரும் இருந்திருக்க மாட்டினம்… எப்பிடியோ, உயிரோடை திரும்பி வாறதுக்கு எங்களுக்கொரு கொடுப்பனவு இருந்திருக்கு… ஆனா, பாவம், எத்தனை சனம் செத்துப்போச்சுது, சொல்லுபாப்பம். அதை விட, கால், கை இல்லாமல் இருக்கிறவையின்ரைபாடு மிகப் பெரிய கொடுமை, எல்லாத்தையும் நீங்களும் வன்னியிலை பாத்திருப்பியள், என்ன?… சின்னம்மா அக்காவின்ரை வளவுக்கை இருந்து ஆமி இன்னும் எழும்பேல்லையாம். என்னவோ, நீ இங்கை வரேக்கை. நாங்கள் எங்கடை வீட்டிலை இருக்கிறம் எண்டதிலை எனக்குச் சந்தோஷம் பிள்ளை”.

மாமிக்கென ஒரு வாழ்க்கையில்லை, எங்களுடைய குடும்பத்துள்ளேயே அவவின் வாழ்க்கையும் அடங்கிவிட்டது. தனக்கென உறவுகளில்லாத மாமியை நாங்கள் எப்போதும் கவனமாகப் பராமரிக்க வேண்டுமென ராம் அடிக்கடி சொல்வார்.

மா மரத்தின் கிளைகளிடையே ராமின் அந்தக் களை ததும்பும், கனிவான, வட்ட முகம் சிரித்தபடி என்னை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு பிரமையில் மனம் கனத்தது.

அன்றும் இப்படித்தான், இந்த மரத்தின்கீழ், இப்படியொரு சாய்மனைக் கதிரையிலிருந்து காற்று வாங்கிக்கொண்டிருக்கிறேன். என் பக்கத்தில் வந்தமர்ந்த ராம், “கவி, நான் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லோணும். இந்த மரத்தை நாங்கள் தறிக்கத் தேவையில்லை. இதை எங்கடை வீட்டின்ரை ஒரு பகுதியாக வைச்ச்சுக்கொண்டு வீடு கட்டுறதுக்கு ஒரு வழியிருக்காம்”, என்கிறார்.

“உண்மையாவோ சொல்றீங்க, அப்பிடி என்னெண்டு கட்டுறது”, என்னுடைய குரலில் ஆர்வமும் துடிப்பும் பீறிடுகின்றன. ராமின் கையை மிகுந்த காதலுடனும் நன்றியுடனும் பற்றிக்கொள்கிறேன்.

“ஓம், இஞ்சினியர் நாதனோடை கதைச்சனான். அப்பிடிச் செய்தமெண்டால் வீட்டுக்கை வெக்கையாயும் இருக்காது. அதோடை இந்த கறுத்தக் கொழும்பானிலை உனக்கு உயிரெண்டு எனக்குத் தெரியும்தானே!”

என்னைப் பற்றிய பெருமைகளைப் பேசுவதில் என்றுமே சலிப்படையாத மாமி – பழமரங்கள் காய்க்கிறதைத் தூண்டுறதுக்கான வழி, அவற்றின் இனப்பெருக்கச் செயற்பாட்டைத் தூண்டுவதுதான் என, பத்தாம் வகுப்பு உயிரியலில் படித்ததை முயற்சி செய்வதற்காக, மரப்பட்டைக்கு அண்மையா இருக்கிற உரியத்தைப் பட்டைகளாக வெட்டி, கீழே கடத்தப்படும் உணவைத் தடுத்துப் பூக்கக் தூண்டி, காய்க்காமலிருந்த அந்தக் கறுத்தக்கொழும்பானை நான்தான் காய்க்கப் பண்ணினது என்று, – எனது வெற்றியை, ராமுக்கு ஒரு நாள் சொல்லியிருந்தா.

ராமுக்கு என்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் ஒரு தனித் திருப்தி இருந்தது.

அந்தச் சதுரக் காணியை இரண்டாகப் பிரித்து, இரண்டு பொம்பிளைப் பிள்ளையளுக்கும் வீடு கட்டுவதற்கென இடத்தை ஒதுக்கிவிட்டு, மீதி வளவிலை இன்னோரன்ன மரங்களை வைத்து, அதைச் சோலையாக்கினாராம், அப்பா. வேலியோரங்களில் தென்னம்பிள்ளைகள், நடுவிலிருந்த கிணற்றடியைச் சூழ வாழையும் கமுகும், அப்பால் மாதுளை, தோடை, தேசிக்காய், பலா, வீடுகளுக்கு முன்னால் மாமரங்கள் என ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து நடுவித்தாராம். இப்படி அவர் அழகாக வகுத்த திட்டத்தை மூன்றாவதாகப் பிறந்த நான் குழப்பிப் போட்டேன். எனக்கும் அதற்குள் ஒரு வீடு கட்டவேண்டுமென்ற நிர்ப்பந்தம், கறுத்தக்கொழும்பானும் அம்பலவியும் செழித்து நின்ற முன் துண்டுக்குக் காணியைத்தான் எனக்காக்கியது.

அந்த விடுமுறைதான் ராமுடன் நான் ஊரிலை கழித்த கடைசி விடுமுறை. உள்நாட்டுப் பிரச்சினைகள் பூதாகாரமாக வெடித்தபோது, உயிர்களைப் பலியெடுத்தல், உடமைகளுக்குச் சேதம் விளைவித்தல் என அந்த வன்முறைச் செயல்கள் யாவும் உச்சக்கட்டம் ஒன்றை அடைந்த நேரத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவித்து, கனடாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்தில், நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து தப்பிவிட்டோம் என நாங்கள் ஆறுதல்பட்டோம். ஆனால், அதுவும் ஒரு வகையில் ஆப்பாகலாம் என எனக்கு அந்த நேரம் புரியவில்லை.

மேவ முடியாத வேதனைகளை, சோகங்களைத் தந்து விதி என்னை வஞ்சித்த போதும்கூட, எழுந்து நின்று வலிக்கும் வடுவுக்கும் ஒத்தடம் கொடுத்துப் போராடத் துணிந்த, என்னை மிகவும் பாதித்த அந்த நாள், மிகத் துல்லியமாகவும் ஆழமாகவும் என் மூளையில் செதுக்கப்பட்டிருக்கிறது.

பெயர்தெரியாத இலக்கத்திலிருந்து திரும்பத்திரும்ப வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு, உடலும் மனமும் களைத்திருந்த என்னுடைய நித்திரைக் குழப்பிக்கொண்டிருந்தது. முடிவில் எரிச்சலுடன் போனை எடுக்கிறேன்.

“சிக் கிட்ஸ் கொஸ்பிற்றலிருந்து கதைக்கின்றோம்”,

அவ்வளவுதான், ஒரு செக்கன் என்னுடைய இதயம் துடிக்க மறந்தது. எப்படிக் கட்டிலை விட்டெழுந்தேன், எவ்வாறு ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியாது.

மது, தன்னைத் துன்புறுத்துவதற்காக, தன்னுடைய கையை வெட்டியிருக்கிறாள், அதனால் அவசரசிகிச்சைக்காக பாடசாலை அவளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றிருக்கிறது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. என்னுடைய தலை கிறுகிறுத்தது, மனம் கிலேசமடைந்தது.

ஆஸ்பத்திரியில் சுவரை வெறித்தபடி மது படுத்திருந்தாள். அவளின் மணிக்கட்டில் பெரியதொரு கட்டுப் போடப்பட்டிருந்தது. எதை, எப்படி மதுவுடன் கதைப்பது என்றே எனக்குப் புரியவில்லை. திடீரென அவள் என்னை விட்டு வெகு தூரம் சென்றது போலவும், என்னுடைய உலகம் என் கண் முன்னாலேயே வெடித்துப் பிழப்பது போலவும் தோன்ற, வெறுமன அழத்தான் என்னால் முடிந்தது. அது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எதற்காக நான் அழுகிறேன் என்றும், அது தன்னுடைய பிரச்சினையே அன்றி என்னுடையதில்லை என்றும் அவள் என்னை வைதாள்.

நர்ஸ் ஒருவர் வந்து டொக்டர் சில நிமிடங்களில் என்னைச் சந்திப்பார் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் சில நிமிடக் காத்திருப்பு எனக்குச் சில யுகங்களைக் கடப்பது போல மிகக் கஷ்டமாகவிருந்தது.

முடிவில், உளவியலாளர் ஒருவரும், சமூக சேவகர் ஒருவரும் என்னையும் மதுவையும் ஒரு தனியறைக்குக் கூட்டிச் சென்றார்கள்.

ஏன் மது அப்படிச் செய்தவ எண்டு எனக்குத் தெரியுமா, அப்படி நடக்கப் போகுதெனக் காட்டும் ஏதாவது அறிகுறிகளை நான் பார்த்தேனா, மதுவுடன் எப்படி நான் நேரத்தைச் செலவழிக்கிறேன், மதுவின் அன்ரி, மதுவின் மனதை நோகச் செய்யக்கூடிய விஷயங்கள் கதைப்பதை எப்படி நான் தடுக்கலாம், என அவர்கள் கேட்ட கேள்வி மேல் கேள்வியின் பின்னர், முதல் நாள் இரவு அக்கா வீட்டுப் பார்ட்டிக்குப் போனபோது அங்கு நடந்தவைகள்தான் மது தன்னைத் தானே வெட்டுறதுக்குக் காரணமென அறிகிறேன்.

அப்பா, தன்ரை உடம்பைக் கவனிக்காம இருந்ததாலைதான் ஹாட் அற்றாக் வந்து, இளம் வயசிலையே போட்டார், நீயும் அப்படி இருக்காதை, எக்சசைஸ்க்குப் போ என அக்கா சொல்ல பக்கத்திலை இருந்த என்ரை அன்ரி ஒருவர், உன்ரை அம்மா படுகிற கஷ்டம் உனக்குத் தெரியாதா, நீயும் அவவுக்கு ஒரு பிரச்சினையாய் இருக்காதே, என ஏசினாவாம்.

அவை மதுவின் நன்மைக்காகத்தானே சொல்லப்பட்டவை, அதற்காகத் தன்னைத் தானே யாராவது காய்ப்படுத்துவார்களா, எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

“அதிகரித்த உடல்பருமனின் விளைவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ராமின் உயிரைப் பலிகொண்டதாலை, மதுவுக்கும் அந்தப் பிரச்சினை வந்திடுமோ, என அக்கா பயப்படுகிறா. இலங்கையிலை நான் ரீச்சர் வேலை பார்த்தனான், ஆனா, இங்கை ஃபற்ரியிலைதான் வேலைசெய்யிறன். அப்படி நான் தனியக் கஷ்டப்படுறது அன்ரியவைக்குக் கவலையாயிருக்கு. அதுதான் அவை அப்படி மதுவோடை கதைச்சிருக்கினம்”, எனக்குத் தெரிந்த இங்கிலிசிலை அதை நான் அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை அவர்கள்

விளங்கும்வகையில் எப்படிக் கூறுவது என எனக்குத் தெரியவில்லை. என் நாக்குக் குளறுகிறது, கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

ஒரு ரிஷுப் பெட்டியை எடுத்து என்னிடம் நீட்டியபடி, “மது இந்த விஷயங்கள் உங்களைக் கஷ்டப்படுத்துவது பற்றி, பள்ளிக்கூடத்திலை நடக்கிற bullying பற்றியெல்லாம் நீங்க உங்கடை அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறீங்களா?” என்கிறார், அந்த உளவியலாளர்.

“என்ரை பிரச்சினைகளைப் பற்றி நான் அவவோடை கதைக்கேலாது. மற்றவை ஏன் அப்படிச் செய்யினம் எண்டு விளங்கப்படுத்திறதிலைதான் அவ எப்பவும் குறியாயிருப்பா. போதாதுக்குப் பொசிற்றாவா நினை, பொசிற்றாவா நினை எண்டு சும்மா அட்வைஸ்தான் பண்ணுவா. அவவுக்கு என்ரை உணர்வுகள் ஒண்டும் விளங்கிறதில்லை.”

“என்ரை பிரச்சினைகளைப் பாருங்கோ, இவர் போனாப்போலை இரண்டு பிள்ளையளையும் நான் தனியத்தான் வளர்த்தனான், பெருமை பாக்காமல் என்ன வேலை எண்டாலும் செய்வம் எண்டு செய்கிறன். நடந்ததையே நினைச்சுக்கொண்டு கவலைப்பட்டால் என்ன ஆகப் போகுது? அதுதான் பிரச்சினையளை விட்டிட்டு நல்லதை நினை, ஒழுங்காய்ப்படி, மனசை வேறை திசையிலை மாத்து எண்டு சொல்லுறனான். அது அவவுக்குப் பிடிக்கிறதில்லை”.

“நீங்க மதுவின்ரை உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேணும், மிசிஸ் ராம். அவற்றை ஏற்றுக்கொள்ள வேணும். அதுதான் மதுவுக்கு முக்கியம். மது, நீங்க உங்கடை அம்மாவோடை எப்படியெல்லாம் நேரத்தைச் செலவழிப்பீங்கள்?”

தோளைக் குலுக்குகிறாள், மது, பின் “அம்மாவுக்கு ஒண்டுக்கும் நேரமில்லை.வேலைக்குப் போவா. பிறகு வீட்டுக்கு வந்தால், சமைச்சுப் போட்டு, ரிவிலைதான் இருப்பா.”

“என்ரை களைப்புக்கு ஆசுவாசமாத்தான் நான் ரிவி பாக்கிறனான். ஆனால், அவ தான் கதைக்கப் போறன் எண்டு சொன்னால் நான் சந்தோஷமாய்க் கதைப்பன்தானே. அறைக்கே நாயைக் கொண்டுவர வேண்டாம் எண்டு எவ்வளவு சொன்னாலும் அவ கேட்க மாட்டா, நாயோடைதான் உள்ளுக்கை வருவா. அதாலை எனக்கு உடனை கோவம் வந்திடும். நாயை விட்டிட்டு வா எண்டால் பிறகு வர மாட்டா. பிறகு நானாகப் போய் ஏதாவது கேட்டாலும் கதைக்க மாட்டா. பள்ளிக்கூடத்தாலை வந்தவுடனை பிள்ளையள் ரண்டு பேரும் தங்கடை அறையளுக்கே போயிடுவினம், கூப்பிட்டாலும் வராயினம், சாப்பாட்டைக்கூட அறைக்கே வைச்சுத்தான் சாப்பிடுவினம், அப்ப நான் என்ன செய்யிறது. அதாலைதான் ரிவி பாக்கிறனான்.”

“அம்மாவுக்கு வீட்டுவேலையிலை உதவி செய்கிறனீங்களா, மது?”

“ எனக்கு எப்பவும் நிறைய ஹோம்வேர்க் இருக்கும்….” மாறி மாறிக் கதைத்ததன் முடிவில் விரக்திதான் எனக்கு மிஞ்சியது. என்னுடைய பதினெட்டு வயதுப் பிள்ளைக்கும் எனக்கும் இடையில் சமரசம் காண்பதற்கு எத்தனை பேர் என்பதை விட இது சமரசமா இல்லை, வெறும் குற்றச்சாட்டுப் பட்டியலா என வேதனையாக இருந்தது. அவளுடைய டிப்பிறசனுக்குச் சிகிச்சை பெறவென அங்கே முதலில் போனபோது, அவர்கள் என்னவெல்லாம் சொன்னார்களோ அதன்படியெல்லாம் நான் செய்திருக்கிறேன். மதுவுக்குப் பிடிக்காது என்பதால் பார்டிகளுக்குப் போவதைத் தவிர்த்துக் கொண்டேன். சில

விடயங்கள் மதுவுடன் சம்பந்தப்படுகின்றது என்பதற்காக, என் பிரச்சினைகளை அக்காவுக்கு போனில் சொல்லி ஆறுதல் பெறுவதை நிறுத்திக் கொண்டேன். முடிந்த வரையில், மது விரும்பியதெல்லாம் செய்தேன். ஆனாலும், மது என்னை விட்டுத் தூரப் போய்க்கொண்டே இருந்தாள்.

அன்றைய அந்தச் சம்பவத்தின்பின், தொலைபேசி மணி ஒலித்தாலே, என்னவோ ஏதோ எண்டு எனக்கு ஒரே பயமாக இருக்கும். வீட்டுக்கு மது வந்துசேரும் வரையில் கையும் ஓடாது, காலும் ஓடாது. ஏதாவது செய்துவிடுவாளோ என ஏக்கமாக இருக்கும். தற்கொலை செய்திட்டால் அல்லது போதை மருந்துக்குத் தஞ்சமடைந்திட்டால், பிறகு என்ன செய்வது என ஒரே யோசனையாக இருக்கும். அதனால் அவள் மனம் நோகாமல் இருக்கவேண்டும் என மிகுந்த பிரயத்தனம் செய்தேன். எதிலாவது முரண்பட்டால் வாக்குவாதம் வந்துவிடுமோ எனப் பயப்பட்டேன்.

நாளாக நாளாக, எனக்குள் மிகுந்த கழிவிரக்கம் தோன்றியது. ராமினை இழந்த சோகத்தால் நான் நல்லதொரு தாயாக இருப்பதைத் தவற விட்டுவிட்டேனா, ராமுக்கான மதுவின் ஏக்கம் அவளை டிப்பிரசனுக்குள் தள்ளியிருக்கிறதா, அந்த நேரத்தில் குழந்தை விதுவுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருந்ததால், மதுவிடம் ஒரு அக்கா என்ற முதிர்ச்சியை எதிர்பார்த்து அழுத்தத்தை அவளுக்குக் கொடுத்து விட்டேனா, என் கவலைகளில் அமிழ்ந்து என் மகளை நான் இழந்திட்டேனா, என என் மனதில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் பொருள் தேடித் தேடி மனம் நொந்தேன். ஆனால், எனக்கான கவுன்சலிங்குக்கு போக நேரமோ, பணமோ என்னிடம் இருக்கவில்லை.

கனடாவிலை வாழ்க்கையை நிலைப்படுத்த முன்பாகவே ராமுக்கு அது முடிந்து போயிருந்தது. மூன்று வயது மதுவையும், ஆறு மாதக் குழந்தை விதுவையும் விட்டிட்டு, ராம் ஹார்ட் அற்றாக்குப் பலியான போது, எனக்கு எல்லாமே சூனியமானது. இருந்தாலும், பிள்ளைகளுக்காக வாழ்க்கையை ஓட்டியே ஆக வேண்டும் என்றான நிலைமையில், என்னை நானே தூக்கி நிறுத்தினேன். ஃபற்ரியிலை இரவு வேலை, பிறகு விடியப்பறம் வீடு வீடா பேப்பர் போடுவது என ஓடியாடி முடிவதற்குள், மதுவுக்கு பதினெட்டு வயதாகிவிட்டது.

அந்தப் போராட்டத்தில் எங்களுடைய உலகங்கள் எங்களுக்குத் தெரியாமலேயே ஒன்றிலிருந்து மற்றது மிகவும் விலகி, ஒவ்வொன்றும் தனித்துப் போயினவா என மனம் தினமும் ஓலமிட்டது.

தேவைக்கு மட்டுமான கதைகள், ஒட்டுதலற்ற உறவு என கயிற்றில் நடப்பது போல வாழ்ந்துகொண்டிருந்த பொழுதில், எதை எப்படித் தொலைத்தோம், மீள எப்படிப் பெறுவது எனத் தெரியாமல் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள், ஒரு வால்வெள்ளி போல என்னுடைய இரண்டாவது அக்கா மாலா இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்தாள்.

வந்ததும் வராததுமாக, வீட்டில் சில மாற்றங்கள் நடக்க வேண்டுமென்பதில் அவள் மிக உறுதியாக இருந்தாள். ஏன் ஆளுக்கு ஒரு ரிவி என அதைத் தடுத்தாள், மதுவினதும் விதுவினதும் எந்த எதிர்ப்பும் அவளிடம் செல்லுபடியாகவில்லை. உணவு நேரங்களில் சாப்பாட்டு மேசையில்தான் சாப்பிட வேணும் எனப் பிடிவாதமாக எல்லோரையும் அழைத்தாள்.

சேர்ந்திருக்கும் போதெல்லாம், யுத்தத்தின் பாதிப்புகளை மிக இயல்பாக விபரித்தாள். உனக்குக் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று அப்பா சொல்வதை நான் சொல்ல முயன்ற போது என்னில் ஆத்திரம் அடைந்த மதுவுக்கு, நாட்டில் நிகழ்ந்த அனர்த்தங்களை அனுபவித்த மாலா சொன்னவை மனதைத் தொட்டன. ஒரு தடவை இலங்கைக்கு வாங்களேன் என மாலா கேட்டதைத் தொடர்ந்து, அது மதுவுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என அவளின் உளவியலாளரும், ரீச்சரும் ஆலோசனை சொன்னதன் விளைவு, இப்படியொரு நல்ல மாற்றத்தைச் சுலபமாகக் கொண்டுவரும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.

வன்னியில் தொடங்கி யாழ்ப்பாணம் ஈறாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், பெண்கள், வயோதிபர் என உதவிசெய்ததும், அவர்களின் கதைகளைக் கேட்டதும், போரின் அனர்த்தங்களின் சாட்சியங்களை நேரில் பார்த்ததும், மதுவை நிறையவே பாதித்திருந்தன. அது என்னோடு அவளை மனதார ஒட்டவும், தன்னைப் பற்றிக் கவலைப்படுவதைக் குறைக்கவும் செய்தது.

நின்று நிதானிக்க அவகாசமற்ற எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையில், வேதனைகள், இழப்புகள் வரும்போது அவை பெருப்பிக்கப்படுகின்றன என்பது அப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. இங்கிருந்திருந்தால் எங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது என்ற நிதர்சனத்தில் தாங்கொண வேதனை ஏற்பட்டது. போரிலிருந்து வெகுதூரம் சென்று எங்களுடைய உயிர்களைத் தக்கவைத்து விட்டோமே தவிர, அதன் கொடூரத்தின் மிச்ச சொச்சங்கள், எங்களிலும் அதன் அழுத்தத்தைச் சுமத்தத் தவறவில்லை என்ற யதார்த்தத்தில் மனம் விம்மியது. ஆயுதங்களிலிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள், இன்னொரு அகழியினுள் அமிழ்ந்திருக்கின்றோம். அதற்குள் இருந்து வெளியேறக்கூடிய திறன் இருக்காததால், அதன் பின்விளைவாகப் உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம் என்பதில் இதயம் மிகவும் வலித்தது.

இனி மீண்டும் அங்கு போன பின், இந்த நெருக்கம் நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற நினைவு எட்டிப்பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சைத் தவிர எதுவும் தோன்றவில்லை.

போரின் அனர்த்தம் சொல்லொண இழப்புகளை, வடுக்களை கண்ணுக்குத் தெரியத்தக்க நேரடிப் பாதிப்புக்களாக மட்டுமன்றி, இப்படி எத்தனை கண்ணுக்குப் புலப்படாத மறைமுகமான பாதிப்புகளை விதைத்திருக்கின்றது என்பதை இந்த வன்முறையாளர்கள் புரிந்திருப்பார்களா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *