கதைகள்

வலை!…. 01…. ( குறுநாவல் ) ……. சுபாஷினி சிகதரன்.

சாளரக் கண்ணாடியின் நடுப்பொருத்திலிருந்து, வயிற்றுச்சுரப்பை இழுத்துக்கொண்டு திரைச்சீலை விளிம்பு வரை வந்து கரணமாடி, மீண்டும் குறுக்காக வலையிழுத்தபடி சிலந்தி ஆரம்பித்திருந்தது. திரைச்சீலை கொஞ்சம் அசைந்தால் அறுபட்டுவிடுமோ என மனம் பதைத்தது.

அரைநாளாக இந்த விளையாட்டை நோக்கிய வண்ணம் பொழுதைக் கடத்துவது பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும், சிலந்திக்கான பாதுகாவலன் போன்றதொரு ஒட்டுதல் எண்ணம் அலிசிட்டோஸ் கலிஸ்டோவின் உள்ளத்தை உற்சாகப்படுத்திற்று. இரண்டு நாட்களுக்கு முன்னர் அறையைத் துப்பரவாக்க வந்த ஜெசா வலையைக் கலைத்து வெறுமையாக்கிய சிலமணி நேரத்தினுள் எங்கோ இண்டுக்குள் புகுந்திருந்த இந்தச் சிலந்தி மீண்டும் குடுகுடுவென வேலையை ஆரம்பித்து விட்டது. சளைக்காத இந்தப் பிரயத்தனத்திற்கு என்னதான் நோக்கம்? நடந்தவற்றிலிருந்து ஊகங்களைத் தீர்மானிக்கும் சிந்தனையற்ற உயிர், ஒரே முனைப்பில் இயங்குகிறதாய் இருக்க வேண்டும். இங்கு பூச்சி, பொட்டு, எறும்புக்கு அனுமதி இல்லை. இது ஏதோ சிறிய வெடிப்பு இருந்து, உள்ளே நுழைந்து விட்டது போலும். இனிமேல் வலையைக் கலைக்க வேண்டாமென முந்தைய நாள் ஜெசாவிடம் சொன்னதையடுத்து, “அலிசிட்டோஸ், இருந்து பார், நீ கதைப்பதைத் தாங்க முடியாமலேயே சிலந்தி ஓடிவிடும்” எனக்கூறி கலகலத்து நகைத்தாள். திரைச்சீலையைக்கூட இருண்டாலும், விடிந்தாலும் அலிசிட்டோஸ் இருக்கும் நிலையிலிருந்து திறக்கவும், மூடவும் விடுவதில்லை.

இன்று ஜெசா வரவில்லை. இப்போதெல்லாம் முதியோர் இல்லத்தின் நிரந்தரப் பணியாளர்களை அவ்வப்போது காணக் கிடைப்பதில்லை. சிறிய அறிகுறி என்றால் உடனே ஓய்வு எடுத்து கோவிட் சோதனை செய்ய வேண்டுமென்பது நடைமுறை. வேறு ஒருத்தி வக்கியூம் இயந்திரத்தோடு அவசரமாக அறைக்குள் பிரவேசித்தாள். ஸ்கொட்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவளாக இருக்க வேண்டும், பழைய தையல் இயந்திரத்து ஓசையில் ஏதோ சொன்னபடி வந்தாள். எந்தச் சொல்லும் புரியவில்லை.

“அந்தச் சிலந்திவலையை விட்டுவிடு. சாளரப் பக்கம் எல்லாம் இருந்தது போலவே இருக்கட்டும்”. உன்னிப்பான பார்வையை அவள் உதிர்த்தாள். கிழவனுக்கு மனப்பிறழ்ச்சி என நினைத்திருக்கக் கூடும், அவளின் சிந்தனைச் சட்டத்தில் அது தவறாக இருக்க வேண்டியதில்லை.

“இங்கே பார், இது சிலந்தி! இப்படி விடமுடியாது”. பேச்சுத் தொனியில் டொனால்ட் ட்ரம் சாயல் அடித்தது.

வக்கியூம் இயந்திரத்து வாய் சிலந்தியை, அதன் வீட்டை ஒரே இழுவையில் விழுங்கிக் கொண்டது. அலிசிட்டோஸிற்கு காட்டுத்தீயினுள் அகப்பட்டது போல் உடல் முழுவதும் எரிகின்ற வேதனை படர்ந்தது. நெஞ்சுக்குழியிலிருந்து கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம் ஒன்று சடுதியாக நகர்ந்து தலையை முட்டியது. கைகளும், கால்களும் பதறி நடுக்கம் கண்டது. பராமரிப்பாளர் அல்லது தலைமைத் தாதி யாரையாவது உடனே அழைத்து அந்தப் பெண்மீது ஏதாவது பெரிய பொய்க்குற்றம் சுமத்த மனது பரபரத்தது. என்னவென்று சொல்லலாம்? குளியலறைக்குள் ஏதாவது காணவில்லை என?, அல்லது கவனிக்காதது போல் வேண்டுமென்றே காலில் பலமாக இடித்து விட்டாள் என?, எதுவும் பொருந்தவில்லை. மிகப்பெரிய சோர்வும், கழிவிரக்கமும் சூழ்ந்து கொண்டன. நெஞ்சம் விம்மி, கண்களில் நீர் துளிர்த்தது.

“சே… ஏன் இப்போது இப்படியெல்லாம் ஆகிறேன்? நல்லவளோ, கெட்டவளோ, எனக்கு ஏன் இந்த வன்மம்? இந்த எண்பத்தியாறு ஆண்டு கால வாழ்க்கையில் எங்கும் இப்படி அதீதமாக எரிச்சல் தன்மை ஏற்பட்டதில்லை. வேலையில், சமூகத்தில் நல்ல பெயர். நிதானமாக எல்லாவற்றையும் நடத்தி முடிப்பதாய் பாராட்டு. வயதாகி, முதியோர் இல்லத்தில் சேர்ந்த பின் கூட, யாராவது இசகுபிசகான பராமரிப்பாளர் வந்தாலும் சமாளித்துப் போவதே வழமை. இப்போது இந்தக் குடைச்சல் ஏன்? எல்லாம் இந்த கோவிட் கட்டுப்பாட்டின் பின்னராய் இருக்கலாம். சும்மாவே இலையுதிர்ந்த குளிர்கால மரம் போன்ற முதியோர் இல்லம் இப்போது பட்ட மரமாய் காட்சி தருகின்றது. வேலையாட்கள் பூதங்கள் போல மூடிக்கொண்டு திரிகிறார்கள். அனெற்றிற்கும், மெலிசாவிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. லினெற்றைத் தெரிகிறது. அவள் ஆபிரிக்கக்காரி. நிறம், உடல்மொழியில் பிடித்து விடலாம். சிங், அவனின் நடை மூலமே காட்டிக்கொடுத்து விடுவான். தவிர, அவன் உடையில் எப்போதும் ஒரு மெல்லிய கறி மணம் இருக்கும். இப்போதெல்லாம் வேறு பராமரிப்பாளர்களும் பலர் வந்து போகிறார்கள். இவர்களோடு அதிகம் இயலாதவர்கள் மல்லுக்கட்டி பிரச்சனை உருவாகிறது. அவர்களுக்கும் புது இடம், அதீத வேலை, சட்டதிட்டங்கள், என்ன செய்ய முடியும்?”

“ஆனால் முதியோரின் தனிமையைப் போக்கவென இவர்கள் அவ்வப்போது ஏதேதோ விளையாட்டுகள் ஒழுங்கு செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் நெருங்காமல், அவரவர் அறைகளுக்குள் இருந்தபடியே குரலை மட்டும் கேட்டு சிறு அட்டைத்தாள்களை வைத்து விளையாடும் விளையாட்டு. எல்லாமே பொய்யாக, சிறுபிள்ளைத்தனமாக சிலவேளைகளில் தெரிகிறது. பசித்து அழுகிற குழந்தைக்கு பட்டினியைத் தீர்க்காமல் பராக்குக் காட்டுவது போல் இருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைப் பார்த்து ஐந்து மாதமாகிறது. ஆயினும் இந்த மனச்சோர்வு இதனால் ஆரம்பிக்கவில்லை. எப்போது மெலிற்றா போனாளோ அப்போதே தொடங்கி விட்டது. ஒன்றரை வருடங்கள் ஆகிறது. என் வாழ்வெல்லாம் பூக்களை நிறைந்தவள். ஒருபோதும் குடும்ப விருட்சம் வாடிப்போக அவள் விட்டதில்லை”.

அலிசிட்டோஸ் குழந்தை போல வெம்பிக் குலுங்க, கண்ணீர் ஓடைகள், காய்ந்த தரவை நிலம் போன்ற முகத்தின் சுருக்கங்களில் பாதை தேடி வழிந்து ஒழுகின.

————

உள்நாட்டு யுத்தம் காரணமான கிரேக்கக் குடியேற்றம் அவுஸ்திரேலியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்கில் அலிசிட்டோஸ் இங்கு வரும் போது இருபது வயது. போரினால் நேரடிப் பாதிப்பு இருக்கவில்லை. மத்தியதரக் குடும்பம். அப்பா ஆசிரியர். அந்தக் காலத்திலேயே பிள்ளைகளின் விருப்பு, முடிவுகளில் தலையிடாது ஊக்கப்படுத்திய பெற்றோர். தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை. இருந்தும் நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தருவதாய் இருக்கவில்லை. அலிசிட்டோஸ் தனது மைத்துனர் முறையானவரனுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா வந்தபோது குடும்பத்தினர் நாட்டிலேயே தங்கி வழியனுப்பி வைத்தனர். கப்பல் இயந்திரங்கள் தொடர்பான தொழில்நுட்பப் படிப்பு இருந்தது. வந்தவுடனேயே அரசாங்கத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் வேலை கிடைத்து விட்டது. அந்த நாட்களிலெல்லாம் வேலைக்காக ஆட்களைக் கூப்பிட்டுச் சேர்த்தார்கள். எல்லா இன மக்களும் வேலை பார்த்த கப்பல் வாழ்க்கை மிகுந்த உற்சாகம் அளித்தது. அரைகுறை ஆங்கிலம் ஒரு குறையாகவே படவில்லை. கிரேக்கத்து மூளை, மிகச் சுளுவான வேலைத் திறமையால் அலிசிட்டோஸிற்கு ஒன்றரை வருடத்தினுள்ளேயே மேற்பார்வையாளர் வேலை கிடைத்து விட்டது.

போர்ட் மெல்பேர்ணில் கப்பல் தரித்திருக்கும் போதுதான் மெலிற்றா அறிமுகமானாள். துப்பரவுப் பணியாளராய் இருந்தாள். போன தலைமுறை கிரேக்க மக்கள் பலர் வந்த புதிதில் துப்பரவுப் பணியாளர்களாய் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். மிகக் கடுமையான உழைப்பாளிகளாய் இருந்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினர். மெலிற்றாவின் பெற்றோர் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்து விட்டிருந்தனர். திருமணமான தமக்கை குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்திருந்தாள்.

பார்த்தவுடன் மெலிற்றாவிடம் கவர்ந்தது, வேலை செய்யும் நேர்த்தி. கம்பிச்சட்டங்களைக் குனிந்து துடைத்துக்கொண்டு இருந்தவள், மெல்லிய காற்றில் அசையும் ரியூலிப் மலர் போன்று இருந்தாள். கூர்மையான முக அமைப்பு. அழகிய உடலினுள் ஒரு சுறுசுறுப்பின் அலையல் வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. நிலத்தினில் விழுந்து ஓடிய பூச்சியை மடித்த தாள்களுக்கிடையே இலாவகமாகப் பிடித்துவைத்தபடி வெளிப்பக்கம் விடுவதற்காக அந்தரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மெலிற்றாவிற்கு வீடு, கட்டிடங்களின் உள்ளே தவறி நுழைந்து விடும் சிறு உயிர்களைக் கொல்வது பிடிக்காது. பக்குவமாகப் பிடித்துக்கொண்டுபோய் வெளியில் விட்டு விடுவாள். பூச்சியில் கவனமாயிருந்த மெலிற்றாவும், மெலிற்றாவில் கவனமாயிருந்த அலிசிட்டோஸும், கவனிக்காது மோதுப்பட்டதில் பூச்சி மீண்டும் விழுந்து ஓடத்தொடங்கியது. எவ்வளவு முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை. கிரேக்கத்துடன் கிரேக்கம் ஒன்றையொன்று பிடித்துப்போய் நட்பாகிக் கொண்டது. அடுத்தமுறை கப்பல் தரைதொட்ட போது காதல் தன்பாட்டிற்குக் கனிந்துவிட்டிருந்தது.

திருமணத்திற்கு முன்னரே அலிசிட்டோஸ் துறைமுக அலுவலகத்தில் வேலை மாற்றம் செய்து கொண்டதுடன், மெலிற்றாவின் சிரமத்தைக் குறைக்க, அவள் வேலை போவதைத் தடுத்துவிட்டார். சாதாரண கிரேக்க ஆண்களை விட அலிசிட்டோஸிடம் அகலமும், சற்றே அதிக உயரமுமான தோற்றம், கூர்த்த விழிகள், மிகுந்த வைராக்கியம், அதேயளவிற்கு மென்மையான மனம், நிறைய அறிவு, பொறுப்புணர்வுடன் கூடிய சுறுசுறுப்பு இவை எல்லாம் இருந்தன. இப்படியான கணவன் கிடைத்து மிகப்பெரிய வரமென மெலிற்றாவிற்குப் பட்டது. வாழ்க்கை கொண்டாட்டமாகவே எல்லாக் காலமும் நகர்ந்தது. வீடு தோட்டமாயிற்று. வேலை முடித்து வீடு வந்தால் வசந்தம் வீசியது. டேர்மன், ஹேர்மிஸ் அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில் பிறந்த பிறகு பதினைந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவள் கஸென்ரா.

மகன்கள் திருமணமாகி பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்ட பின்னரும், கஸென்ரா தனித்து வாழ்வது மட்டும் சிறு வேதனை அளித்தது. இவ்வளவிற்கும் அதீத தெளிவுடைய குழந்தையாகப் பிறந்தவள் அவள்தான். அதுவே அவளால் சரியான துணையைத் தேர்வு செய்வதற்கும் தடையாக இருந்திருக்கலாம். ஆனால் என்றுமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் இருப்பாள். ஆசிரியையாகப் பணியாற்றினாள். மாணவர்களால் மிகவும் விரும்பப்படுபவள். அலிசிட்டோஸ் – மெலிற்றா சம்பந்தமான முடிவுகளையும் அவர்களின் உணர்வை மதித்து எடுக்கக் கூடியவள்.

மூன்று வருடங்கள் முன்பு மெலிற்றா விழுந்து இடுப்புப் பகுதி எலும்பு முறிவால் அறுவைச்சிகிச்சை செய்ய நேர்ந்தது. அதன்பின்னர் தொடர் தொற்றால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அன்றாட அலுவல்களில் சிரமம் ஏற்பட்டது. அலிசிட்டோஸிற்கும் தள்ளாமை. தாமாகவே முதியோர் இல்லம் செல்லும் முடிவை விரும்பி, தம்பதிகளாக வாழக்கூடிய இடமொன்றைத் தேடி எடுத்து வந்த பின்னரும் அதிகமாகக் கவனித்துக் கொள்பவள் கஸென்ராதான். இருந்தும் டேர்மனும், ஹேர்மிஸும் குடும்பத்துடன் கிழமைக்கு ஒரு தடவையாவது வருவதற்குத் தவறுவதில்லை. பிள்ளைகள் மூவரிடமும் கலந்து ஆலோசித்துக் காரியங்கள் இயற்றும் ஒற்றுமை என்றுமே இருந்துகொண்டு இருக்கிறது.

முதியோர் இல்ல வாழ்க்கை கூட பழங்கதைகள் பேசுவதும், மற்றைய வயதானவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், பேரப்பிள்ளைகளுக்காகக் காத்திருப்பதுமென இன்னொரு மாற்றமாக எடுத்துக்கொண்டு சலிப்பின்றி நாட்களை நகர்த்தக்கூடியதாக இருந்தது. தவிர, தொடர் கவனிப்புள்ள இடத்திற்கு வந்தது மனப்பயமற்ற நிலையை ஏற்படுத்தியது. தனித்து, இறுக்கமான ஒரு குடும்பக் கட்டமைப்பாக வாழ்ந்திருந்தும், இன்னொரு இடத்தில் பொருந்திப் போகும் தமது இந்த இயல்பு பற்றி அவர்களே அதிசயப்பட்டுக் கொண்டார்கள். வாழ்க்கை பெருகி நிறைந்துவிட்ட நிம்மதி காரணமாக இருக்கலாம். அலிசிட்டோஸும், மெலிற்றாவும் தமது இறுதி நாளைப்பற்றி ஒருபோதும் பெரிதாக யோசித்ததில்லை. அல்லது இதுபற்றிக் கதைக்க விரும்பாத ஆழ்மனத்தின் பயமாகக்கூட இருந்திருக்கலாம்.

ஒன்றரை வருடம் முன்பு ஒருநாள் காலை மெலிற்றா நித்திரை விட்டு எழுந்திருக்கவில்லை. முதியோர் இல்லத்துப் பணியாளர்கள் ஓடி வந்ததும், அவசரமாக வைத்தியசாலைக்கு அனுப்பியதும், ஒருசில மணி நேரத்தினுள் இதயச் செயலிழப்பால் இறந்து விட்டாள் என்ற அறிக்கையுடன் இறுதிக் காரியங்கள் செய்யும் சேவைக்கு அனுப்பப்பட்டு, எல்லோரும் சேர்ந்து எல்லா அலுவல்களையும் முடித்து வைத்ததுவும் என எல்லாவற்றிலும் இன்னொரு பிணம் போல் இருந்து அலிசிட்டோஸ் கலந்து கொண்டார். முடியவில்லை, மெலிற்றாவை செத்தவளாகப் பார்க்க முடியவில்லை. இதோ, எழுந்து கதைத்து விடுவாள் போன்று இருந்தாள். அவள் இறந்து போகும் வரை, அவளின் இல்லாமை இவ்வளவு ஆழமான வலியையும், வெறுமையையும் ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்கவில்லை.

எல்லாம் முடிந்து தனியே தன் அறைக்குள் வந்து துன்பத்தை முழுமையாக அனுபவிக்கவே மனது துடித்தது. எவ்வாறெனினும் இது ஒரு பிரிவு என்பதற்கப்பால், வயதானவளின் இயற்கையான மரணம். அவ்வளவே. உள்ளே குடையும் உணர்வை எவருடனும், பிள்ளைகளுடன் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், இரண்டு நாட்களின் பின் மற்றவர்களின் விசாரிப்புக்கள் எல்லாம் முடித்து மீண்டும் முதியோர் இல்லம் கொண்டு வந்து விட்ட பின்னர் கஸென்ரா இறுக அணைத்துக்கொண்டாள். அவள் தோள் சாய்ந்து குலுங்கி அழுது முடித்த பின்னரும், நெஞ்சுக்குள்ளே புதிதாகத் தோன்றிய கட்டி போல வேதனை அழுத்தம் ஒன்று நிரந்தரமாகத் தங்கி விட்டது. அவ்வப்போது சோகம் வெடித்து வெளிவரும். துக்கம் விசாரிக்க வந்த எல்லோரும் மெலிற்றா உன்கூடவே இருப்பாள் எனச் சொல்லிச் சென்றனர். இவ்வாறு சொல்வதே ஒரு முறைக்கான சடங்கு போல் பழகிவிட்டது.

ஆனால் மெலிற்றாவை ஆன்மாவாக, உருவமற்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எவ்வளவோ உறவினர்களின் பிரிவுகள் பற்றிய அனுபவம் இருந்தும் இந்த உணர்வு எப்போதும் இருந்ததில்லை. பரபரப்புடன் எல்லோரும் சூழ நின்று ஏதேதோ செய்து அவளைக் காப்பாற்ற முயன்றது, உயிர்ப்போடு உயிரற்றுக் கிடந்த அவளின் உடல், மரணசேவைக்காக யாருடைய கையிலோ குளிர்ப்பெட்டியினுள் வைப்பதற்கு அவளைக் கொடுத்துவிட்டுப் பதைபதைத்தது, இறுதிச்சடங்குகள், பெட்டியினுள் மூடி அடக்கம் செய்த காட்சிகள் இவையெல்லாம் நினைவிற்கு வரும்போது மிகப்பெரிய கலவர உணர்வு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. மெலிற்றாவோடு ஏதாவதொரு வழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. தாங்கவே முடியாத துன்பம் அழுத்துகிறது. காரணமின்றிய குற்றவுணர்வு வருத்துகிறது. ஒவ்வொரு நாளும் பெருஞ்சுமையாக ஆகிவிட்டது.

இதனைப் புரியவைக்க முடியாது. ஆனால் கோவிட் பிரச்சனை தொடங்குவதற்கு ஒருமாதம் முன்பு இரும்புச்சத்துக் குறைபாட்டை சமனப்படுத்துவதற்கான சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலையிலிருந்து வந்திருந்த தாதியுடன் கொஞ்சம் உணர்ச்சிகளைப் பகிர முடிந்தது. இலங்கையைச் சேர்ந்தவள், யமஹா என்றே அவளின் பெயரை ஞாபகப்படுத்த முடிகிறது. ‘பப்பா’ என வாய் நிறைய அழைத்துப் பழகினாள். அதிகம் கதைக்கப் பொழுது இருக்கவில்லை. இருந்தும் புரிந்துகொண்டு கண்கலங்கினாள். ஆர்வமாகக் கதை கேட்டு ஆறுதல்படுத்தினாள். இப்போது அவளைப் போல யாரிடமாவது கதைக்கத் தோன்றுகிறது. கஸென்ராவிடம் கதைக்கலாம். ஏனோ முடிவதில்லை. இருவருக்கும் இன்னும் வேதனையைக் கூட்டிக்கொள்வது போல் இருக்கும். உண்மையான புரிதலுள்ள ஒரு மூன்றாம் ஆளிடம் கதைக்க வேண்டும் போல இருக்கிறது. இரும்புக்குறைபாட்டிற்கான அடுத்த வைத்தியம் எப்போது எனத் தெரியவில்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏற்றவேண்டி இருக்கும் என வைத்தியர் அறிவித்திருந்தார். இப்போது கோவிட் என்ற ஒன்றினால் எல்லாவற்றையும் பிற்போட்டு விட்டனர்…..

 

தொடரும்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *