வலை!… 02 ….. ( குறுநாவல் ) …. சுபாஷினி சிகதரன்….. ( மெல்பன் )

வலை!… 02
மார்ச் மாதத் தொடக்கத்தில் அலிசிட்டோஸிற்கு ஃபெரிட்டின் ஏற்றுவதற்காக யாமினி போயிருந்தாள்.
“நீ அலிசிட்டோஸ் கலிஸ்டோ அல்லவா? எப்படி இருக்கிறாய்? என் பெயர் யாமினி”.
மிகுந்த ஆர்வத்துடன் கிழவர் வரவேற்றார்.
“யாமினி? யமஹா? நீ அப்போ யமஹாவா?”.
“ஹா.. ஹா… எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள். எனக்கு வேலையிலும் யமஹா என்ற பட்டப்பெயர் உள்ளது. அதுசரி, உன்னுடையதைப் போன்ற கிரேக்கப் பெயர் நான் கேள்விப்பட்டதில்லை. சொல்லுவதற்கே நல்லாய் இருக்கிறது. ஏன் உன் பெயர் ஜோன் அல்லது ஜோர்ஜ் என அமையவில்லை?”.
“கலிஸ்டோ எங்கள் பரம்பரைப் பெயர். உனக்குத் தெரியுமா? கலிஸ்டோ என்றால் அழகு என்று பொருள்”.
“ஓ! அதுதான் எண்பத்தியாறு வயதிலும் அதீத அழகனாய் இருக்கிறாய். உன் அழகியின் பெயர் என்ன? ஹெலனா அல்லது மரியாவா?”.
“அவள் என் மெலிற்றா. அதோ படத்தில் பார். பேரழகி. எமக்கிடையே வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவளுக்கு நான். எனக்கு அவள். பிள்ளைகளையும் அவ்வளவு சந்தோஷமாக வளர்த்தோம். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்”.
மெலிற்றா பற்றிக் கதைக்கும்போது அலிசிட்டோஸ் முகம் பிரகாசித்தது. கண்கள் ஒளி உமிழ்ந்தன.
ஊசி பொருத்தி, திரவத்தை இணைத்தபின் சுவரில் மாட்டியிருந்த படங்கள், அறைக்குள் இருந்த பொருட்களை யாமினி பார்க்கத் தொடங்கினாள். ஒரு தலைமுறை வாழ்வின் பெருமையை அந்தச்சுவர் காட்டி நின்றது.
“மெலிற்றாவிற்கு என்ன ஆயிற்று பப்பா?”
“இங்குதான், ஒரு வருடம் முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் போய் விட்டாள். என்னால் தாங்க முடியவில்லை”.
யாமினி கிழவரின் கையைக் கோர்த்துக் கொண்டாள்.
“புரிகிறது பப்பா. உன் ஆழமான அன்பை உணர முடிகிறது”.
“யாமினி, திருமணம் ஆனதிலிருந்து நாம் பிரிந்ததில்லை. எமக்கிடையில் என்றும் சலிப்பு ஏற்பட்டதில்லை. நான் வசதி இருந்தும், ஒருபோதும் குடும்பம் விட்டு சந்தோஷம் அனுபவித்ததில்லை. எல்லாம் குடும்பத்திற்காகத்தான். மற்றவர்களுடன் அளவாகவே நான் பழகிக் கொள்வேன். எதனாலும் மெலிற்றாவும், பிள்ளைகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். மெலிற்றா எல்லாவற்றிற்கும் மேலாக எம்மை மிகுந்த மகிழ்ச்சியாக வைத்திருந்தாள். இருவரும் எல்லாவற்றையும் கதைத்துப் பகிர்ந்து கொள்வோம். நீ அறிவாயா யாமினி? நானும் மெலிற்றாவும் வானொலிப்பெட்டியில் பாடல் போட்டுவிட்டு ஜோடியாக நடனம் ஆடுவோம். பிள்ளைகள் மிகுந்த குதூகலத்துடன் சேர்ந்து ஆடிக் குதிப்பார்கள்”.
அலிசிட்டோஸால் கதை சொல்வதை நிறுத்த முடியவில்லை. வார்த்தைகளை மீறி முகத்தின் பேரொளி எல்லாவற்றையும் விளக்கியது.
“பப்பா, நீங்கள் இருவரும் ஒருவருக்காக இன்னொருவர் எனப் படைக்கப்பட்ட ஆன்மக் காதலர்கள். அதுதான் இந்த நெருக்கம். பெரும்பாலும் இவ்வாறு அமைவதில்லை. பார், நீ ஒரு உயிருக்குயிரான காதலனாகவும், மிகச்சிறந்த குடும்பத் தலைவனாகவும் இருந்துள்ளாய். ஒரு பெண்ணுக்குத் தேவையான அன்பையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளாய். அதனை தனக்குத் தன்னலமாகப் பாவித்து அலட்சியமாக வாழாமல், மெலிற்றாவும் உன்னில், குடும்பத்தில் உயிரையே வைத்திருந்திருக்கிறாள். எல்லாக் கடமையும் செய்திருக்கிறாள்”.
“அதுவேதான் என் பெண்ணே. அவளால் நான் கொண்ட நிறைவு எல்லையற்றது. என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோருமே நன்றாக இருக்கிறார்கள், குடும்பத்தை நன்றாய் நடத்துகிறார்கள். எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள். ஏன் முரண்பாடு கொள்கிறார்கள்? பிரிகிறார்கள்? நீ நல்லாய் இருக்க வேண்டும். நன்றாக இருக்கிறாய் அல்லவா? உன் குடும்பம், பரம்பரை நன்றாக வாழ வேண்டும். நீ இப்படியே எப்போதும் சிரிப்புடன் இருக்க வேண்டும்”.
யாமினிக்கு நெஞ்சு அடைத்தது. கிழவன் தன் முழு இன்பமும் உலகமும் அனுபவிக்க வேண்டும் எனும் மனநிலையில் இருக்கிறது.
வாழ்வின் நிறைவால் வாழ்த்தத் தோன்றுகிறது. பழைய வாழ்க்கையின் நினைப்பில் மூழ்கித் திளைத்து தன்னை மறந்த ஒரு மனநிலையில் இருந்தபடி பேசும் மனிதனிடம் வேறு எதைப்பற்றி விளக்க முடியும்? ஆனால் இப்போது பிரிவின் கொடுமையால் அல்லலுறுகிறது. காதலை இழக்காத கண்ணீர் தளும்பி விட்ட கண்கள் மத்தியான வெயில்நேரத்து நீர்த்தேக்கம் போல பளபளக்கின்றன.
“பப்பா, நான் சும்மா கதைக்காகச் சொல்லவில்லை. எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன். நீ இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. எப்படியும் இறந்தபின் ஆன்மா இருக்கும்தானே. இது வெளிப்படை உண்மை. உன்னால் மெலிற்றாவை உருவமின்றிக் கற்பனை செய்ய முடியாது என்பது புரிகிறது. என்னால் கூட முடியாது. ஆயினும் நாம் எல்லோரும் அந்த நிலைக்கு போகத்தானே போகிறோம். மெலிற்றா உன்னருகிலேயே இருந்து உனக்காகக் காத்திருக்கிறாள் என ஆறுதல் கொள்வது நல்லது. இவ்வளவு அன்பானவள் உன்னுடனேயே இருப்பாள். ஒரு நோயாளியை நீ ஒருநாள் மரணிப்பாய் என நான் கூறுவது தவறு. ஆனால் அதுதான் எவருக்கும் நியதி, இல்லையா? எப்படியும் நீ இன்னும் சிறிதுகால வாழ்வின் பின் மெலிற்றாவிடம் சேர்ந்து விடுவாய். நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள். இதுவே நீ உன்னைத் தேற்றும் வழி. வாழ்க்கை ஒரு வட்டம்தானே. நான் எங்கேயோ வாசித்துள்ளேன். தொடர்பு உடையவர்களே எல்லாப் பிறவிகளிலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு உறவாகப் பிறப்பார்கள் என. என் நம்பிக்கைகளை உன்மேல் ஏற்றவில்லை. ஆனாலும், நீயும், மெலிற்றாவும் கால காலமாக ஒன்றாகவே இருக்கிறீர்கள் என்பது என் எண்ணம். இது வெறும் சிறு இடைவெளி மட்டுமே”.
அலிசிட்டோஸ் புன்னகைத்துக் கொண்டார். “அவள் என்னுடன் தான் இருக்கிறாள். என்னுடன் தான்!” என முணுமுணுத்தார்.
அலிசிட்டோஸிற்கு சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. எழுந்து நிதானமாக நடக்க முடியவில்லை. மனமும், உடலும் அதீத சோர்வு நிலையில் இருந்தன. இரண்டு பேர்கள் தேவைப்பட்டது. யாமினி வெளியே சென்று முதியோர் இல்ல அலுவலகத்தில் கேட்டு பெல்லாவை அழைத்து வந்தாள். பெல்லா அண்மையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பிலிப்பீனோக்காரி. உரத்த குரலில் வெளிப்படையாகப் பேசுபவள். இருவருமாக அலிசிட்டோஸை இருபக்கமும் தாங்கிப்பிடித்து மலசலகூடத்தில் நிறுத்தி வைத்தனர்.
“பப்பா நாம் உன்னைப் பிடித்திருக்கிறோம். நீ உன் வேலையைக் கவனி”.
அலிசிட்டோஸிற்கு உடல் உபாதை. நீண்ட நேரம் எடுத்தது.
“உனக்கு எத்தனை பிள்ளைகள்?” என்றாள் பெல்லா.
“மூன்று. முதலில் இரண்டு ஆண் பிள்ளைகள். பின்னர் கஸென்ரா பதினைந்து வருடம் கழித்துப் பிறந்தவள்”.
பெல்லா கண்ணைச் சிமிட்டினாள். “என் கடவுளே! நீ அதீதமாகப் பாவித்து விட்டாய் மனிதனே. அதுதான் பார், இப்போது நீண்ட நேரம் இதில் நின்று கஷ்டப்படுகிறாய்”.
கிழவர் குலுங்கிச் சிரித்ததில் மலசலகூட இருக்கையின் விளிம்பெல்லாம் சிறுநீர் பரவித் தெறித்தது. கிழவரைத் திரும்பவும் கட்டிலில் இருத்திய பின் அட்டகாசமாகச் சிரித்தவாறே பெல்லா இடத்தைத் துடைத்துத் துப்பரவாக்கினாள்.
பெல்லா போய் விட்டாள். அருகில், இழுப்பறையைத் திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்குட்டைகளிலிருந்து பூக்கள் தைத்து, எழுதிய ஒன்றை அலிசிட்டோஸ் எடுத்துக் காட்டினார்.
“இதனைப் பார் யாமினி. இதற்கும் கஸென்ராவின் பிறப்பிற்கும் தொடர்பு உள்ளது. உனக்குச் சொல்லுவதற்குத் தயக்கம் ஏற்படவில்லை. உண்மையில் கஸென்ராவின் பிறப்பு நாங்கள் ஒரு உன்னதமான மன நிலையில் இணைந்ததன் பின் நிகழ்ந்தது. இடையில் வேறு பிள்ளைகள் பிறக்காததற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை ஏனென்று தெரியவில்லை, ஒரு நிகழ்வு முடிந்து வீடு வந்த பின்னர் இருவரும் அங்கு ஆடிய நடனத்தைப்பற்றி ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டோம். அந்தச் சீண்டல் ஒரு துடிப்பான மனநிலையை ஏற்படுத்தி எம்மைச் சேர வைத்தது. அன்று மெலிற்றா அதியுயர்வான மகிழ்ச்சி நிலையில் காணப்பட்டாள். மறுநாள் எனக்குப் பரிசாக இந்தக் கைக்குட்டையை வழங்கினாள். மெலிற்றா அழகான தையல் வேலைகள் செய்வாள். அந்த நாளின் அன்பில்தான் கஸென்ரா பிறந்தாள்”.
“நீ இந்தக் கதையை கஸென்ராவிடம் கூறியுள்ளாயா?”
“இன்னமும் இல்லை. கூற வேண்டும் போல் இருக்கும். ஆனால் தமையன்மார்களையும் கூட்டி வைத்துக் கொண்டு பகடி பண்ணுவாள். அதுதான் கூச்சத்தில் கூறவில்லை”.
“நான் இப்போது வைத்தியசாலை திரும்பிய பின் உனது இரத்தப் பரிசோதனை, மற்றைய விபரங்கள் பற்றி கஸென்ராவுடன் கதைப்பேன்”.
“கஸென்ரா நல்ல பெண். பார், நீ கதைத்தவுடன் பழகிவிடுவாய்”.
“அப்படியானால், உன் காதல் கதை பற்றி நானே கூறுகிறேன். என்டக்ஸி?”.
“என்டக்ஸி என்றால் சரிதானே என்று பொருள். உனக்கு கிரேக்கச் சொற்கள் தெரியுமா?”
“உன்னைப் போல் வயதானவர்களை மயக்க அவ்வப்போது சில சொற்களைக் கேட்டுப் பழகிக்கொள்வேன். எல்லாம் மறந்து விடும். இந்த ஒரு சொல் மாத்திரம் நினைவில் உள்ளது”.
“கஸென்ராவிடம் ஒரு துணையை எப்படியாவது தேடி எடுக்கச் சொல்கிறாயா? நாற்பத்தி நான்கு வயதாகி விட்டது. ஒருவனுடன் சில வருடங்கள் இருந்து
பிரிந்து விட்டாள். அதன்பின் எவரையும் திருமணம் முடிக்கச் சம்மதிக்கவில்லை”.
“நான் உண்மையில் அவள் திருமணம் முடிக்காததற்காக அவளைப் பாராட்டுவேன்”. அலிசிட்டோஸின் ஈரக் கன்னங்கள் இரண்டையும் கிள்ளி ஆட்டினாள் யாமினி.
“பப்பா, இதுபற்றி கவலைப்படாதே. உன் ஒற்றுமையான வாழ்வை வைத்து எல்லாவற்றையும் எடை போடாதே. உன் கஸென்ரா தனியே சந்தோஷமாக இருக்கக் கூடும். அல்லது துணைக்காக ஒரு காதலனைக் கண்டடையக் கூடும். உன் கிரேக்கக் கலாச்சார வழக்கத்திற்காகக் கட்டாயப்படுத்தி வாழ்வை மாற்றிச் சிரமப்படுவதற்குப் பதில், இது மேலானதாக அவளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அவள் நன்றாக இருப்பாள்”.
அலிசிட்டோஸிற்கான அலுவல் முடிந்ததும், யாமினி புறப்படத் தயாரானாள்.
“நான் கிளம்பப்போகிறேன் பப்பா. மனதைக் குழப்பாமல் சோர்வற்று இருக்கப் பார். உனக்கு இரும்புச்சத்து ஏற்றியாகி விட்டது. இனிக் கொஞ்சம் உடற்பலம் வந்துவிடும். வயதான மனிதனே, இனிமேல் நீ நேராகப் பிடித்து சிறுநீர் கழிக்கலாம். எண்டக்ஸி?”.
“குறும்புக்காரப் பெண்ணே..” எனக் கையை வீசினார் அலிசிட்டோஸ்.
யாமினி வாய்விட்டுச் சிரித்தாள். அவரை அணைத்துக் கன்னத்தோடு கன்னம் இழைத்து விடைபெற்றுக் கொண்டாள்.
(தொடரும்)
———
![]()
வலை!… 02