கதைகள்

பாலை_நிலா!….. 02 …. ( நாவல் ) …. க. ஷியா.

சிறிது தூரம் சென்றதும் வைகரைப் பொழுது மலைகளில் முட்டி மோதிப் பாலை நிலமெங்கும் அவகரித்துக்கொண்டிருந்தது. இன்னும் இரு மருங்கிலும் மலைகளே தரிசனமாகிறது வண்டியும் மூச்சுப்பிடித்து ஓடுகிறது மீண்டும் அவளது எஜமானன் திரும்பி பார்த்து அவளிடம் கூறுகிறான்
“”கதீஜா நாமி நாமி””
என்று அவள் அவனைக் குறுகுறுத்துப் பார்த்த படி ஆஹ் …… என்றாள் அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை என்பதை அறிந்து கொண்ட எஜமானன் மீண்டும்
“”ஸ்லிப்பிங், ஸ்லிப்பிங்””
என்றான். அதாவது களைப்பாக வந்திருக்கிறாள் தூங்கியிருக்கமாட்டாள் என்றறிந்த அவனோ வண்டியுள்ளேயே அவளைத் தூங்கச் சொல்கிறான் அவளும் ஒரு கண்ணுக்குத் தூங்கினால் துயரேது என்பது போலவே இருந்தாள். வண்டியின் உட்புறம் எங்கும் பார்க்கிறாள் எங்கே சாய்ந்து கொள்வது குறுக்கும் மறுக்குமாகப் பிள்ளைகள் ஐவர் தூங்குகிறார்களே என்று சரியென அவளது பயணப் பையின் மீது தலை சாய்த்து உடலைச் சுறுட்டிக் கொள்கிறாள். இடையிடையே சிறுவன் எழுவதும் அழுவதுமாக இருக்கையில் அவனையும் தட்டி விட்டு அவளும் கொஞ்சம் கண்ணயர்ந்து உறங்கினாள். இனிமேல் அவள் உறக்கம் இப்படித்தான் போகப் போகிறது என்பதை அவள் சற்றும் சிந்தித்திருக்கமாட்டாள். சில மணி நேரங்கள் வண்டி ஓடியது. சிறு சிறு நகரங்களும் கழிந்தது.
நேரம் காலை எட்டு மணியைத் தட்டி நின்றது, இறுதியாக கத்தானியில் உள்ள சிறு நகரத்தில் வண்டி நின்றது. அங்கு காலை உணவு ஓடர் செய்யப்பட்டது. மீண்டும் வண்டி சிறிது தூரம் ஓடியது. அது கத்தானியின் ஒரு புறத்தின் எல்லைப் பகுதியாகக் கூட இருக்கலாம் வீட்டின் எதிர்ப் பக்கம் ஒரேயொரு சிறு பள்ளிவாசல் மட்டும் தெரிந்தது மற்றும் படி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் மலைகளும் மணல் மேடுகளுமே நிறைந்து கிடந்தது.
ஒரு ஏற்றம் கழித்து சில வீடுகளைத் தாண்டி வண்டி நின்றது. எல்லோரும் சொல்வது போல் பெரிய அடுக்கு மாடிகள் எல்லாம் அங்கு இல்லை இரண்டு மாடி வீடு அதில் மேலே ஒரு குடும்பம் கீழே கதீஜாவின் எஜமானனின் குடும்பம் ஆனால் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை இங்கு அடித்துப் போட்டால் அங்கு தெரியாது. அங்கு அடித்துப் போட்டால் இங்கு தெரியாது.
கதீஜா சென்ற வீடு பார்க்க பெரிதாக இருந்தாலும் எட்டு அறைகளைக் கொண்டதே அது போக வெளியில் ஒரு கூடாரம் அது தேவைப்படும் போதெல்லாம் கழற்றி மாற்றி அமைக்க வேண்டும் அதுவும் கதீஜாவின் பணியேதான்.
இப்படி இருக்கையில் வண்டியை விட்டு இறங்கிய கதீஜாவை ஒவ்வொரு குழந்தையாகத் தூக்கி கொண்டு உள்ளே படுக்கையறையில் கிடத்தும் படி எஜமானன் செய்கையில் சொல்லவே எஜமானியோ எதுவும் பேசாமல் கதவினைத் திறந்து உள்ளே சென்று விட்டாள். கதீஜாவும் எஜமானனுடன் நின்று ஒவ்வொரு குழந்தையாக தூக்கிச் சென்று படுக்கையறையில் சேர்த்து விட்டு அவளது பயணப் பையை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
பொதுவாக அரபியர்கள் என்றால் ஒளி போன்ற அழகுடையவர்கள் அதிலும் பெண்கள் பொம்மைகள் போலிருப்பார்கள் என்று சொல்வார்கள். கதீஜாவும் உள்ளே சென்ற எஜமானியும் அப்படித்தான் இருப்பாள் அவளை இப்போது கண்டு விடலாம் என்ற ஆவலோடு வரவேற்பு அறையில் காத்திருந்தாள். அது சமயம் பார்த்து அவளது எஜமானன் காலை உணவுக்காக அவளை அழைக்க சாப்பிடும் இடத்திற்குச் சென்றவளோ கொஞ்சம் ஏமாறமானாள்
“”” அட ஊரில் உள்ளவர்கள் அரபியப் பெண்கள் பேரழகிகள் என்று சொன்னார்களே இவர் என்ன நம்மை விடக் கலர் குறைவாக இருக்கிறாரே அப்படி என்றால் இங்கு உள்ளவர்கள் கூட நம்மளைப் போலத்தான் “””
என்று மனதில் நினைத்துச் சிரித்தாள். ஆனால் அவளது எஜமானி தன்னைவிட நிறம் குறைவாக இருப்பதால் வினையாகப் போகிறது என்ற விபரம் அவள் அறிந்திருக்கவில்லை. காலை உணவு சாப்பிட்டு முடிந்தது கதீஜா அவைகளைச் சுத்தம் செய்ய ஆயத்தமாகையில் அவளது எஜமானன் அதை அப்படியே வைத்து விட்டு நீ போய்த் தூங்கு கதீஜா குழந்தைகள் எழுந்து சாப்பிடுவார்கள் என்று கூறி அவளுக்கு தனியொரு அறையில் இடம் கொடுக்கப்பட்டது. அன்றுதான் அவளுக்கு இறுதியான நிம்மதியான தூக்கம் இதற்கு பிறகு அவளால் தேவைக்கு கூடச் சரியாகத் தூங்க முடியாது போகும் என்பதை அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அவள் உடல்ச் சோர்வு நீங்கும் வரைத் தூங்கி எழுந்தாள் கதீஜா. எழுந்தவுடன் தனது எஜமானிக்குச் சலாம் சொல்லச் சென்றவளிடம் அவளுக்குத் தேவையான டவள் முதல் சம்பு, சோப் எனப் பெரியதொரு பொதியை அவளிடம் கொடுத்தாள் எஜமானி. அவளுக்கு நன்றி கூறியவளாக கதீஜா அதைப் பெற்றுக் கொண்டாள். அன்று இரவு சமையலறையில் துப்பரவு செய்து கொண்டு நின்று கதீஜாவின் பின்புறமாக வந்த எஜமானி அவளது பிடரிச் சட்டையைப் பிடித்து லைட்டரைக் கொழுத்தித் தலை முடியருகே கொண்டு செல்ல ஒரு கணம் உயிரை விட்டுப் பிடித்தவளாக எஜமானியை உதறி எழுந்து கீச்சிட்டுக் கதற ஆரம்பித்தாள் கதீஜா.
அப்போது அவர்கள் இருவரும் சிரித்தபடி பயப்படாதே சும்மா விளையாடினோம் என்பதுபோல் கதீஜாவை ஆரத்தழுவியதுடன் அவளது ஆடை அளவைப் பார்த்தாள்எஜமானி.
எஜமானி தனது ஆடையளவைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வளவு ஆரவாரம் காட்டினார்கள் என்று அறிந்து கொண்டாள் கதீஜா அதன் பின்னர் சற்று இளைப்பாறி அழ ஆரம்பித்தாள் அவளால் அந்த ஒரு நொடியை இலகுவில் கடக்க இயலாமலே இருந்தது எங்கே நம்மீது தீ வைக்கப் போகிறார்களோ என்று. பின்னர் அவளாகவே சமாதானமானாள். இரவு பத்து மணியிருக்கும் எஜமானர்கள் வெளியே சென்றனர். சென்றவர்களோ கதீஜாவிற்குத் தேவையான ஆடைகளுடன் வந்தனர் அவர்கள் வரும் போது நேரம் நள்ளிரவு இரண்டைக் கடந்து இருந்தது. அதன் பின்னர் கதீஜா அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளையெல்லாம் செய்து விட்டு தூங்கச் செல்ல மணி மூன்றரையானது. அவள் அப்போது தான் குழித்து முடித்துவிட்டு தூங்கியிருப்பாள் போல நான்கரை மணியாகும் முன்னரே எஜமானி கதவினைத் தட்டுகிறாள் விடிந்து விட்டது எழுந்து வா என்று.
முதல் நாள் என்பதால் கதீஜா தயங்காமல் எழுந்து சென்று வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். வீடு சுத்தம் செய்வது முதல் சமையல், துணி துவைப்பது ஐந்து குழந்தைகளையும் பராமரிப்பது என்று சுழன்று கொண்டிருந்தாள் கதீஜா. இப்படியே ஒரு வாரம் கழிந்தது. அதன் பின்னர் பகல் முழுவதும் குழந்தைகளோடும், வேலை செய்வதிலும் நேரத்தைக் கழிக்கும் கதீஜாவிடம் வீட்டில் களஞ்சிய அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய செம்புப் பாத்திரங்கள் ஒரு தொகை கொடுக்கப்பட்டது இரவு உணவு முடிந்த கையோடு சமையலறைச் சுத்தம் முடிந்ததும் அவைகளைத் துலக்க வேண்டும் என்று.
ஒரு இரவைக்கு ஒரு செம்பின் பாதியைக் கூட அவளால் துலக்க முடியாது இருந்தது. அவள் வேலை செய்யும் இடத்தில் கொறிப்பான்களைக் கொண்டு வைத்துக் கொண்டு வாயை அசைப்போட்ட படி எஜமானி அவளது வேலைகளை நோட்டமிட்டுக் கொண்டேயிருப்பாள். ஒவ்வொரு இரவும் கதீஜா தூங்க எப்படியும் இரண்டு மூன்று மணியாகிவிடும் இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்தது.
கதீஜாவுக்கோ வேலைகள் கனத்தது. ஏழு பெயரது ஆடைகளைத் தினமும் கழுவி மினுக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுக்கும் மேல் ஆடைகளைக் களைந்து போடுவார்கள், அன்றன்றே துவைக்க வேண்டும். அத்தோடு ஐந்து குழந்தைகளும் படுக்கையில் சிறுநீர் கழித்து வைப்பார்கள் அதையும் துவைக்க வேண்டும், துணிகளைத் துவைப்பது என்னவோ இயந்திரம் என்றாலும் ஒன்றுக்கு மூன்று துணி துவைக்கும் இயந்திரம் உள்ளது அவைகளோடு நின்று அவளும் சுழல வேண்டும். சமைக்க வேண்டும். நேரம் தவறாமல் சாப்பாடு கேட்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும். வீட்டை எப்படிச் சுத்தம் செய்தாலும் மறுகணமே ஐந்து குழந்தைகளும் தின்பண்டங்களைத் தின்று அதன் குப்பைகளை வீட்டிற்குள்ளேயே கணுக்கால் புதையப் புதையக் குவித்து வைப்பதுவே கடமையாகக் கொண்டிருந்தனர். இதில் வேறு ஒவ்வொரு மாலை நேரமும் ஐந்து குழந்தைகளையும் கடைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். கடைக்குட்டிப் பையனை இடுப்பில் சுமந்த வண்ணம் அவர்கள் வாங்கும் பொருட்களைச் சுமந்து வர வேண்டும். கழுவி வைக்கும் ஆடைகளோ மீண்டும் சாக்லேட் கறைகளைப் பூசி இழுத்து வீசி எறிந்து கிடக்கும். எஜமானியோ இரவெல்லாம் கதீஜாவைத் தூங்க விடாது வேலை வாங்கி விட்டு பகல் முழுவதும் குழந்தைகள் ஐந்தையும் இவள் தலையில் கட்டி விட்டு இழுத்து மூடித் தூங்குவாள். சந்தைக்குச் செல்வதானால் கூட இரவில் ஒரு மணி இரண்டு மணிக்குத்தான் சென்று வருவார்கள் தண்ணீர் கலன்கள் உட்பட மூட்டை மூட்டையாகப் பொருட்கள் அத்தனையும் கதீஜாவே ரோட்டில் நிற்கும் வண்டியில் இருந்து வீட்டிற்குள் கொண்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
சிறு உதவி கூடக் கிடையாது சரியாக உணவு உண்ண முடியாது சாப்பிட்டு கொண்டிருக்கையில் ஆயிரம் முறை அழைத்து வேலை வாங்குவார்கள். சில சமயத்தில் கதீஜா சுவரில் சாய்ந்த படி நின்று கொண்டு கண்ணயர்ந்து விடுவாள்.
இப்படித்தான் ஒரு நாள் எஜமானன் இல்லாத தருணம் அது ஆகையால் எல்லோரும் ஒரு தட்டில் ஒன்றாகச் சாப்பிடுவோம் வா என்று அவளை அழைக்கவே சரியென அவளும் சென்றாள். சென்று அமர்ந்து சாப்பாடில் கை வைத்ததுதான் தெரியும் ஒவ்வொரு குழந்தையாக கதீஜா உப்புக் கொண்டு வா, கதீஜா வெங்காயம் வெட்டிவா, கதீஜா சோடா கொண்டு வா என்று நினைத்து நினைத்து அவளை எழுப்பி விட்டனர்.
அவளுக்கோ மிகுந்த பசியாக இருந்த போதிலும் நிம்மதியாக இருந்து சாப்பிட அவர்கள் இடமளிக்கவில்லை. அவளுக்கென ஒரு துண்டு கோழிப் பொரியல் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிறு துண்டைத்தான் கதீஜா கிள்ளி எடுத்திருப்பாள். எஜமானியின் இரண்டாவது குழந்தை அவள் கையில் இருந்ததை அப்படியே பிடுங்கி கடித்து தின்று விட்டான் அவளுக்குக் கொடுக்காமல். அவளோ திகைத்துப் போனாள். கதீஜாவுக்கோ ஏதோவொரு புதினமான இனத்திற்கு நடுவில் இருப்பது போல் இருந்தது.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஒருமுறை கதீஜாவின் வீட்டுக்கு எஜமானனுக்கு நன்கு அறிமுகமான இலங்கையர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரை வைத்துக் கதீஜாவோடு அவளது எஜமானன் உரையாட ஆரம்பித்தான். அப்போது நாட்டில் இருந்து வரும் போது அவளுக்கான சம்பளம் தொள்ளாயிம் சவூதி ரியல்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் எஜமானனோ எண்ணூறு ரியால்கள் தான் தருவேன் அத்துடன் நானே சாப்பாடு, உடை , மருத்துவம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறவே கதீஜா அதற்குச் சம்மதியாது பேசிய சம்பளம் தரவேண்டும். எனக்கான சிலவுகளையும் ஏற்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று பெற்றுக்கொண்டதோடு தனக்குச் சரியாகத் தூக்கம் இல்லை வேலை அதிகம் குறைந்தது இரவு பதினொரு மணிக்காவது தூங்க அனுமதிக்க வேண்டும் அல்லாது போனால் இங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்று கேட்கவே கதீஜாவுக்காகத் தனியாகக் கொடுக்கப்பட்டிருந்த அறை பறிக்கப்பட்டு குழந்தைகள் தூங்கும் அறையில் தான் இனித் தூங்க வேண்டும் என்று இருந்து கொஞ்ச நெஞ்ச நிம்மதியையும் பறித்தார்கள். அது மட்டுமின்றி கைக்குழந்தையும் இனிமேல் கதீஜாவோடு தான் தூங்க வேண்டும் என்று அதையும் அவள் தலையிலேயே கட்டிவிட்டனர். அன்று முதல் அவள் தூங்கும் போது கூட அக்குழந்தை அவள் மடியிலேயே தூங்குவான். அவளால் கெழிந்து, வளைந்து கூடப் படுக்க முடியாது போனது.
ஒளிரும்……….
க.ஷியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *