கட்டுரைகள்

ஈழத்தமிழ் மக்களுக்கு அபயம் தர யார் வருவார் ? எலிப்பொறிக்குள்ளிருந்து பார்க்கவேண்டிய நிலை !! சட்டத்தரணி செ. ரவீந்திரன் . ( அவுஸ்திரேலியா )

 

ஐ. நா.வின் மனித உரிமைப்பேரவையானது மேலும் காலம் தாழ்த்தக்கூடாது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு இனக்கொலையாக சர்வதேச குற்றவியல் மன்றுக்கு பாரப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டங்கள் கூடி, காத்திரமான தீர்மானங்கள் தேடி, பேரவையின் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள்.

அது புலம்பெயர் தமிழ் சமூகத்திலும் பரவலான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அந்த நாட்களில், காலைக்கதிர் இதழ்களில் “ கரப்பருந்த நாடும் கடன் “ “ இலவு காத்த கிளிகள் “ என்று இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன்.

இலங்கை விவகாரத்தையொட்டி, ஐ. நா. மனிதவுரிமைப்பேரவை காத்திரமான தீர்மானம் தரவேண்டும். குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்படவேண்டும் என்பவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப்பேரணியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

எப்படி அழுதாலும் தன் பிள்ளையை தானேதான் பெறவேண்டும் என்ற அனுபவ மொழி ஒன்றுண்டு. மக்கள்தான், தாம் எவ்வளவு துன்பப்பட்டாலும் தமது உரிமைகளையும் அதிகாரங்களையும் நிர்ப்பந்தித்து பெறல்வேண்டும்.

யார் யாரோ அதனை, பெற்றுத்தருவார்கள் என்று விரும்புவது இலகுவாக இருக்கலாம். ஆனால், அது இலட்சியம் அல்ல நடைமுறையும் அல்ல.

இவைகளால் ஒரு விடிவு வரும் என்ற நம்பிக்கையில், கருக்கட்டியுள்ள குழந்தையால் சந்தோஷம் கிட்டும் என்று தமிழ்மக்களும் சந்தோஷப்பட அவற்றை ஊடகங்கள் பிரதிபலிக்க குழந்தைக்கு யார் தந்தை..? என்று எங்களுக்குள்ளேயே அடிபடுகிறோம்.

இந்த அடிபாட்டில் தாயின் உணர்வுகளைப்பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லை.

எங்களது ஊடகங்களுக்கும் கடமைகள் , சவால்கள், தார்மீகம் என்பன உண்டு.

அந்தக்கடமை சவால்களுக்கு இடையிலும் இவற்றை மேலோங்கி இனத்தின் இலட்சியம் – விடிவு என்ற உணர்வில் ஒரு தார்மீகக் கோட்பாடும் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

அந்தக்கடமைகளை நகர்த்தும் பாணியில் இந்த தார்மீகம் ஏற்பட வேண்டும்.

தங்களது வாசகர்களுக்கு நடக்கின்ற செய்திகளை எடுத்துச்சொல்லும் கடமையும் அவர்களது விருப்பு வெறுப்புகளை பகிர்தலும் தவிர்க்கமுடியாதவை.

ஆனால், இவற்றில் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டம் நிகழும்வேளையில் சிண்டுபிடித்து சமுதாயக்கடமைப்பாடு இல்லாமல் நடப்பது, வருத்தம் தருகிறது.

செய்திகளைத் தரும் விதத்தில் முக்கியமாக யார் தந்தை என்ற புரளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை பேசுவோருக்கு கிரீடமும் வைத்து, வாசகர்களின் உணர்வுகளுக்கு அன்றி, அறிவுக்கு தீணி போடுவதாகத் தெரியவில்லை. அதே போன்று இதை யார் சிந்தித்தார், தொடங்கினார், எங்கே எப்படி முடிப்பது போன்றவற்றை மிகைப்படுத்தி, போராட்டத்தின் பலாபலன்களையே வீணாக்குகிறார்கள்.

இனமுரண்பாடுகளுக்காக இவை போன்றவை சிங்கள – ஆங்கில ஏடுகளிடையேயும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றிற்கு நாம் வீழ்ந்துவிடக்கூடாது.

கம்பவாரிதி ஜெயராஜ் அடிக்கடி “ தமிழன் என்று ஒரு இனமுண்டு, அவர்க்கோர் ஒரு குணமுண்டு “ என்று சொல்லுவார். அந்தக்குணங்களால் அந்தக்கருவே கலைந்துவிடலாம், அல்லது வேறு காரணிகளால் அது பிறக்கும் சாத்தியமே இல்லாமல் ஆகலாம்போல் தெரிகிறது. தமிழன்னை எவ்வளவுதான் நொந்தாலும் எல்லாமே அவளின் ஏமாற்றப்பாதையிலேயே நடைபோடுகிறது.

நான் ஒரு அவநம்பிக்கையாளன் அல்ல, ஆனால் நம்பிக்கைகளின் அறிகுறிகள் மேகங்கள்போல் கரைந்துபோவதுதான் ஜீரணிக்கமுடியாதிருக்கிறது.

இதற்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல் சில நாட்களுக்கு முன்னர் உலகத்தமிழர் பேரவையின் இணக்கப்பாட்டுடன் நடந்த இணையவழி சந்திப்பில், ஐ. நா. சபையின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகம் சார்ள்ஸ் பெற்றி, “ ஐ.நா.வை நம்பாதீர்கள். அதற்கு நீங்கள் விரும்பும்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றல் உள்ள கட்டமைப்புகள் இல்லை. இறுதி யுத்தத்தில் பொதுமக்களை காப்பாற்றுவதில் ஐ. நா.வின் அங்கத்துவ சபைகள் எல்லாமே தோற்றுவிட்டன. “ என்று கூறுகிறார்.

இவர் இறுதி யுத்தத்தில் ஐ. நா. வின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வுக்கு தலைமைதாங்கி அறிக்கை சமர்ப்பித்தவர்.

அதே இணையவழி சந்திப்பில், “ சரணடைந்த முக்கிய புலிகள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டனர் “ என்று முன்பு பாதுகாப்புச்செயலாளராகவிருந்த கோத்தாபாய ராஜபக்ஷ தனக்கு கூறியதாகவும், “ தேவையற்ற விசாரணைகளில் ஈடுபடாமல் இருக்கவே சுட்டுத்தள்ளினேன் “ என்று ஏற்றுக்கொண்டார் எனவும் தகவல் தருகிறார் இன்னொருவர், இவர் வேறு யாருமல்ல, அப்பொழுது அமெரிக்காவின் யுத்தவிவகாரங்கள் தொடர்பில் உயர் அதிகாரியாகவும் விசேட தூதுவராகவும் இருந்த ஸ் ரீஃபன் ரப்,

அதற்கு ஆதாரமாக இளைஞர்கள், யுவதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட படங்கள் இணையத்தளங்களில் வந்தன.

அவற்றில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஏதும் அறியாத கலங்கமில்லாத கண்களோடு காத்திருக்க வேட்டையாடப்பட்ட படங்கள் உலகடங்கிலும் எல்லோர் மனங்களையும் உலுப்பியது. இவற்றைத்தான் அந்த நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா,“ சர்வதேச சமூகம் , ஐ. நா. போன்றவற்றால் தமிழ்மக்களைக்காப்பாற்ற முடியவில்லை. அதுபோலவே ருவண்டா ரொகிங்கியா முஸ்லிம் மக்களையும் காப்பாற்ற முடியவில்லை “ என்றும் அதற்குரிய கட்டுமானங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இவையெல்லாம் தமிழர்களை பொறுத்தளவில் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமா…? அல்லது கோழித்தூக்கத்தின் விழிப்பா, முதலைக்கண்ணீரா..? என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அப்போது இருந்த எல்லோரும், இவர்கள் கூட யுத்தம் முடிந்த பின், ஐ.நா. மனித உரிமைக்கவுன்ஸிலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பயங்கரவாதத்தை அழித்து உலகுக்கு முன்மாதிரி காட்டியவர் என்று புகழாரம் சூட்டிய தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள்தான்.

அப்பாவித் தமிழ்மக்கள் இறந்தார்கள் என்பது அப்பொழுது அவர்களுக்குத் தெரியவில்லையா..? அல்லது நடந்த யுத்தக்குற்றங்கள் மறைக்கப்பட்டனவா..? ஏனெனில் நீதி நியாயம்

எப்பேற்பட்டவையானாலும் சர்வதேச அரசியலுக்கு பின்னால் இயங்கும் வர்த்தக கும்பலுக்கு ராஜபக்ஷ வசதியானவராகத் தெரிந்தார்.

ஆனால், அவர் வர்த்தகங்களை மேலைநாடுகளிலிருந்து குறைத்து, சீனாவின் பக்கம் செல்லவும், மனிதவுரிமை பேரவை ஊடாக தொந்தரவுகள் தொடர்ந்து பின்னர் ரணிலை ஆழம்பார்த்து, மைத்திரியை ஜனாதிபதியாக்கி, இவையெல்லாம் நீர்த்துப்போக… பழையபடி வேதாளத்தின் கதை தொடர்கிறது.

கடைசி நேரங்களின்போது தமிழ் மக்களின் அவலக்குரல்கள் கேட்டிருந்தபோதும், மேலைத்தேய நாடுகள் புலிகளை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, கண்டும் காணாததாய் புலிகளை அழிக்கும் செயல் நடந்து முடியட்டும் என்ற பாராமுகமாகவிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபை கூட மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து, மக்களை காப்பது ( Right to Protect ) என்ற நிலைப்பாட்டை எடுக்காது, சிறிலங்காவின் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பணிப்பின்படி முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறினார்கள். இது யுத்தத்தின் பின்னர் விமர்சிக்கப்பட்டது.

இன்றும் விமர்சனத்திற்குள்ளாகின்றன.

அதன்பின்னர், பத்துவருடங்கள் நல்லூர்க்கந்தன் திருவிழாவுக்கு தவறாமல் காவடி எடுப்பதுபோல ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் திருவிழாவுக்கு சென்றுவந்தோம். அதில் வழிபிறக்கும் , எமது நேர்த்திகளுக்கு அருள் கிடைக்கும் என்று புராணங்கள் பாடினோம்.

சிலநாட்களுக்கு முன்னர், இணைய வழி சந்திப்பை கூட்டி சார்ள்ஸ் பெற்றி, ஸ் ரீஃபன் ரப் ஊடாக சாடை மாடையாக அதன் தாற்பரியத்தைச் சொல்லி உள்நாட்டுக்குள்ளேயே சமரசம் தேடவேண்டும் என்கிறார்களா..? பழையபடி நோர்வே போன்ற அல்லது இந்தியா மூலமான ஒரு அரசியல் சமரசத்தை தேடுங்கள் என்று அறிவுறுத்தல் செய்கிறார்களா..? என்பது தெரியவில்லை.

இந்தச்சந்திப்பை முன்னெடுத்த முக்கிய குழுமங்கள், சுமந்திரனதும் சம்பந்தனதும் நிலைப்பாட்டுக்கு சாதகமானவை. அதையொட்டி எங்கள் ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டன. அப்படியானால் எங்களது அடுத்த கட்டம் என்ன? அதற்கான கட்டமைப்புகள் உண்டா..?

பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரையில் முன்னேறுமா..? என்று யோசிக்குமுன்னர் அரசியல் கட்சிகள் கூடி முடிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.

அதில் சிலர் கலந்துகொள்ளவில்லை.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த சிலர் சர்வதேச நாடுகளுடன் ஈடுபட வேறு சிலர் பெயர்கள் குறித்துள்ளார்கள்.

இதில் விசேடம் என்னவென்றால், இதுவரை கொழும்பில் அமைந்த சர்வதேச பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருந்த சுமந்திரனை அதில் பெயரிட்டுச்சொல்லவில்லை. பழையபடி ஓரம்கட்டும் பல்லவி தொடர்ந்தது. ஆனால், சம்பந்தனோ அன்றில், அவர் நியமிக்கும் ஒருவருக்கு ஒரு இடம் என்று சப்பை கட்டுகிறார்கள். சம்பந்தன் நியமிப்பவர் யாராக இருக்கமுடியும்..?

அதில் ஈடுபட்டோர் தம்மை தமிழர் பேரவையாக மாற்றுவோம் என்று அறிவிக்க, சம்பந்தனோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுடன் புதிய கூட்டுக்கள் தேவையில்லை என்று அறிவிக்கிறார்.

இப்படியான கருத்து வேற்றுமைகளுடன் சர்வதேசத்திற்கு நாம் ஒரே குரலில் பதில் சொல்லமுடியுமா..?

இப்படியான ஒப்புக்கான ஒற்றுமை கட்சி நலனுக்காக என்பதும் தமிழ் மக்களின் விடிவுக்காக அல்ல என்பதை புரிந்துகொள்ளும் அறிவு சர்வதேசத்துக்குண்டு.

ஒற்றுமையான ஒரு தீர்மானத்தை அனுப்பியாயிற்று என்று சிலாகித்த ஊடகங்கள் இன்று அனுசரணை நாடுகள் சமர்ப்பித்திருக்கும் தீர்மானத்தில் ஏமாற்றம் கண்டு, நட்பு நாடுகள் ஏமாற்றிவிட்டன, இந்தியா மதில் மேல் பூனையாகி விட்டது என்று வைகிறார்கள்.

இடையில் வர்த்தகத்தின் ஊடாக மனிதவுரிமைப்பேரவையை சமாளிக்க, சிறிலங்கா அரசு வர்த்தக கும்பலுக்கு விட்டுக்கொடுத்து இந்தியாவை அரவணைக்கிறது. அதில் தமிழர் பிரச்சினை தலைதூக்குகிறது. அவ்வளவே !

அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன்.

விடயம் இதுதான்:

ஜனாதிபதியினால் முன்னர் நடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீள ஆராய்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்தனவா..? அவற்றுக்கு பரிகாரம் என்ன..? என்று மேலும் பரிந்துரை தருமாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஒரு அங்கத்தவராக ஈ. பி.

டி. பி. யில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுதான்.

எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரை அறிவேன். இன்று அரசியலில் இருக்கும் சிலருக்கு மேலால் படித்தவர். ஆசிரியராகவும் வேறு பல பதவிகளிலும் இருந்து அனுபவம் பெற்றவர். ஆற்றலுள்ளவர். ஆனாலும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமைகள் மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள் என்பவற்றை விசாரித்து எடுக்கப்பட்ட பரிந்துரைகளை மீளாய்ந்து அவற்றுக்கு, அதில் ஏற்படும் சட்ட நுணுக்கங்களைப்பற்றி கருத்துக்கூறக்கூடிய தகைமைகள் அவருக்கு இருந்ததாக எனக்குப்படவில்லை.

இந்தக்காலகட்டத்தில், அதுவும் முன்னாள் நீதிபதி எச். எம். நவாஸினதும் அவரது இணையரான பழைய பொலிஸ் பொறுப்பதிகாரியினதும் பின்னணியில் இது ஒரு சுதந்திரமான கருத்தோட்டத்துக்கு இடம்தருமா..? என்பவை கேள்விக்குறியே !

நீதிபதி நவாஸ் முன்னைய மனித உரிமை பேரவைக்கு அரசுசார்பில் சென்று எந்த யுத்த குற்றமோ, மனித உரிமை மீறல்களோ நடக்கவில்லை என்று வாதாடியவர் – “நானும் பார்த்தேன்… கேட்டேன்…. “என்று ஒத்து ஊதுவதைத்தவிர ஈ.பி. டி. க்கு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

இந்த அங்கலாய்ப்புகளினால் ஏன் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தொலைபேசியில் உரையாடினேன். இவற்றை விளக்கி இப்படியான ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பதில் என்ன நன்மை என்று வினவினேன்.

எடுத்த எடுப்பிலேயே, அதில் என்ன சாட்சியங்கள் வழங்கப்பட்டன என பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பங்குபற்றாமல் ஒதுங்குவதில் என்ன நன்மை..? ஓரளவுக்கு இறந்துபோனவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காவது ஒப்புக்கொள்ளப்பட்ட நட்ட ஈடுகளையாவது பெற்றுக்கொடுக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்.

பத்துவருடங்களாக இதனைப்பற்றி எங்களுக்காக பாடுபடும் அரசியல் கட்சிகள் ஏதும் செய்யவில்லை என்பது யதார்த்தம். அவர்கள் அழித்ததையும் இழந்தவற்றையும் பேசுவதிலேயே காலம் கழித்தனர்.

வாழ்வாதாரத்துக்காக ஈ.பி. டி. பி. பல முன்னெடுப்புகள் செய்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால், நவாஸ் ஆணைக்குழுவின் பின்னணியையும் அது தமிழருக்கு தரக்கூடிய சர்வதேச தாக்கத்தையும் அவர் உணர்ந்தவராகத் தெரியவில்லை.

இந்த நட்ட ஈடுகள் பத்துவருடங்களாக கிடப்பில் போடப்பட்டு, சடுதியாக உயிர்பெறப்போவதில்லை. ஏனெனில் அரசிற்கு எங்கள் அழிவுகளுக்கு ஏதும் நட்ட ஈடு கொடுக்கும் மனமோ, எண்ணமோ காலம் காலமாக இல்லை என்று பழைய சம்பவங்களை நினைவூட்டி விளங்கப்படுத்தினேன்.

அதை எதிரொலிப்பதாக அரசின் பலவான் ஜனாதிபதியின் வலது கரமான அமைச்சர் சரத் வீரசேகரா,இராணுவத்தை கொன்ற , தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கமுடியாது, காணாமல்போனோர் அலுவலகத்தை தொடர்ந்தும் கொண்டு நடத்த தாம் விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.

பின்னர் ஈ.பி. டி. பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ( பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் ) குறும்செய்தி அனுப்பிவைத்தேன்.

இப்படியான தீர்மானங்கள் அவர்களது அரசியல் நிலைப்பாட்டை ஒட்டியது. அது தற்சமய ஜனநாயகத்தின் மரபில் அவர்களது கருத்துச் சுதந்திரம்.

ஆயின், அது தமிழ் மக்களின் மொத்த உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் இருக்கவேண்டும் என்றும் சொல்லிவைத்தேன்.

என்றாலும் பின்னர் சுவிஸ் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினர்.

“ போற்றுவார் போற்றட்டும்

புழுதி வாரி என்மேல் தூற்றுவோர்… தூற்றட்டும்

தோற்காத என் வழியை ஏற்றது நம் வரலாறு.

மாற்றத்தை தேடும் எம் இனத்தின் லட்சியத்தை வெல்வேன். “ என்ற ஈ.பி. டி.பி.யின் தேர்தல் கால வசனங்கள்தான் நினைவில் ஓடின !

இவர்கள் ஒருபக்கம் எங்கள் இலட்சியத்தை வெல்லுவோம் என்று நிற்கிறார்கள். அரசியல் நடத்துகிறார்கள்.

மற்றவர்களோ, தாயின் உணர்வறியாது, அல்லது அதனைப்பற்றி கவலையேதுமின்றி தங்களுக்கான கட்சி அரசியல் நடத்துகிறார்கள்.

இன்னொரு பக்கம், பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை வந்த நடைப்பயணத்தின் தாக்கத்தில், “ யாழ்ப்பாணி இப்ப வந்து நடைப்பயணத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றை சொல்லிப்போறான்கள் தமிழீழம் கிடையாது, வடக்கு – கிழக்கு இணையாது, கடைசியில் கஷ்டமென்று வரும்போது எல்லா யாழ்ப்பாணியும் ஒட்டுமொத்தமாக கடையை மூடிவிட்டுப்போய்விடுவான்கள் “ என்று உபதேசம் செய்கிறார் பிள்ளையான்.

டக்ளஸும் பிள்ளையானும் கூட ஆயுதம் ஏந்தி தமிழர்களின் இலட்சியத்திற்காக போராடியவர்கள்தான். அவர்களின் தற்போதைய இலட்சியம் தமிழ்மக்களின் உணர்வுகளை உள்ளடக்குகின்றனவா என்பது புரியவில்லை.

இவர்கள் எல்லோருடைய அரசியலினாலும் யதார்த்தங்களினாலும் துகிலுரிபடும் தமிழன்னைக்கு அபயம் தர ஒரு கிருஷ்ணபரமாத்மா தோன்றுவாரா..?

அது மனித உரிமைப்பேரவையில் எடுக்கப்படும் தீர்மானத்தில் வருமா அல்லது, பரமாத்மா வருவாரா… ?

அல்லது அவர் மோடி ரூபத்தில் பிராந்தியத்தலைவன் என்று வருவாரா..? அல்லது ஜோபைடன், கமலாஹரிஸ் வடிவில் சீனாவை சிறிலங்காவில் கால் பதிக்க விடமாட்டோம் என்று தோன்றுவார்களா..?

எங்கள் எலிப்பொறிக்குள்ளிருந்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

( நன்றி: யாழ். காலைக்கதிர் )

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button