கட்டுரைகள்

யார் நீ?… ஸ்வீட் சிக்ஸ்டி…. ச.சுந்தரதாஸ்

தமிழில் மர்மம், திகில், கொலை இவற்றை அடிப்படையாக கொண்டு வெளிவரும் படங்கள் குறைவு. அப்படியே வந்தாலும் அப் படங்கள் பெரியளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனால் விதி விலக்காக 1966 ல் ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது . அந்தப் படம்தான் யார் நீ!

புது நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாகி , பின்னர் அரசியலிலும் நுழைந்து தமிழக முதல்வராகி சாதனை புரிந்த ஜெயலலிதா தான் யார் நீ என்று எல்லோரையும் கேட்க வைத்தவர்!

கொட்டும் மழை , நள்ளிரவு, நாடு ரோட்டில் வெண்ணிற ஆடை அணிந்து ஓர் இளம் நங்கை இளம் டாக்டர் ஒருவரின் காரை நிறுத்தி லிப்ட் கேட்கிறாள். அவள் செல்லும் இடமோ சுடுகாடு. அவள் விரலில் வழிவது இரத்தம், அவள் காரில் ஏறியவுடன் நின்று விடுகிறது கார் வைப்பர் . காரில் இருந்து அவள் இறங்கி நடக்கும் போது சுடுகாட்டின் கேட் தானாக திறந்து வழி விடுகிறது.

இவற்றை பார்த்து விழி விரியும் டாக்டர் தன் அனுபவத்தை தன்னுடைய காதலியிடம் சொல்கிறான். ஒரு நாள் இரவு காதலியை அவள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இறக்கி விட்டு அவள் மாடியில் தன்னுடைய அப்பார்ட்மென்டுக்கு சென்று கையசைக்கும் காத்திருக்கிறான். ஆனால் கால தாமதமாகவே சென்று பார்க்க லிப்ட்டினுள் அவள் மாண்டு கிடக்கிறாள்.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் தாயின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து ஒருத்திக்கு அவள் முகம் கூட பாராமல் தாலி கட்டுகிறான் . ஆ இது என்ன அநியாயம் , சுடுகாட்டுக்கு போக நள்ளிரவில் லிப்ட் கேட்டவள் அவனின் மனைவியாக அவன் முன் அமர்ந்திருக்கிறாள் . யார் நீ என்று அலறுகிறது அவன் மனம்!

ஹிந்தியில் மனோஜ் குமார், சாதனா நடிப்பில் வெளிவந்து சக்ஸஸான Woh Kaun Thi படமே தமிழில் யார் நீ ஆனது. ஏற்கெனவே நீ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்த ஜெய்சங்கர், ஜெயலலிதா இருவரும் யார் நீ யில் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள்.

படம் முழுவதும் ஜெயலலிதாவின் முகம் மருட்சி, நிர்மலம், குழப்பம் என்று கலவையாக தென்படுகிறது. ஒரு இடத்தில் கூட அவர் குரல் உயரவில்லை, மிகையாக நடிக்கவில்லை . ஆனால் படம் பார்ப்போரை ஒரு கேள்விக்குறியில் நிறுத்தி விடுகிறார். ஜெய்சங்கரின் டாக்டர் பாத்திரம் அவருக்கு பொருந்துகிறது. பாடல் காட்சிகளிலும் சோபிக்கிறார். சில இடங்களில் கதாநாயகியிடம் கோபிக்கிறார் .

இரண்டாவது ஹீரோயினாக வருகிறார் குமாரி ராதா. லஷ்மிராஜ்யம், எஸ் வி ராமதாஸ் இருவரும் ரசிகர்களின் சந்தேகப் பார்வைக்கு உள்ளாகிறார்கள் .

ஓய்வின்றி எல்லாப் படங்களிலும் நாகேஷ் நடித்துக் கொண்டிருக்க அவருக்கு மாற்றாக ஏ . வீரப்பன் இதில் காமெடி ரோலை செய்தார். கூடவே மனோரமா இருக்கிறார். இருவர் காமெடியும் எடுபட்டது . இறுதியில் யார் நீ என்று அவரையும் கேட்க வைத்து விடுகிறார்கள்.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சி . எல் . ஆனந்தன் கவனம் பெறுகிறார். ஓ .ஏ .கே .தேவர் பார்வையால் மிரட்டுகிறார். இவர்களுடன் கே. மாலதி, சி. கே. சரஸ்வதி, புஷ்பமாலா ஆகியோரும் நடித்தனர். படத்தை வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். ஓரிரு காட்சிகளிலும் நடித்தார்.

படம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தது. ஆகவே கதை, வசனம், பாடல், இசை. டைரக்க்ஷன் எல்லாமே அப்படியே உரித்தெடுத்தாற் போல் அமைந்திருந்தது. ஹிந்தியில் திகில் படங்களுக்கு திரைக்கதை எழுதுவதில் புகழ் பெற்ற துருவா சட்டர்ஜி இப் படத்துக்கும் திரைக் கதையை எழுதியிருந்தார். பின்னர் மனோஜ்குமார் இதில் ஹீரோவாக நடிக்க தீர்வானவுடன் அவருடைய பங்களிப்பும் திரைக் கதையில் சேர்ந்து கொண்டது. பிரபல ஹிந்தி இயக்குனர் ராஜ் கோஸ்லா படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார்.

ஆனாலும் வேதா தொடுத்த இசை தமிழ் ரசிகர்களை நன்றாகவே ஈர்த்தது. கண்ணதாசனின் கவி வரிகள் மனதை கவர்ந்தன. பார்வை ஒன்றே போதுமே, நானே வருவேன், பொன் மேனி தழுவாமல், என் வேதனையில் உன் கண்ணிரண்டும் , டிகிரிக்கு டிகிரிக்கு டாட்டடா பக்கம் வர பக்கம் வரவா பாடல்கள் இன்றும் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் உள்ளன.

படத்தின் வசனங்களை ஜி .கே. ராமு எழுதினார். டபிள்யு. ஆர். சுப்பராவ் ஒளிப்பதிவில் அவர் திறமை வெளிப்பட்டது. சத்தியம் படத்தை இயக்கினார்.

ஹிந்தியில் இளம் நடிகர்களான மனோஜ், சாதனா நடித்த படத்தை தமிழில் இரண்டு இளம் நடிகர்களான ஜெய்களை போட்டு எடுத்த வீரப்பவை பாராட்டலாம். படத்தில் ஜெயலலிதா, ஜெய்சங்கர் இருவரும் அழகாக ரம்மியமாக காட்சியளிக்கிறார்கள் . திகில் படத்தில் ஒரு வசீகரம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button