கதைகள்

வலை!…. 4 …. ( குறுநாவல் ) சுபாஷினி சிகதரன் ( மெல்பன் )

அலிசிட்டோஸால் அசைய முடியவில்லை. மிகவும் சௌகரியமான படுக்கையில் வைத்திருந்தும் ஒக்சிஜன் கவசமும், இரத்தக்குழாயில் பொருத்திய மருந்துக் குழாய்களும், இருதயத்தைத் தொடர் கண்காணிப்பில்

வைத்திருக்கப் பொருத்திய அவதானிப்புக் கருவியும், சுற்றிவர உபகரணங்களும் என ஏதோபோல் இருந்தது. சிலந்தி வலையில் அகப்பட்ட பூச்சி போல் சிறைப்பட்டுக் கிடக்கும் நிலையாக இருந்தது. ஒக்சிஜன் குழாய் பொருத்திய முகக்கவசம் தவிர்த்து, செயற்கைச் சுவாசம் முன்பே மறுத்துவிட்டதால் வழங்கப்படவில்லை. மனதிற்கு அது நிம்மதி அளித்தாலும், சுவாசிப்பது கடினமான, விரைவு நிலையில் இருந்தது. அவ்வப்போது மருந்து ஏற்றி, சுவாசத்தைச் சிறிது ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர். சிறிய குழாயை அவ்வப்போது வாயினுள்ளே செலுத்தி இருமுகின்ற சளியை வெளியேற்றினர். தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றிய உடனேயே சிறுநீருக்குக் குழாய் பொருத்தி இருந்தனர். இது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

எழுந்து நின்றுகொள்ள வேண்டும் போல் இருந்தது. தனக்கு சிறுநீர் உபாதை போல் உணர்வாக உள்ளது, குழாயைக் கழற்றி விட்டுப் போத்தல் தரும்படி கேட்டுப்பார்த்தார். அது அவ்வாறு தான் இருக்கும், ஆனால் பிரச்சனை இல்லையெனத் தாதி சொல்லி விட்டாள். இருக்கும்

நிலைமையிலும், சோர்விலும் ஒழுங்காகக் கதைத்து விளங்கப்படுத்த முடியவில்லை. சைகை மூலம் மீண்டும் பிடிவாதமாகக் கூறியபோது, தொலைபேசி மூலமான மொழி பெயர்ப்பாளரைத் தேடினார்கள். எவரும் கிடைக்கவில்லை என மகளுக்கு அழைப்பு எடுத்தனர். சில தாதிகளுக்கு நிதானமாகப் புரிந்து, விளங்கப்படுத்தும் உணர்வு இருப்பதில்லை. ஆங்கிலம் புரியும் என்பதைப் புரிந்து கொள்ளாமலே, படபடவெனத் தாமே பேசி, தாமே முடிவெடுக்கின்றனர்.

கஸென்ராவுடன் தொடர்பை ஏற்படுத்தி காதில் தொலைபேசியை வைத்தனர். என்னென்ன சிகிச்சை செய்கிறார்கள் எனத் தாதியிடம் கேட்டுக் கிரேக்கத்தில் கூறினாள். எப்படியும் எல்லாம் சரியாகும், எதனையும் யோசிக்க வேண்டாம் என்றாள். எல்லோரையும் பற்றிப் பகிர்ந்து கொண்டாள். எது நடந்தாலும் தாம் தயாராக இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் எனவும் உண்மையுடன் பேசினாள். இவ்வளவு காலப் பிரிவையும், வந்து பார்க்க முடியாத சூழ்நிலையையும் சகிக்க முடியாது எல்லோரும் அல்லற்படுவதாகவும், ஆனால் தைரியமாக இருக்குமாறு வேண்டினாள். தமக்கு மிக உயர்ந்த தந்தையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தாள். கட்டுப்படுத்த முடியாமல், மறு கரையில் அவள் அழுவதை உணர முடிந்தது. திரும்பப் பதில் சொல்வதற்கான சக்தி இருக்கவில்லை. கண்ணீர் நிரம்பி வழியும் கண்களைக் களைப்புடன் அலிசிட்டோஸ் மூடிக் கொண்டார்.

விழிப்பு வரும் நேரங்களில் சிறுநீர்வழி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் பிடுங்கி எறிய வேண்டும் போல் சினம் வந்தது. யாமினி முதியோர் இல்லம் வந்த போது இறுதியாகச் சொல்லிச் சென்றதன் நினைப்பையும் இது ஏற்படுத்தி, சிறிது புன்னகையையும் உருவாக்கியது.

ஏனோ அவளைச் சந்திக்க வேண்டும்போல் இருந்தது. அது சிறிது நிம்மதியை உருவாக்கும் எனத் தோன்றியது.

ஒரு நிலைக்குப் பின்னர், எதுவும் முயற்சிக்காது எல்லாம் இழந்து இவ்வாறு தளர்ந்து கிடப்பதில் ஒருவித சுகம் உணர்ந்தாலும், அவ்வப்போது மரணபயம் எட்டி நின்று அச்சுறுத்தியது. ஒருவிதத்தில் விடுதலையாகத் தெரிந்தாலும், மற்றொரு விதத்தில் புரியாத கலவரம் அளித்தது. பிள்ளைகளை அருகில் பார்த்தே ஆகவேண்டுமென மனது ஏங்கித் தவித்தது. எண்ணங்கள் பயக்கொடுக்குகளால் உறிஞ்சத் தொடங்கின.

“நீண்ட பிரிவின் பின்னரும் பிள்ளைகளைக் காண முடியாது இப்படித் தனியே போகப்போகின்றேனா? பிள்ளைகளிடம் கூற நிறைய உள்ளது. முதியோர் இல்லத்தில் உள்ள எனது பொருட்களை என்ன செய்வார்கள்? கொவிட் தொற்று என்பதால் எறிந்து விடுவார்களா? நான் கஸென்ராவையாவது பார்க்காமல் போகக்கூடாது. மரணம் வலி தருமோ தெரியாது. என் மெலிற்றா எனக்காகக் காத்திருப்பாள். அவளை உணர முடிந்தால் எவ்வளவு நிம்மதி. மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? எங்கே செல்வது? ஒருவேளை மெலிற்றாவிற்கு, எனக்காகக் காத்திருக்கும் அனுமதி இல்லாவிட்டால்? நான் என்ன ஆவேன்? மெலிற்றாவின் நிலை என்ன? அவளும் எனக்காக எங்கோ இருந்தபடி தவித்துக்கொண்டிருப்பாளா? யாரிடமாவது கேட்க வேண்டும் போல் உள்ளது. எவரிடம் கேட்பது? கடவுளே! கடவுள் என்பவர் உள்ளாரா? இல்லையெனில் என்ன ஆகும்? மெலிற்றாவிற்கு என்ன நடந்திருக்கும்? இறையே, என்னிலும் உயர்ந்த ஆன்மாவே, எனக்கு மிகுந்த கலவரமும், வேதனையுமாக உள்ளது. என் முடிவு உறுதி எனில், என்னைத் தயவுசெய்து மெலிற்றாவுடன் சேர்த்து விடு. எனக்கு மிகுந்த பயமாக உள்ளது”

நெஞ்சு படபடத்தது. மூச்சு வேகம் அதிகரித்தது. இதயத்துடிப்பு வேகம் நூற்றிப்பத்து, நூற்றியிருபது என அதிகரித்தபடி செல்வதையும், ஒக்சிஜன் வழங்கும் முகக்கவசத்தினுள்ளாக வாயை விரித்துக் காற்றுக்காக அவதிப்படுவதையும் தாதி அவதானித்தாள். இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு சடுதியாகக் குறைந்து எழுபது ஆகியது. இரத்த அழுத்தம் குறைந்துகொண்டு வந்தது. குரல் எடுத்து வேறு பணியாளர்களை அழைத்தபின் அலிசிட்டோஸின் தோளில் கைவைத்து அழைத்துப் பார்த்தாள். எங்கோ தொலைவிலிருந்து யாரோ அழைப்பது போலக் கேட்டது. ஐந்தாறு பேர்கள் சூழ நிற்பது புரிந்தது. இரத்தக்குழாயிலுள்ள ஊசி மூலம் சுவாசத்தை நிதானப்படுத்தவும், வலி குறைக்கவும், அமைதிப்படுத்தவுமென மருந்துகள் ஏற்றினார்கள். சின்ன வலியுடனும், குளிருடனும் கையினூடாக மேல் நோக்கி மருந்து செல்வதை உணர முடிந்தது. சிறிது பிரட்டல் தன்மை ஏற்பட்டது. அலிசிட்டோஸின் இதயத்துடிப்பு வேகம் குறைந்து, இன்னமும் கீழே சென்று மெதுவாக அடங்கத்

தொடங்கியது. எல்லாம் மங்கியபடி வந்தது. வக்கியூம் இயந்திரத்தினுள் உறிஞ்சப்பட்ட சிறு பூச்சி போல முடிவில்லா இருட்டினுள் அலிசிட்டோஸ் இழுத்துச் செல்லப்பட்டார். இளஞ்சிவப்பும், நீலமுமாக இரு ரியூலிப் மலர்கள் தோன்றி, முகத்தருகே இருபெரும் மலர்களாக விரிந்தன. அவையும் மங்கிப்போய் சதுரமான பழுப்பு நிறக்கைக்குட்டை மட்டும் தோன்றிப் பெருத்து எல்லாமே ஒரே வண்ணமாகி மூடிக் கொண்டது. எதுவுமற்று! எல்லையற்று!

முற்றும்.

—–0—–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *