கட்டுரைகள்

சாணக்கியத்தை இழந்து, இணங்கிய அரசியலில் டக்ளஸின் வகிபாகம் !! …..( அங்கம் -02 ) ….. சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா

சாணக்கியத்தை இழந்து, இணங்கிய அரசியலில்

டக்ளஸின் வகிபாகம் !!

ஒரு நடுநிலைப்பார்வை !….. ( அங்கம் -02 )

சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா

தமிழ் எழுதுவினைஞர் சங்கப் பிரதிநிதிகள் 676, காலிவீதி, கொள்ளுப்பிட்டியில் ஒரு காரியாலயம் வைத்திருந்தனர். அங்கு நித்தி பெருமளவு நேரம் சென்று ஆலோசனைகளும் ஒத்தாசைகளும் கொடுப்பது வழக்கம். அங்கு தமிழ் அரசியல் தலைவர்களும், முகவர்களும், கொழும்பு தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களும் ஊடாடினர்.

தமிழர்களுக்காக, நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்த இடதுசாரி கட்சிகளின் போக்கினால் நித்தி பலமாக நிலைகுலைந்திருந்த அதே சமயம், உணர்ச்சியை மாத்திரமே ஊட்டி எந்த விதமான அடிப்படை திட்டங்களும் இல்லாமல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பற்றி தமிழ் அரசியல் தலைவர்களோடு அவர் கவலைப்பட்டார்.

இவற்றினால் வரக்கூடிய பிரளயங்கள் பற்றியும், எங்களது அவசரங்களாலும், அரசியல் ஆதாயத்துக்கு சுலோகங்கள் தேடியதனாலும், அவற்றின் விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதை தான் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டதிலிருந்து கருத்துச் சொன்னார்.

ஆனால், எங்களது தமிழ் அரசியல் தலைவர்களின் தெரிவுகள் அவரது அந்தக் கருத்துக்களில் தங்கியிருக்கவில்லை.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதுவே தொடர்ந்த அரசியலுக்கு அடிப்படையானது. அரசியல் ரீதியாக நாடு இரண்டாக பிரிந்தது. வடக்கிலும், கிழக்கிலும், தமிழர் விடுதலை கூட்டணி

அமோக வெற்றிபெற்று தங்களுக்கு, தனி நாட்டுக்கு அதிகாரம் கிடைத்து விட்டது என்று பெருமை பேசினார்கள்.

ஏனைய பகுதிகளில் சிறிமாவோவின் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டு, ஜே.ஆர்., பெரும்பான்மையுடன் தெரிவானார்.

ஜே.ஆரோடு, தொழிற்சங்க ரீதியாக இருந்த அனுபவங்களினால், சிங்கள, தமிழ் அரசியல் நிலைமைகள் எப்படி போகுமென்று தெளிவாக நித்தி ஊகித்தார்.

1977 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றியைக் கொண்டாட படிப்படியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைத் தாக்குவதிலும் அவர்களது உடைமைகளை சூறையாடுவதிலும் ஜே.ஆர் ஆதரவுத் தரப்புகள் முன்னேறியது. பொலிஸ் பாராமுகமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு, அவர்கள் கேட்ட தமிழீழத்திற்குக் கிடைத்த வெற்றிக்குப் பாடம் கற்பிக்கப் பொலிஸார் வன்முறையை கையிலெடுத்தனர். பொலிஸாரின் அடாவடித்தனத்துக்கு எதிராகக் தமிழர் தரப்பு குரலெழும்பியது. அதனைத் தமிழர்களுக்கு எதிராகவே திருப்பிவிடும் கைங்கரியத்தை ஜே.ஆர். தனது பேச்சுக்களால் முடுக்கிவிட்டார்.

சிங்களப் பகுதிகளிலும் தமிழருக்கு எதிராக எழுந்த வன்முறைகளால் அகதிகள் பல முகாம்களுக்கும் சென்றனர். அப்படியான ஓர் அகதி முகாமான பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நித்தி உடனடி நிவாரணத்துக்காக ஏற்பாடுகள் செய்து, முழுநேரப் பொறுப்புகளையும் ஏற்று, தமிழ் தொழிற்சங்கவாதிகள், கொழும்பில் இருந்த இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் என்று பலரையும் அதில் இணைத்தார்.

தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகமும் தொடங்கப்பட்டு பலபேரின் வேண்டுதலால் அதன் தலைமை பதவியையும் நித்தி ஏற்று, தமிழர்கள் இனிமேல் சுயமரியாதையுடனும் தன்மானத்துடன் வாழவேண்டுமானால், தங்கள் பாரம்பரிய பிரதேசங்களில் தங்களது வாழ்வை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு மரணிக்கும் வரை பணியாற்றினார்.

தமிழர்களை நியாயமாக நடத்தக்கூடிய ஒரு சிங்களத் தலைமை இனிமேல் உருவாவதற்கு வழியேயில்லை என்ற திடசித்தத்துடன் தன்னோடு இணைந்து பணியாற்றியவர்களுக்கு தெளிவாக உபதேசம் செய்தார்.

அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்ய நெடுங்கேணி, முல்லைத்தீவு, வவுனியா, செட்டிகுளம், திருகோணமலை என்று அந்தத்

தள்ளாத வயதிலும், நீரிழிவுநோயினால் சீழ் வடிந்து உபாதை தந்து கொண்டிருந்த பாதத்துடனும், அந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தைரியம் கொடுத்து ஒரு “ கிழட்டு புலி “ என்ற பெயரையும் பாதுகாப்பு படையினரிடம் பெற்றார்.

வடக்கில் மட்டுமல்ல, 1978 இல் சுறாவளியால் கிழக்கு பாதிக்கப்பட்டு செயலிழந்தபோது ஜே.ஆர்., நித்தியை முதலில் அழைத்து அப்பகுதிக்கு என்னென்ன நிவாரணங்கள் வேண்டும் என்று அறிந்து சொல்லுமாறு கேட்டார். அந்த வயதிலும், கிழக்கு மக்களின் புனரமைப்புக்காக தானும் MIRJE கந்தசாமி மற்றும் சிலருடனும் ஜே.ஆர். ஏற்படுத்திக்கொடுத்த விமானப்படை விமானத்தில் சென்று பார்வையிட்டு, உடனடியாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் பேரவையில் இணைந்திருந்த பல இளைஞர்களை நிவாரணப் பணிக்கு உடனழைத்து, பணியாற்றினார்.

என்போன்ற பல பேரை நிவாரணப் பொருட்களோடு கல்முனை, பொத்துவில் ஊடாக மட்டுக்களப்பை வந்து சேரச் சொல்லி, தங்கள் கைகளே தங்களுக்கு உதவவேண்டும் என்பதை செய்து காட்டி விட்டுத்தான் பின்னர் அரசாங்கம் செய்ய வேண்டிய பாரிய வேலைகளை ஜே.ஆருக்கு தெரிவித்தார்.

தேவானந்தாவை நான் 1977இல் நடுத்தர வயதுள்ள இளைஞனாக நித்தியின் வீட்டில் சந்தித்தேன். நித்தி அவரை தனது சகோதரன் கதிரவேலுவின் மகன் என்றும், யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் படிக்கும்போது, தமிழ் விடுதலையில் அக்கறை கொண்ட இளைஞர்களோடு திரிந்ததால் தகப்பனார் அவரை கொழும்புக்குப் படிக்க அனுப்பியதாகவும், கொழும்பு இந்துக் கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டு தனக்கும் ஒத்தாசையாக இருப்பதாகவும் கூறினார்.

TRRO வின் பணிக்காக நித்தியைக் காண்பதற்கு நான் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வதால் எங்களது பரிச்சயம் வளர்ந்தது. இனிய சுபாவமுள்ள, மரியாதைகளை அறிந்த, பணிவுள்ள, பாசமான, நன்றியுள்ள இளைஞனாக டக்ளஸை அக்காலப்பகுதியில் நான் கண்டேன்.

அவருடைய தந்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் நன்கு உறவாடியவர். அவரதும் நித்தியின் இடதுசாரி தொழிற்சங்க ஈடுபாடுகளும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடதுசாரி தத்துவங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபாட்டைத் தந்தன. நானும் நித்தியும், அக்காலத்து அரசியல் நிலைமைகள் பற்றி உரையாடும்போது தேவானந்தா அந்த உரையாடலில் பங்கு பற்றி கருத்துக்கள் சொல்வார்.

தமிழ்த் தேசியம் என்ற ஒன்றே எங்களுக்கான உரிமைகளுக்கும், மரியாதைக்குமான வழி என்ற நிலைப்பாட்டிற்குப் பொதுவாழ்வில் நித்தி வந்திருந்தாலும், தேவானந்தாவின் துடிதுடிப்பிற்கும் ஆயுத மார்க்கத்திற்கும் பெரியளவில் ஊக்கம் கொடுக்கவில்லை. டக்ளஸ் முதலில் படித்து முடிக்கவேண்டும் என்ற எண்ணமே நித்தியினதும் முக்கியமாக லண்டனிலிருந்த நித்தியின் சகோதரர் சச்சிதானந்தாவினதும் விருப்பமாகவும் இருந்தது.

இடதுசாரி கொள்கைகளில் வளர்ந்த நித்தியை ஈடுபடுத்தி ஈரோஸ் ( EROS ) இயக்கத்தை இலங்கையில் காலூன்றச்செய்து வளர்க்கும் எண்ணத்தில் லண்டனிலிருந்து இயங்கிய ஈரோஸின் சில புத்திஜீவிகளான இரத்தினசபாபதி, ராஜூ சங்கர், டாக்டர் ஆறுமுகம், டாக்டர் நித்தியானந்தன், நவசோதி போன்றோர் ஈடுபாடுகள் காட்டினார்கள்.

அவர்களுக்கு ஒத்தாசை வழங்குவதற்காக இறங்கினார் தேவானந்தா.

நித்தியானந்தா, புனர்வாழ்வுக்கழகத்தை பொறுப்பெடுக்கும்போது, தனது பிரத்தியேக உதவியாளராக தேவானந்தாவை நியமித்து தன்னருகிலேயே வைத்துக்கொள்ள விரும்பினார். அது ஒரு தந்தையின் அவா.

ஆனாலும் விதி தனது பாதையை வேறுவிதமாக எழுதியிருந்தது.

அதே சமயத்தில் நித்தியின் தமிழ்த் தேசிய பரிணாமத்தின் வேகத்தை ஒரளவு குறைக்கும் முகமாகவும், தனது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகவும் புதிதாக தோற்றுவித்த பனம்பொருள் அபிவிருத்தி நிறுவனத்திற்கு தலைவராகும்படி ஜனாதிபதி ஜே.ஆர். அவரை அழைத்தார்.

இதனால் சில அங்கலாய்ப்புகள் புனர்வாழ்வுக்கழகத்தில் ( T. R. R. O ) எழுந்தாலும், அவர் தொடர்ந்து கழகத்தின் தலைவராக இருப்பேன் என்ற ஆணித்தரமான நிலைப்பாட்டுடன் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இவ்விடத்தில் சம்பவக்கோர்வைகளுக்காக சிறிது பின்னோக்கிச் செல்லவேண்டும்.

நான், 1979 இல் எமது புனர்வாழ்வுக் கழகத்திற்காக ஐரோப்பிய பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.

அதே காலங்களில் அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித்தலைவராக ஐரோப்பிய பயணத்தை, முக்கியமாக புகலிடத்தமிழர்கள் மத்தியில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக பயன்படுத்தினார்.

அவ்வேளையில் நாமிருவரும் பல சந்திப்புகளை அங்கே ஒருமித்து மேற்கொண்டோம். எங்கள் இருவரையும் தம் இல்லத்திற்கு திரு. வைகுந்த வாசன் அழைத்து, கலந்தாலோசித்ததன் பின்னர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை ( Tamil Co-ordinating Committee – TCC ) தொடங்கி அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இயக்கங்களுக்கு உதவிசெய்வதற்கென்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதற்கென்றும், பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

அவர்களில் பெரும்பாலானோருக்கு, அன்ரன் பாலசிங்கம் உட்பட தமிழ்நாட்டில் யாரைத் தொடர்புகொள்வது மற்றும் தமிழ்நாட்டில் இருப்பிட வசதிகள் என்பன பிரச்சினையாக இருந்தன.

அந்தக்கால கட்டத்தில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் ஒன்றாக இருந்தனர். லண்டனில் அவர்களது முகவராக – பொறுப்பாளராக கிருஷ்ணன் என்பவர் இருந்தார்.

ஆர்வம் காண்பித்தவர்களின் தொடர்புகளை இவரிடம் கொடுத்திருந்தேன்.

சிறிது காலத்தில் தேவானந்தா, ஈரோஸின் மாணவர் உறுப்பான GUES ஐ பொறுப்பெடுத்து, அவர்களோடு இயங்கி, வெகு விரைவில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் ஏற்பாடுகளில், பயிற்சிகளுக்காக லெபனான் சென்றார்.

இந்தக் காலங்களில் தேவானந்தா இயக்கத்தின் பெயரில் டக்ளஸ் என்று அறியப்பட்டார். அந்த பெயரிலேயே இனி இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

டக்ளஸின் இயக்க ஈடுபாடுகள் ஈழம், விடுதலை, இயக்கம் என்று தொடங்கி, பின்னாளில் GUES, அதனோடு ஈரோஸில் பதவி, திருக்கோவில் வங்கிக் கொள்ளையால் சிறையடைப்பு, வெலிக்கடையில் கைதிகளின் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பி, பின்னர் மட்டக்களப்பு சிறை உடைப்பை முன்னின்று நடத்தி, செப்ரெம்பர் 1983 இல் இந்தியா சென்றடைய வைத்தது.

அதனைத் தொடர்ந்த காலங்களில் டக்ளஸுக்கு சவாலாக இருந்தது நிதிப் பற்றாக்குறை. தோழர்களைப் பராமரிப்பது முதலான கஷ்டங்களால் பல குற்றச் செயல்களில் தமிழ்நாட்டில் ஈடுபட்டார்கள் என்று இந்திய சிறையிலடைக்கப்பட்டார். இதோடு இணைந்த ஒரு சம்பவமும் யாழ்ப்பாணத்தில் நடந்தது. 1984 இல் அமெரிக்கப் பிரஜைகளான ஸ்ரான்லி – மேரி அலன் தம்பதிகள் அங்கு கடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச முக்கியம்பெற்றது.

அவர்களைக்கடத்தியவர்கள் 20 கோடி அமெரிக்க டொலர்களை பணயப் பணமாகவும் அத்தோடு இலங்கை அரசின் பிடியிலிருக்கும் இருபதுபேரை விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரியிருந்தனர். பணயப்பணம் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக சென்னையில் தரப்படவேண்டும் எனவும் கோரப்பட்டதுடன் விடுதலை செய்யப்படவேண்டிய இருபது பேரினது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விவகாரத்தில் இந்திராகாந்தி, ஜே.ஆர், றீகன் முதலான நாட்டின் தலைவர்களும் ஈடுபடவேண்டியிருந்தது. இந்திராகாந்தி எம்.ஜி. ஆரின் உதவியை நாடினார்.

எம்.ஜி. ஆர். தமது நம்பிக்கைக்கு பாத்திரமான சென்னை பொலிஸ் கொமிஷனர் மோகன் தாஸிடம் அவர்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சென்னை பொலிஸ் தமது மோப்பங்களினால், ஒருவீட்டில் வரதராஜப்பெருமாள், பத்மநாபா, டக்ளஸ் ஆகிய மூவரையும் பிடித்து. விசாரித்ததில், டக்ளஸினது TLA உறுப்பினர்கள்தான் கடத்தலுக்கு பொறுப்பு என அவரை நெருக்கியதில் அலென் தம்பதியர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களை மோகன் தாஸ் விபரிக்கும்போது, டக்ளஸ் எவ்வளவு இலகுவாக அழுத்தங்களுக்கு பணிந்து விடுவிக்கும் உத்தரவை கொடுத்தார் என்றும் அத்தகைய இயல்புகளைக்கொண்டவர் எப்படி ஒரு தீரமான விடுதலை வீரனாக வருவார்..? என்று தான் எண்ணியதாகவும் சொல்கிறார்.

பின்னர், ஈரோஸிலிருந்து விலகி, ஈ. பி. ஆர். எல். எஃப். பில் ( EPRLF ) இணைந்து பின்னர், பத்மநாபா அணியுடன் சேர்ந்தார். 1987 இல் அங்கிருந்தும் விலகி ENDLF ஐத் தோற்றுவித்து, அதிலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 1989 ஆம் ஆண்டு ஈ.பி.டி.பி. என இயங்கத் தொடங்கினார். இவற்றின் காரணங்களையும் இவற்றின் பின்னாலிருந்தவர்கள் பற்றியும் விரிவாக எழுதினேன்.

அதுபற்றி சம்பந்தப்பட்ட சிலருடன் உரையாடியபொழுது அவர்கள் “ அவை எல்லாவற்றையும் இப்பொழுது ஏன் மீள நெருடுகிறீர்…? “ என்று அபிப்பிராயப்பட்டமையால் பலத்த மனப் போராட்டங்களுக்கு பிறகு அவற்றை விட்டுவிட்டேன்.

வரலாற்றுக்கு தேவையானவை சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

ஈ.என்.டி.எல்.எஃப். ( ENDLF ) என்ற கூட்டு முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். பில் ( EPRLF ) இருந்து பிரிந்த டக்ளஸ், புளொட்டில் (PLOTE ) இருந்து விலகிய பரந்தன் ராஜனுக்கும் இடையில் ஏற்பட்டது.

ராஜன், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். டக்ளஸ் அவருடன் இணைந்து செயலாற்ற இணங்கினார்.

ஆனாலும், டக்ளஸுக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழ் தேசியத்தை முழுமையாக ஏற்று ஆவன செய்யவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. இது, புலிகள் அதனைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தேசியத்துக்கான வலிமையான போக்காக இருந்தது.

ஆனாலும் பொது எதிரியான இலங்கை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புக்களை தவிடுபொடியாக்குவதில் இந்தியாவுடன் சேர்ந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணங்கத் தயாரானார். இந்தியாவின் ஆயுதப் பரிவர்த்தனையில் வெளிப்பட்ட ஏமாற்றமே ராஜனின் குழுவுக்கு மேலதிகமாகவும், தனது தோழர்களுக்கு மிகக் குறைவாகவே தரப்படுவதாகவும் எழுந்த சர்ச்சையில் விலகி, ஈ.பி.டி.பி. ( EPDP ) உருவானது.

பின்னர், டக்ளஸ் பிணையில் வெளியேறி காலத்தை கடத்திக் கொண்டிருந்த வேளை, சிறிலங்காவிலே பிரேமதாஸாவின் ஏற்பாட்டில் புலிகளுடன் பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் , இந்தியாவுடன் இணைந்து செயற்படாத இயக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாகின.

இந்தியப் படைகளை வெளியேற்றி, புலிகளிடம் ஆதரவு கேட்டு பேச்சுக்களை நடத்தியபோதே, படைகள் வெளியேறியபின்னர் புலிகளை கவிழ்க்க போட்ட அத்திவாரத்திற்கு இயக்கங்களிடையே இருந்த பிரிவினையை சாதகமாக பிரேமதாஸா பயன்படுத்தினார்.

சிறிலங்காவின் சென்னைத் தூதரகத்தில் பணியாற்றிய சில சிறிலங்கா உளவுப்படையினர் மூலம் இந்தியாவிலிருந்த மற்ற

இயக்கங்களுக்கு நாடு திரும்பி ஒரு புதிய யுகத்தை கட்டியெழுப்ப வருமாறு அழைப்புகள், பிரேமதாஸாவினால் தனிப்பட்ட ரீதியில் விடப்பட்டன.

அதைத் தொடர்ந்து 1990 இல் டக்ளஸை பிணையிருந்து தப்ப வைத்து , சிறிலங்கா அரசின் உதவியோடு அவர் விமானத்தில் கொழும்பு வந்து சேர்வதற்கு வழிகள் சமைக்கப்பட்டன.

 

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button