கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..21…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் ஆசிரியரால் திருத்தப்பட்டு வந்தன. நானும் ஆவலுடன் திறந்து பார்த்தேன். முகவரியில் ஊரின் பெயரை திருப்பணி கரிசல்குளம் என்பதை திருப்பணி கரிசல் டேங்க் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன். அதில் ஆசிரியர் டேங்க் என்பதை திருத்தி ஆங்கில எழுத்தில் குளம் என்று எழுதியிருந்தார். அப்போது எனக்கு புரிந்தது சில இடங்களில் ஆங்கில எழுத்தை பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளை எழுதலாம் என்று.

ஆதலால் கயிறு குத்துதல் என்பதற்கு எனக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாது போனதால் என்ன செய்வது என்ற பதட்டம் ஏற்படவில்லை. ஆங்கில எழுத்துக்களாலே கயிறு குத்துதல் என்ற தமிழ் வார்த்தைகளை எழுதி சாதனை செய்ததுபோல் உணர்ந்தேன். இந்த முறை எனக்கு பல சந்தர்ப்பங்களில் தந்தி கொடுப்பதில் கை கொடுத்தது. பலமுறை என்னை பந்தாடியும் இருக்கிறது. அப்படி ஒருமுறை என்னை பந்தாடிய சம்பவத்தை இப்போது உங்களுக்கு கூறுகிறேன்.

எங்கள் வீட்டருகே இருந்த முதியவர்களான உறவினர் கணவன் மனைவி இருவரும் அவர்களது ஊரான பன்னம்பாறை என்ற ஊருக்கு சென்றிருந்தனர். இது நடந்தது பெங்களூரில். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து பெங்களூர் சென்று இரண்டு ஆண்டுகளே இருக்கும். அப்போதும் ஆங்கில அறிவு அவ்வளவு இல்லை. அந்த முதியவர்களுக்கு கண் பார்வை சற்று மங்கல் என்பதால் அவர்களுக்கும் என் கடிதம் எழுதும் பணியும் ஊரிலிருந்து கடிதங்களை வாசித்து கூறும் பணியும் தொடர்ந்தது.

எங்கு போனாலும் எனக்கு ஒரு முக்கியத்துவம் பின் தொடர்ந்து வந்ததால் நான் பில்டப் பண்ண வாய்ப்பில்லை என்ற நிலையே எனக்கு வந்தது. முதியவர்கள் வீட்டில் அவர்களுடன் இருபது இரபத்தியிரண்டு வயது மகனும் பேத்தியும் இருந்தார்கள். முதியவர்கள் ஊருக்கு சென்று ஒருமாதம் ஆனது. எந்த தகவலும் இல்லை. ஒரு நாள் திடீரென தந்தி வந்தது.
அவரது மகன் வீட்டில் இல்லை. பேத்தி மட்டுமே வீட்டில் இருந்தாள். தபால்காரரிடம் தந்தியைப் பெற்று என்னிடம் ஓடி வந்தாள்.

மாமா தந்தி வந்திருக்கிறது. என்னவோ ஏதோ தெரியலை. கையும் காலும் ஓட மாட்டேங்குது. கொஞ்சம் படிச்சு தந்தியில என்ன வந்திருக்குன்னு சொல்லுங்க மாமா என்று என்னிடம் தந்தியைத் தந்தாள். அதில் “பாதர் பாஸ்டு அவே. ஸ்டார்ட் இம்மிடியட்லி” என்றிருந்தது. முதியவர் மகன் பெயருக்கு தந்தி வந்திருந்ததால் நான் முதியவர்தான் இறந்து விட்டார் என்று உணர்ந்து அப்பெண்ணிடம் உன் தாத்தா இறந்துட்டாங்க. உடனே புறப்படுன்னு தந்தி வந்துருக்குன்னு சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும் அப்பெண் கூப்பாடு போட்டு அழ ஆரம்பித்து விட்டாள். அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் ஓடிவந்து ஆறுதல் சொல்லியும் அப்பெண் அழுகையை நிறுத்தவில்லை. சிறிது நேரத்தில் உறவினரின் மகனும் வந்துசேர விபரமறிந்து அவனும் அழ ஆரம்பிக்க வீடே சோகத்தில் கவிழ்ந்திருந்தது. அவனை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவனிடம் கொஞ்சம் தான் பணம் இருந்தது. எனது அண்ணா இருவரும் அலுவலகம் சென்றிருந்தனர்.

நான் ஏறக்குறைய ஒரு ஆண்டாக தற்காலிகமாக கணக்கர் வேலை பார்த்த பணத்தில் ஒரு நல்ல கைக்கடிகாரம் வாங்கியிருந்தேன். அதை மார்வாடி கடையில் அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்து உதவினேன். ஒன்பது மணிக்கு தந்தி வந்தது. பதினொரு மணிக்கெல்லாம்
சேலம் வண்டியில் அனுப்பி வைத்துவிட்டேன். அப்போதெல்லாம் இரவு மட்டுமே திருநெல்வேலிக்கு பெங்களூரில் இருந்து நேரடியாக பேருந்து செல்லும்.

உறவினர் மகன் விஜயனிடம் சேலம் சென்று மாற்று வண்டியில் திருநெல்வேலி செல்லுமாறு சொல்லியனுப்பினேன். எப்படியும் இரவு பத்துமணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவான். ஆனால் பத்து நாட்கள்
கழித்து வந்த கடிதத்தில் அவன் பதினொரு மணிக்கு வீட்டுக்கு போய்க் கொண்டிருந்த போது சற்று தூரத்தில் எதிரே அவனது அப்பா வந்து கொண்டிருந்தாராம். ஒரு நொடி அவன் உயிர் அவனிடம் இல்லை. இறந்து போன அப்பா எப்படி எதிரே வருவார்?

ஒருவேளை இறந்தவரின் ஆவி கொஞ்ச நாட்கள் வீட்டையே சுற்றிவரும் என்று கேள்விப் பட்டதைப்போல் இது பேயாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கண்ணில் படாதவாறு ஒரு ஓரமாக மறைந்து நின்று கொண்டான். அப்படி நின்று கொண்டே அவரைப் பார்த்தான். அவர் நேராக அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அவன் உறதிப் படுத்திக் கொண்டானாம். நிச்சயமாக ஆவி பிரிந்தபின் பேய்தான் வீட்டை சுற்றி வருகிறது என்பதை.

பின் மறைவிடத்திலிருந்து வெளியேறினான். நெஞ்சில் திடுக் திடுக்கென்ற பயத்துடன் திரும்பித் திரும்ப பார்த்தபடி மறுபடியும் அந்தப் பேய் இரண்டாவது சுற்று வந்து விடுமோ
என்று எண்ணியபடியே அவ்வீட்டை நோக்கி நடந்தான். அவ்வீட்டை நோக்கி நடந்தவன்
அப்பாட ஒருவழியாக தந்தி கொடுத்தவர் விட்டை அடைந்து விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் வீட்டிற்குள் நுழைந்ததும் நிலை குலைந்து போனான்.
அப்படி என்ன நடந்தது? பேய் ஒரு நாற்காலி மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button