கதைகள்

ஒரு கேள்வி உறவு முறிந்தது!…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

ஊரே பார்த்து வியக்கும்படியும் பொறாமைப் படும்படியும் இருந்ததுதான் சிவராசா மற்றும் செந்தில்நாதன் இருவரின் நட்பு. மற்றவர்கள் பார்வையில் சிறந்தவர்களாக தெரிந்தவர்கள் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு பண்பைக் கொண்டவர்கள். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டிருப்பவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கக் கூடாது என்று எந்த சட்டமும் கிடையாதே.

மூதறிஞர் ராஜாஜியும் தந்தை பெரியாரும் வெவ்வேறு தளத்தில் பயணித்தாலும் சிறந்த நண்பர்களாகவே இருந்தார்கள். யாரோ
ஒருவர் பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்று சொல்லிப்போனது அப்படித்தான் நடக்கும் என்ற அவசியம் இல்லை. ராஜாஜி பகுத்தறிவுவாதியாக ஆகவில்லை. பெரியார் பக்திமானாக மாறவும் இல்லை. கொள்கை வேறு நட்பு வேறு. இதை உணர்ந்தவர்களால் மட்டும் நட்பு பாராட்ட முடியும். உணராதவர்களிடையே நட்பு மலராது விலகி விடுவார்கள்.

இந்த புரிந்துணர்வு இருந்ததால் தான் சிவராசாவுக்கும் செந்தில்நாதனுக்கும்  நட்பு சிறப்பாயிருந்தது. சிவராசா பணத்தின் மீது நாட்டமில்லாதவன். ஆதலால் வீடு வாசல் பொன் பொருளென்று சேர்க்கும் ஆசையின்றி வாழ்ந்தான். ஆனால் செந்தில் நாதனோ அதற்கு நேர் மாறானவன். வாழ்க்கையை சரியாக வாழாமல் வீடு வாசல் பொன் பொருள் சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டவன்.

ஒரு நாள் சிவராசா வீட்டுக்கு வந்த செந்தில்நாதன்,

“சிவா, இரண்டு வீடுகள் விலைக்கு வந்தது. அவற்றை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளேன்” என்றான்.

“அப்படியா? நல்லது”

“இன்னொரு அபார்ட்மண்ட்டும் விலைக்கு வாங்கி வாடகைக்கு விடலாம் என்று எண்ணியுள்ளேன்”

“நல்லது, அப்படியே செய்”
என்ற சிவராசா சரி என்ன சாப்பிடுகிறாய்? காபியா டீயா என்று கேட்டான். அதற்கு ஒன்றும் வேண்டாம் என்றவன் அந்த அபார்டமண்ட்டை பார்க்கத்தான் சென்று கொண்டிருக்கிறேன். புரோக்கர் காத்திருப்பார் என்று சொல்லிச் சென்றான்.

சில ஆண்டுகள் சென்றன. சிவராசனும் அவனது மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் ஒரு வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டான். மனைவியிடம் இறைவன் அருளால் வசதியான வீட்டில் நன்றாகத்தானே இருக்கிறோம். எத்தனை வீடு வாங்கினாலும் ஒரு வீட்டில்தான் படுக்க முடியும். அதுவும் உயிர் போன பின் அந்த வீடும் சொந்தமில்லை என்றார். அதற்கு அவன் மனைவி,

“இப்படியே தத்துவம் பேசிக்கொண்டே இருங்கள். உங்கள் நண்பரைப் பாருங்கள் மூன்று வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்” என்றாள்.

“ஆமா, சொல்ல மறந்துட்டேன். இன்று மாலை செந்தில்நாதன் மனைவியுடன் வீட்டுக்கு வருவதாகச் சொன்னான்” என்று பேச்சை மாற்றினார்.

சொன்னபடி மாலை செந்தில்நாதனும் அவன் மனைவியும் வந்தனர். நண்பர்கள் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருக்க மனைவிகள் அடுக்களைக்குச் சென்றனர். அப்போது செந்தில்நாதன் மனைவி அடக்கமுடியா ஆர்வத்தில்,

“வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறீர்களே எவ்வளவு வாடகை கிடைக்கும்?” என்றாள் சிவராசா மனைவியிடம்.

“நீங்களும் இரண்டு வீடு ஒரு அபாரட்மெண்ட்டுன்னு வாடகைக்கு விட்டிருக்கீங்களே வாடகை எவ்வளவு வரும்?”

“சொல்லிக் கொள்ளும்படி அப்படி பெரிதாக ஒன்றும் வருவதில்லை”

“இங்கேயும் அதே கதைதான்” என்றாள் சிவராசா மனைவி.

அதன்பின் கொஞ்சநேரம் அங்கே அமைதி ஏற்பட வாங்க காபி சாப்பிடலாம் என்று தயாரித்து வைத்திருந்த வடை, பஜ்ஜிகளுடன் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றாள் சிவராசாஙின் மனைவி. கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்தவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.
அதன்பின் இரண்டு ஆண்டுகளாக இன்றுவரை இரு குடும்பத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை.

என்னதான் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் ஒருவரின் தனிப்பட்ட வருமானம் பொருளாதார நிலை போன்றவற்றை அவர்களாக சொன்னால் தவிர நாமாக கேட்பது நாகரிகமல்ல. நண்பர்கள் அந்த பண்பை கடைப்பிடித்து இருந்தாலும் அவர்களது மனைவிகள் அந்த நற்பண்பை கடை பிடிக்கவில்லை. ஆதலால் ஏற்பட்ட கசப்பினால் அவரவர் கணவனிடம் அந்த கசப்பை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல் கரைத்து மனதில் நஞ்சை கலந்து விட்டனர். ஆதலால் அந்த நண்பர்களின் நெடுங்கால நட்பு முறிந்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *