கதைகள்
பாலை நிலா!… 05…… ( நாவல் ) …. க. ஷியா.



நகரம் நோக்கி நகரும் கார் வண்டியில் கொஞ்சம் இளைப்பாற எண்ணி அந்த அரபிய இளைஞனை நோக்கி கதீஜா கேட்கிறாள். சகோதரரே உங்களுக்கு எனது நன்றிகள், தயவுசெய்து என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுங்கள், அல்லது பொலிஸ் நிலையம் எங்கிருக்கிறது என்று கொஞ்சம் காட்டி விடுங்கள் நான் சென்று கொள்கிறேன் என்றாள். அதற்கு அந்த அரபிய இளைஞன் கேட்கிறான், உனக்கு என்ன பிரச்சனை, எதற்காக நீ இப்படி வீட்டை விட்டு ஓடி வந்தாய், உனது எஜமானன் யார் என்று அதற்கு அவளோ தனக்கு நடந்த கொடுமைகளைப் பட்டும், படாதவாறும் சொல்லி விட்டு எங்கே அந்த இளைஞனிடம் எஜமானன் பற்றிச் சொன்னால் மீண்டும் அவர்களிடம் கொண்டு ஒப்படைத்து விடுவானோ என்ற பயத்தில், எனக்கு நான் வசித்த வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும் என்று தெரியாது. இதுவரை நான் எங்கும் வெளியில் போனதில்லை என்று தகவல்களை மறைத்தாள் கதீஜா.
அப்போது அந்த அரபிய இளைஞன் கேட்கிறான் நீ எந்த நாடு என்று அதற்கு கதீஜாவும் நான் இலங்கை நாட்டவள் வறுமையால் தான் இங்கு வீட்டு வேலைக்கு வந்தேன் என்று கூற மீண்டும் அவன் உங்கள் வீட்டில் உள்ளவர்களோடு நீ பேச வேண்டுமா என்று கேட்கிறான். கதீஜாவும், ஆமெனக்கூற அவனது தொலைபேசியிலிருந்து கதீஜாவிடம் இலக்கத்தினை வாங்கி அழைத்துப் பேசும் படி சொல்லவே அவளும், தன் சகோதரனிடம் சொல்கிறாள். எனக்கு இனியும் அவ் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது. உங்களிடமும் சொல்லி எந்த மாற்றமும் இல்லை. ஆகையால் நான் இப்போது இப்படி ஒரு முடிவெடுத்து பொலீஸுக்குச் செல்கிறேன். என்னிடமிருந்து சில நாட்களுக்குள் அழைப்பு வராவிட்டால் நிச்சயமாக நீங்கள் உரிய நடவடிக்கைகளை எடுங்கள். இதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் கதீஜா.
அதன் பின்னர், அந்த அரபிய வாலிபன் கொஞ்சம் கொஞ்சமாக கதீஜாவிடம் கதை கொடுத்தவன் அவளது நிலைமையை நன்கு அறிந்து கொண்ட பின்னர். அவளிடம் சொன்னான் நிச்சயமாக நான் உனக்கு உதவுகிறேன் பயப்பட வேண்டாம். ஆனால் நீ, நான் சொல்வது போல் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் மட்டுமே உன்னை உயிருடன் பொலிஸில் ஒப்படைப்பேன் அல்லது போனால் உன்னைக் கொன்று பாலை வனத்தில் விசி விடுவேன் என்றான்.
ஆனால் என்ன அரபிய நாட்டில் அவ்வளவு சீக்கிரம் எந்தக் குற்றங்களும் செய்து விட முடியாது என்பது மட்டுமே அப்போதைக்கு கதீஜாவிற்கு சாதகமாக இருந்தது. இவன் இப்படிச் சொன்னதும் அறிவு கலங்கியவளாக, என்ன சொல்கிறீர்கள் சகோதரா எனக்குப் புரியவில்லை. ஏனிப்படிப் பேசுகிறீர்கள் என்று அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த அரபிய இளைஞனோ கதீஜா சத்தம் போடாதே அமைதியாக வா இல்லை என்றால் இப்போதே உன்னைக் கொன்று விடுவேன் என்று கத்தியை அவள் முகத்தில் நீட்டினான். மரத்தால் விழுந்தவனை மாடு வெட்டிய பருவமானது கதீஜாவின் நிலை சத்தத்தை வெளியில் விடாமல் உள்ளுக்குள் அழுது கொண்டே இவனிடமிருந்து தப்பிக்க என்ன வழி இவனை எப்படிச் சமாளித்து மீளுவது என்று பதை பதைத்தவளாக மீண்டும் அவனைச் சகோதரா என்று அழைத்தாள் கதீஜா திரும்பிப் பார்த்து முறைத்தவனாக என்ன என்றான் அந்த அரபிய இளைஞன் அப்போது அவள் எதையும் கவலை கொள்ளதவள் போல் எனக்குப் பசிக்கிறது முதலில் ஒரு கடையில் நிறுத்தி ஏதாவது வாங்கித் தருகிறாயா என்று கேட்டாள். அதற்கு அவனோ உன்னிடம் சவூதி அடையாள அட்டை உள்ளதாவெனக் கேட்கவே அவளும் இல்லை என்றாள். அப்படி என்றால் நான் எப்படி வீதியில் உன்னை நிறுத்துவது இங்கு எப்போதும் பொலிஸ் நடமாட்டம் அதிகம் சாதாரணமாக வீதியில் நிறுத்த முடியாது என்று அவனும் கூறவே, எங்காவது வண்டியை நிறுத்தினால் இறங்கி ஓடி விடலாம் என்று திட்டம் போட்ட கதீஜாவுக்கோ பெரும் ஏமாற்றமானது. அந்த அரபிய இளைஞனும் தன் பசிக்குக் கதீஜைவை எப்படியும் இரையாக்கிவிடலாமெ வீதி வீதியாகக் கொண்டு அலைந்து திரிய ஆரம்பித்தான்.
கதீஜாவோ அவனிடம், மீண்டும், மீண்டும் பசிக்கிறது சகோதரா மயக்கம் வரப் பார்க்கிறது எனக்கு உதவுங்கள் என்று அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். ஆனால் எங்கும் வண்டி நிற்பதாக இல்லை.
அவளின் தொல்லை அதிகரிக்கவே தனது வண்டியிலிருந்து ஒரு ஆரேஞ்சுப் பழச் சாற்றுப் பொதியினை நீட்டி உன் பசி தீர இதைக் குடித்து விட்டுச் சத்தம் போடாமல் வா என்றான் அந்த அரபிய இளைஞன். கதீஜாவும் என்ன செய்வது என்று அறியாமல் பசியென்று சொல்லி விட்டோமே வாங்கித்தான் தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் அதை வாங்கிப் பருகினாள். ஆனால் அவனின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க என்ன வழியென அதிதீவிரமாக யோசித்தாள். அப்போது அவளுக்கு, அவள் வீதியில் நின்று இறைவனிடம் பிரார்த்தித்த நினைவுகள் மனதைக் குடைந்தது. அதையே மீண்டும் செய்வது, அதை விட்டால் வேறு வழியில்லை என்று தீர்மானித்த கதீஜா அப்போது அவளின் பிரார்த்தனைக்கு மாறாக ஒரு காமுகனிடமே இறைவன் என்னைச் சேர்த்து விட்டானே என நினைத்து வேதனைப்பட்டவளாக மீண்டும் அவள் மனதிற்குள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
“”” அகிலத்தின் அதிபதியே என்னிறைவா வீதியில் கையறு நிலையில் நின்று நான் பிரார்த்தனை செய்ததை நீ பொருந்திக் கொண்டு ஒளிந்து கொள்ள எனக்கு இந்தக் கார் வண்டியை அனுப்பி உதவினாய், ஆனால் அதிலும் எனக்கொரு சோதனையை வைத்துவிட்டாயே, இந்தக் காமுகனிடமே இப்போது என்மீதான பிடியிருக்கிறது இப்பிடியிலிருந்து நான் மீள வேண்டும். உன்னுடைய தண்டனைக்குப் பயந்து வாழும் நீதிக்காரர்களிடம் நீதியரசனான நீதான் என்னைக் கொண்டு சேர்க்க வேண்டும். நீ நினைத்திருந்தால் என்னை செல்வத்தில் நிலைக்க வைத்திருக்கலாம் ஆனால் நீதான் என்னை ஏழையாகப் படைத்தாய் அதன் காரணத்தால் தான் உனது அருள் நிறைந்த இப்பூமியில் நான் வாழ வழி தேடி வந்தேன். நிச்சயமாக நீ என்னைச் சோதிக்கிறாய் என்பதை நான் உணர்கிறேன். ஏகனே நீ தந்த இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைப் பாதுகாத்தருள். இந்தப் பாலைவன மணலில் என்னைப் புதையுண்டு போக வைத்து விடாதே இறைவா’ வெளி நாடு வந்து வழிதவறிச் சென்று வடுக்களாக கையில் குழந்தைகளோடு கற்பிளந்து செல்லும் பல பெண்களைப் பார்த்து இருக்கிறேன். எனக்கும் அந்த நிலையைத் தந்து விடாதே இறைவா மேலும் இங்கு அவதியுறும் ஏனையோரையும் நீ பாதுகாத்தருள் இறைவா”
என்று கண்ணீர் கன்னங்களில் குளமாகப் புரழ பிரார்த்தனை செய்தாள் கதீஜா. அப்போது ஒருவருக்குத் தீங்கு விளைவித்தால் இஸ்லாம் என்ன தண்டனை வழங்குகிறது என்று ஒரு சிந்தனை அவள் மனதில் தோன்றவே மீண்டும் அந்த அரபிய இளைஞனை சகோதரா என்று அழைத்தாள். அவன் பதில் தரவேயில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தாள் கார் வண்டியின் மேல் கண்ணாடி வழியாக பின்னால் இருந்த கதீஜாவை புருவமுயர்த்தி அவன் பார்ப்பதைக் கண்டு கொண்ட கதீஜா அவளுக்குத் தெரிந்த வகையில் அரபிய பாஷையினால் பேச ஆரம்பித்தாள்.
சகோதரரே எமது மார்க்கத்தில் விபச்சாரம் செய்வது என்பது நரகத்தின் பாதையல்லவா நீங்கள் என்னை அதைச் செய்யத்தானே அழைக்கிறீர்கள் அப்படி என்றால் உங்களுக்குச் சொர்க்கத்தின் மீது நம்பிக்கை இல்லையா இந்த பூமியில் உத்தம தூதர் வாழ்ந்தார் அல்லவா இங்கு நாம் சைத்தானுடைய வழியை அனுகலாமா? நான் வறுமையில் தானே இங்கு வந்தேன் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டாமா? அற்ப சுகத்திற்காக நீங்கள் நரகம் நுழையப் போகிறீரா சகோதரா? உங்களுடன் பிறந்த பெண் சகோதரிகள் இல்லையா அவர்களில் ஒருவளாக என்னை நினைத்துப் பாதுகாக்க உங்களால் முடியாதா? நானிப்போது பாதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என்னிறைவனிடம் எனது கவலைகளை முறையிடுகிறேன். இதற்குப் பிறகு நீங்கள் என்னை எது வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் நாளைய மறுமை வாழ்வை நினைத்துப் பார்த்து விட்டு இறைவனின் வாக்குறுதி மீது உங்களுக்கு அச்சம் இல்லை என்றால் உங்கள் உலக ஆசைப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி விட்டு அழ ஆரம்பித்தாள் கதீஜா……….
ஒளிரும்……..
![]()