கதைகள்

இப்பல்லாம் அப்பப்பவே!…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரபணியன்.

அன்று விசேட நாள். காலையிலே எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் பக்தி
பழமாக உருத்திராட்ச மாலைகளுடன் உடம்பைல்லாம் சந்தணம் நெற்றியில் விபூதி குங்குமப் பொட்டென அமர்ந்திருந்தார். வீடு முழுவதும் நறுமணம் கமழ பூஜையறையில் திரைப்படங்களில் வரும் கைலாயம் மேக மூட்டத்தில் இருப்பது போல் சாம்பிராணிப் புகை மண்டிக் கிடந்தது. பூஜைப் பலகையில் அமர்ந்து வழிபட்டுக் கொண்டிருந்தார்.

கண்கள் மூடி பகவானிடம் ஐக்கியமாகிவிட வாய் இறைவனை போற்றிப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் பாம்புச்செவி பரமசிவத்துக்கு காது மட்டும் அடுக்களையில் மிக்ஸியில் தேங்காய் சட்னிக்கு அரைப்பது முதல் தெருவில் கருவாடு விற்றுக் கொண்டு போவதுவரை துள்ளியமாக கேட்டது. சாம்பிராணிப் புகையின் மணத்தையும் மீறி சட்னி தாளிக்கும் வாசனை மூக்கில் ஏற நாக்கில் ஜலம் ஊறியது. வாழை இலயில் சூடான ஆவிபறக்கும் இட்லியின் மேல் சாம்பரும் அதனருகே சட்னியமாக பகவான் காட்சி கொடுக்கிறாரோ இல்லையோ இட்லியின் காட்சி கிடைக்க பரவசமடைந்தார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க என்ற பள்ளயில் படித்த குறள் நினைவுக்கு வந்தாலும் பசிப்பது போல் உணர்வு வந்தது. இருந்தாலும் இறைவனை
போற்றிப் பாடிக் கொண்டிருந்தார்.

“பச்சைமா மலைபோல் மேனி…..”

“சார், பேப்பர்”

“அடியே, ஜானு பேப்பர் வந்துடுத்து எடுத்து உள்ளே வை”

“பவளவாய் கமலச்செங்கண்……”

“அம்மா, பால்”

“மீனு, பால் வந்துட்டுது அப்பாவுக்கு இன்னைக்கு காபியில டிக்காஷன் சற்று தூக்கலா இருக்கணும்னு அம்மாட்ட சொல்லு”

“அச்சுதா அமரர் ஏறே…..”

“கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி…..”

“அம்மா, காய்கறி வண்டி வந்துட்டான. பிஞ்சு கத்திக்கயா வாங்கி இன்னைக்கு எண்ணெய் கத்தரிக்காய் வெச்சுடு”

“ஆமா, இவன் ஒருத்தன் பகவானிடம் என்ன வேண்டுறானோ? பிஞ்சு கத்தரிக்காய் எண்ணெய் கத்தரிக்காயன்னுட்டு” பரமசிவனின் தாய் முனுமுனுத்தாள்.

மதியம் ஒருமணி. தொலைக்காட்சியில் ஜானகிக்கு பிடித்த சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதில்
பங்கஜத்துக்கு வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. பரமசிவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“ஜானு, பருப்பசாதம் சாப்பிட்டாச்சு சாம்பார் போடு”

“செத்த இருங்கோ பங்கஜத்துக்கு வளைகாப்பு நடந்துகிட்டு இருக்கு” என்ற சொன்னவள் கணவனுக்கு சாம்பார் ஊற்றிவிட்டு வந்தாள்.

“ஜானு, கொஞ்சம் ரசம் ஊற்றிட்டு போம்மா”

“இவரு ஒன்னு, ஒரு சீரியலை ஒழுங்கா பாக்க விடுறாரா?” என்று முமுனத்தபடியே வந்து ரசம் ஊற்றிச் சென்றாள்.

“ஜானு, மோர் ஊற்றுறயா?”

“பங்கஜத்துக்கு ஓரகத்தி வளையல் போடாம முறைத்தபடி நிற்கிறாள். என்னதான் ஆகுதுன்னு பார்க்கலாம்னா விடமாட்டேங்கிறீங்களே. காலையிலதான
ஏழு இட்லிய முழுங்கினீங்க. ஒரு கால் மணிநேரம் பொருத்திருக்க கூடாதா?” என்று சொன்னபடியே மோர் ஊற்றி ஊறுகாயையும் வைத்துவிட்டு தொலைக்காட்சி பக்கம் திரும்பவும்
சென்றாள்.

மனைவி சென்றதும் என்னபாவம் செய்தேனோ நான், சாப்பாட்டை கூட ஒழுங்கா சாப்பிட முடியல என்று தன்னிடமே சொல்லிக்கொண்டான். அதைக் கேட்ட அவன் தாய் நீ செய்த பாவம்தாண்டா இப்படி உன்னைத் தாக்குது என்றாள். இப்பல்லாம் பகவான் செய்யுற பாவத்துக்கு அப்பப்பவே தண்டனை கொடுத்துடறான் என்றாள்.

“அப்படி என்னம்மா பாவத்தை பண்ணிட்டேன் இப்போ”

“அதுதான் காலையில் தவணைமுறையில பூஜை பண்ணினாயே. பச்சைமாமலை போல் மேனி ஜானு பேப்பர் வந்துடுத்து எடுத்து உள்ளவைன்னு. அது பாவமில்லையா? பகவானா இல்லை அவர் உனக்கு பக்கோடா சுந்தரா? அதுதான் ஒழுங்கா சாப்பிட விடாமல் தவணைமுறையில தண்டிச்சுட்டார்.” என்றாள் தாய்.

அப்போது தெருவில் இருவர் “கடவுள் இருக்கிறான் குமாரு” என்று பேசிக் கொண்டு போவது பரமசிவம் காதில் விழுந்தது.

-சங்கர சுப்பிரபணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *