கதைகள்

பாலை_நிலா!….. 03 …. ( நாவல் ) …. க. ஷியா.

இப்படியே நாட்கள் நகர்ந்தது, இரண்டு வாரங்கள் மூன்றானது. வீட்டினுள் தான் இவ்வளவு அராஜகம் என்றால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்து விட்டால் அவளுக்கு நரகத்தின் இரட்டிப்பு வேதனை என்றாகிவிடும். ஆமாம், ரியாத் அல் கத்தானியிலிருந்து ஒவ்வொரு வியாழனும் தமாம் நோக்கி உல்லாசம் காணச் சென்றுவிடுவது எஜமானர்களது வழக்கம். கதீஜா வீட்டில் வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள் குழந்தை மலம் கழித்த படி நிற்கும், இன்னும் ஒன்று அப்போது தான் சாப்பிட ஏதாவது செய் என்று கொண்டு நிற்கும் இப்படி ஐந்து குழந்தைகளும் கதீஜாவைக் கடைந்து கொண்டிருக்கையில் எஜமானி, படுக்கையறைக் கதவினைத் திறந்து திடீர் திடீரென வெளியில் செல்ல வேண்டும் நான்கு நாள் பயணம், இரண்டு நாள் பயணம் செல்ல வேண்டும். சீக்கிரம் துணிமணிகளை எல்லாம் எடுத்து வை. தேவையானவற்றையெல்லாம் எடுத்துத் தயாராகு பிள்ளைகளை தயார் செய் உணவுப் பொதிகளை வண்டியில் ஏற்று இத்தனைக்கும் ஒரு மணிநேரம் தருகிறேன் என்று சொல்லி விட்டு மீண்டும் கதவினைச் சாற்றிக் கொள்வாள்.
கதீஜாவோ பம்பரம் போல் சுழன்று டம்கட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்வாள். ஆனாலும் குழந்தைகளின் அடாவெடித் தனத்தால் சில சமயங்களில் பயணத்திற்கென எடுத்து வைக்கும் பொருட்கள் உரிய இடத்தில் இருப்பதில்லை. இதனால் அவளே எஜமானர்களிடம் அதிகம் திட்டு வாங்குவதுண்டு. ஒவ்வொரு முறையும். கதீஜா வெளிப் பயணங்கள் செல்லும் போது அவளுக்கு, ஆடை மாற்றிக்கொள்ள நேரமிருக்காது. குழந்தை சிறுநீர் கழித்திருப்பான் அவளது ஆடையில், அல்லது வியர்வையால் நனைந்திருப்பாள், அல்லது வேலைக் கெடுபிடியில் ஊற்றையாக நின்றிருப்பாள். இவ்வாறு எப்படி நின்றாலும் அப்படியே வண்டியில் ஏறவேண்டியதுதான். ஆளுக்கும் ஆடைக்கும் சம்மந்தமே இல்லாது சாக்குப் போர்வை போலொரு பருத்த அங்கியோடு அவள் காலம் கழிந்தது. சாதாரணமாக நமக்கே உடலுக்கு அளவான சட்டை இல்லாவிட்டால் எவ்வளவு அசௌகரியம் ஏற்படும் அப்படி இருக்கையில் அத்தனை வேலைகளைச் செய்யும் அவளுக்கு சீரான உடலுக்கு அளவற்ற பருத்த ஆடைகளை அணிவதென்பது எப்படியிருக்கும்.
இதில் வேறு ககுவா எனும் அரபியன் பாணம் செய்ய வேண்டும் ஆனால் அது எப்படிச் செய்வது என்று அவளுக்குத் தெரியாததால் கோப்பியோடு சீனியையும் கலந்து கொடுத்து விட்டாள். அதற்கு எஜமானி திட்டித் தீர்த்தாள் அதன் பின்னர் அவள் எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுக்கவே அவள் கற்றுக் கொண்டாள். எத்தனை வேலைகள், எத்தனை வலிகள், வேதனைகளோடு இருந்தாலும் கதீஜாவுக்கோ வேலைக்கு மட்டும் பஞ்சமில்லை. ஓய்வு என்பது கனவாகிப் போனது.
இப்படி இருக்கையில், தமாம் செல்ல ஆயத்தமான நிலையில் கதீஜா பயணப் பொருட்களால் வண்டியை நிறைத்தாள். அவளது பயணப் பையையும் எடுத்துக்கொண்டாள். ஆனால் ஆடை மிகவும் அழுக்காக இருந்தது அதை மாற்றி விட்டு வருகிறேன் கொஞ்சம் நேரம் தாருங்கள் எனக் கேட்கவே அதெல்லாம் தேவையில்லை வண்டியில் ஏறிக்கொள் என்றாள் எஜமானி. தாய் நாட்டில், தன் வீட்டில் வறுமைக்குப் பெயர் போனாலும், தூய்மையில் வள்ளலாக இருந்த கதீஜாவுக்கோ தற்போது அவள் வாழும் நிலையை நினைத்து ஏங்கிப் போனாள். மனம் விட்டுச் சொல்லியழக் கூட நாதியற்ற சிறை வாழ்க்கை. என்ன செய்வது என்று இறைவனைத் தொழுது அழுதவளாகச் சகித்துக் கொண்டு கதீஜா வண்டியில் ஏறினாள்.
அதன் பின்னர், அவள் வாழ்க்கை உறக்கம் எல்லாம் பயணமும், பயணம் செல்லும் வண்டியும் என்று மாறியது. தலை சீவிக் கொள்வது என்பது அவளுக்கு மறந்தே போனது. அவள் ஆடைகளை நிதானித்துப் பார்த்து அணிவதையும் அவள் மறந்தாள். இப்படியே ஒரு மாதம் கழிந்தது. கதீஜாவின் முதல் சம்பளம் இலங்கைக்கு அவள் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவள் சதிரத்தைப் பிழிந்து எடுத்ததற்கான கூலியது. அதைக்கூட அவள் கைகளில் வாங்கிக் கண்கொண்டு பார்த்து மகிழவில்லையவள். எஜமானன் அவளையழைத்துக் கதீஜா உன் சம்பளப் பணம் உன் நாட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டது என்று கூறியதோடு சரி.
இப்படித்தான் ஒருமுறை தமாம் சென்றிருந்த போது, நீர்த்தடாகத்திற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்ற எஜமானி கதீஜாவின் தோள்களில் ஈர ஆடைகள் கொண்ட மூன்று பைகளையும் ஏற்றிவிட்டு அவளது கைக்குழந்தையையும் தூக்கி வரும் பாடி சொல்லி விட்டு முன்னால் நடக்கலானாள். கதீஜாவும் சுமை சுமக்கும் கழுதை போலே அத்தனையையும் சுமந்து கொண்டு திணறித் திணறி நடந்தாள். அங்கு அத்தடாகத்தில் நின்ற அனைவரும் கதீஜாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர்.
ஆனால் எஜமானியோ இவளைக் கணக்கெடுக்காது. சீக்கிரம் வா என்று அதட்டிச் சென்றாள்.
அவளும், தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே பாஷை கூடத் தெரியாத தேசத்தில் வந்து அடிமாடாகி விட்டோமே எப்படி இதிலிருந்து மீள முடியும் என்று ஏங்கிய படி நடந்தாள்.
ஒவ்வொரு முறையும் அவளது எஜமானி கதீஜா வா வெளியில் செல்வோம், கதீஜா வா ஷாப்பிங் போவோம் என்று அழைத்துப் போவாள் ஆனால் ஒரு சிறு நொடி கூட கதீஜாவால் எந்தச் சந்தோஷங்களையும் அனுபவிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு ரொபோ போல் சொல்லும் பாஷைக்கு எல்லாம் ஆடிவிட்டு வருவதுதான் மீதம். நான் முன்பு கூறியது போல கதீஜாவின் எஜமானி ஜீஷான் எனும் கிராமப் பகுதியைச் சேர்ந்தவள் எமது இலங்கைப் பெண்களைப் போலவே பொது நிறமாகவும் சற்று வரண்ட தோற்றத்திலும் காணப்பட்டதால். இருக்கும் வேலைகளுக்குள் இன்னுமொரு வேலையாக பல வகையான அழகுசாதனப் பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு இரவின் நடுச்சாமத்திலும் அவைகளைப் போட்டுத் தன்னை மசாஜ் செய்து அழகு படுத்தும் படி கதீஜாவிற்குக் கட்டளையிடவே கதீஜா சில சமயங்களில் சலனத்தோடும், பல சமயங்களில் கண்ணீரை விழுங்கிக் கொண்டும் அப்பணியைச் செய்தாள்.
அவளது எஜமானன் இருக்கும் போது அவர்களது தனிப்பட்ட குளியலறைக்குச் சென்று எஜமானிக்கு அப்பணிவிடை செய்வதை அவள் ஒருபோதும் விரும்பாதவளாக இருந்த போதிலும் மறுக்க முடியாத சூழ்நிலையில் காலம் அவளைத் தள்ளியதால் அப்பணியைச் செய்தாள். என்னதான் எஜமானி தன்னைப் போன்ற ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு பெண்ணை இன்னொரு பெண்கூட ஓரளவுக்கு மேல் உற்றுப் பார்க்க முடியாது அல்லவா? அது மனதுக்குள் எவ்வளவு கூச்சத்தைத் தரும், எவ்வளவு அருவருப்பைத் தரும். நினைத்துப் பார்க்கையில் நமக்கே வெறுப்பாகவுள்ளது அல்லவா? ஆனாலும் கதீஜா அவளது வறுமையை மனதில் கொண்டு அதையும் தாங்கினாள்.
கதீஜாவுக்கு அங்கு வழங்கப்பட்ட வேலைகளை ஒரு ஆணுக்கு வழங்கியிருந்தாலும் அவர் கூட களைத்து வெறுத்து ஓடியிருப்பார். சாப்பாடு தூக்கம் இவை இரண்டு தானே ஒரு மனிதனை மனிதனாக இயங்க வைக்கும் அவையும் சீராக இல்லாமல் பலர் செய்யும் வேலையை ஒரு ஆளாகச் செய்வது என்பது ஆரோக்கியமான விடயமல்லவே. அவளது எஜமானன் தனக்கு விரும்பும் இடத்தில் விரும்பிய நேரத்திலெல்லாம் ஒரு சீலைக் கூடாரத்தை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிக் குடிசை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அக்கூடாரத்தின் இரும்புக் கம்பிகள் மிகவும் இடை கூடியதாக இருக்கும். இருவர் சேர்ந்து தான் அதை நகர்த்த வேண்டும். ஆனால் அதையும் கதீஜாவையே செய்யும் படி பணித்தார்கள். தன்னால் தூக்க முடியாது போன கம்பிகளை இழுத்துக்கொண்டு செல்வாள் கதீஜா.
ஆனால் அங்கு வாசல்கள் தோறும் சீமெந்துத் தரைகளாக அல்லது சொரு சொருத்த மாபிள் தரைகளாகவேயிருக்கும். அதில் இக் கம்பிகளை இழுத்துப் போகும் போது கம்பி இழுபடும் சத்தம் கேட்டால் போதும் உடனே எஜமானன் தனது மாறு கண்ணைப் பிரட்டிக் கொண்டு மூக்குத் துவாரத்தைத் தான் அணிந்திருக்கும் கண்ணாடிக்கு மேலாக உயர்த்தி முதலை போல் முகத்தை வைத்துக் கொண்டு கதீஜாவைத் திட்ட ஆரம்பித்து விடுவார்.
ஒவ்வொரு முறையும் தன்னிடம் தவறு என்று அவர்கள் காணும் போதெல்லாம்.
யா ஹைவான் (ஓ…. மிருகமே)
யா ஹரூப் ( ஓ…. செம்மறியாடே)
யா மஜ்னூன் ( பைத்தியமே)
என்று சத்தமாக கடுகடுத்த முகத்தோடு கதீஜாவை அழைத்து ஏசுவார்கள். பாஷை தெரியாது போனாலும் நம்மை ஏதோ தரக்குறைவான வார்த்தை சொல்லி ஏசுகிறார்கள் என்று உணர்ந்து கொள்வாள் கதீஜா. எல்லாவற்றையும் சகித்துச் சகித்து சலித்துப் போன கதீஜாவோ தனது வீட்டுக்கு அழைப்பை எடுத்து தனது நிலையை விபரித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முகவர்களிடம் பேசி தன்னை இடம் மாற்றும்படி, அல்லது நாட்டிற்கு அழைக்கும் படி கேட்டுக் கதறினாள். தனக்கென தனியாக இருந்த அறையைக் கூடப் பறித்து விட்டதால். தூக்கம் கூட இல்லாமல் நடக்கும் போது சுவர்களில் சாய்ந்து நின்று கொண்டு தூங்குகிறேன். நடந்து கொண்டும் வேலை செய்து கொண்டும் தான் சாப்பிடுகிறேன். நல்லிரவு ஒரு மணி, இரண்டு மணியாகிறது தனக்கு குளிப்பதற்கு மலசலகூடம் சென்றால் கூட சற்று தாமதித்து விட்டால் எஜமானி கண்ட படி திட்டுகிறார். நான் இங்கு மிருகமாகவே நடத்தப்படுகிறேன். ஆனால் கொள்ளை உணவுகளை அள்ளிக்கொண்டு கொட்டி வைக்கிறார்கள். தேவையானதை எல்லாம் சாப்பிடு என்கிறார்கள். அதற்கு ஓரிரு நிமிடங்கள் கூடத் தரமாட்டேன் என்கிறார்கள். என்று உள்ளதை உள்ள படி சொல்லி மன்றாடி மண்டியிட்டு கதறினாள் கதீஜா தன் வீட்டவர்களிடம்.
அவர்களும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரிடம் சென்று அவளது நிலைமையை எடுத்துச் சொல்லி இடம் மாற்றியேனும் தாருங்கள் அல்லது எங்கள் பிள்ளையை நாட்டிற்கு எடுத்துத் தாருங்கள் என்று கேட்கவே அம் முகவரும் உதவுவதாகச் சொல்லி விட்டு கதீஜாவின் எஜமானன் இலங்கையில் இவள் சென்ற முகவரது தலைமையாள் என்பதால் கதீஜா சொன்னவைகள் அனைத்தையும் சொல்லி அவளை மாட்டி விட்டனர்.
ஒளிரும்……
க.ஷியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *