கதைகள்

நடுகைக்காரி!…..தொடர் 6 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 6 ….

தாயாருக்கு தான் அம்பனை வயலில் சந்தித்த பெண்பிள்ளைளையை அவன் விபரிக்கும் போது வாய் தடுமாறி அந்தப் பிள்ளை வடிவான பிள்ளை நடுகைக்காரிகளுக்குள் அவள் வித்தியாசமான வடிவம்மா படிச்ச பிள்ளை என்று அவன் சொல்லிக் கொண்டே தாயின் முகபாவம் எப்படி மாறுகிறது என்று உற்றுக் கவனித்தான்.

தான் பெற்ற பிள்ளைகளின் குணாதிசியங்களை அறியாதவளா தாய்.மகன் சொல்வதையும் அவன் சொல்லின் வார்த்தைகளில் காணப்படும் அழுத்தம் நெகிழ்ச்சி என்பவற்றை உள்ளுக்குள் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

வீடு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன.தகப்பனும் புத்தகங்களை வாசிப்பவர்தான் தாயும் வாசிப்பவர்தான்.பாக்கு வெற்றிலை போடும் பழக்கமுள்ள தாய் ஒரு பக்கத்தில் பித்தளை மூக்குப் போணியில் தேத்தண்ணியும் இன்னொரு பக்கத்தில் வெற்றிலை பாக்குத் தட்டத்தையும் வைச்சுக் கொண்டு நடுவில் சுவரோடு சாய்ந்து காலை நீட்டியபடியே புத்தகம் வாசிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று.

அத்தகு தாயாருக்குத் தெரியும் தனது மகன் எதை நோக்கி தன்னைக் கொண்டு செல்கிறான் என்று.ஒருவரைப் பற்றிப் பேசும் போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் தொனியிலும் இருந்து கண்டு பிடித்துவிடலாம் யாரைப் பற்றிச் சொல்லப்படுகிறதோ அவரைப் பற்றிச் சொல்பவரிடம் இருக்கும் அபிப்பராயம் என்னவென்று.

ஐந்து ஆசிரியர்களைக் கொண்ட தனது குடும்பத்தில் கல்வியை முன்னிறுத்துவதன் மூலந்தான் தன்னுடைய காதலி

பார்வதியை மனைவியாக்க முடியும் என்று தெரிந்து கொண்டுதான் டெயிலி நியூஸ் பத்திரிகை என்ற வியூகத்தை அமைத்தான் ஞானசெல்வம்.

„அம்மா நான் சொல்லிக் கொண்டிருக்கிறன் நீங்கள் பேசாமல் இருக்கிறியள் நடுகைக்காரிகளாக இருப்பவர்கள் படிக்காதவர்கள் என்று சொல்லுறது சரியோ „ என்று அவன் கேட்க,’ஆர் சொன்னது அவை படிக்காதவை என்று அவையும் படிச்சவைதான், தோட்டத்திலை வேலை செய்யிறது வாழ்க்கைச் செலவிற்கான வரவுக்காகத்தான் என்ற பதிலில் திருப்தியடைந்தவன்’அம்மா அந்தப் பிள்ளை சொல்லிச்சுது, சும்மா வீட்டிலை இருக்க பொழுது போகேலையாம் தோட்டத்திலை இப்படிப் புல்லுப் பிடுங்கியோ வெங்காயம் நட்டோ வரும் காசிலை கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கலாம் என்றதுடன் பிரைவேற்றாக எஸ்.எஸ்.ஸி சோதனை எடுக்கப் போறனாம் யாரிடமாவது ரியூசன் எடுக்க வேணுமெண்டுது…’அவன் சொல்லிக் கொண்டிருக்க கடைக் கண்ணாலை அவனைப் பார்த்த தாய் இதையெல்லாம் கிணத்தடியிலை வைச்சு அந்தப் பிள்ளை சொன்னதோ’ என்று தாய் கேட்டதும் கொஞ்சம் தடுமாறியவன்’ இல்லையம்மா கொஞ்சம் அங்கை வைச்சுச் சொல்லிச்சுது, அதோடை அந்தப் பிள்ளை டெயிலி நியூஸ் பத்திரிகையையும் சைக்கிள் காண்டிலில் செருகியிருந்த புத்தகத்தையும் கேட்டுது, குடுத்திட்டு நான் வர அந்தப் பிள்ளை பேந்தும் புல்லுப் பிடுங்கப் போயிட்டுது…

„பிறகு…’

„பிறகம்மா நான் லிங்கண்ணையின்ரை கடைக்குப் போய் ரீயும் வடையும் சாப்பிட்டிட்டு ஒரு வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு போய் மதகிலை இருந்து சாப்பிடுவம் என்று மதவடிக்கு போக அந்தப் பிள்ளையும் வந்து கொண்டிருந்துது,அந்தப் பிள்ளையைக் கண்டதும் „ எங்கை மற்றவை, தனியாப் போறியள் „ என்று கேட்க’ „தலையிடியாக் கிடக்குது அதுதான் நேரத்தோட போறன் „ என்று சொன்ன

அந்தப் பிள்ளை, என்னிடம் கேட்டுது நீங்கள் எஸ்.எஸ்.ஸி சோதனைக்கு என்னென்ன பாடங்கள் எடுத்தனீங்கள் என்று, நான் எடுத்த பாடங்களைச் சொல்ல தானும் அந்தப் பாடங்களைத்தான் எடுக்க நினைக்கிறன்,நீங்கள் எனக்கு ரியூசன் தருவியளா என்று கேட்க, நானும் பிரச்சினையில்லை படிப்பு விசயத்திலை உதவி செய்யிறதுக்கு வீட்டிலை ஒன்றும் சொல்ல மாட்டினம், ஏனென்றால் எங்கடை வீட்டிலேயே ஐஞ்சு ஆசிரியர்கள் இருக்கினம் என்று சொல்லிக் கொண்டே படிப்பு விசயத்தை மட்டுமே இரண்டு பேரும் கதைச்சுக் கொண்டு நடந்து போனதால போன தூரம் தெரியவில்லை.

அந்தப் பிள்ளைக்கு தான் படிச்சு ஆசிரியையாக வரவேண்டும் என்று ஆசை.எனக்கம்மா உண்மையிலைஆச்சரியமாக இருந்துது.அம்மா நான் உங்களையோ அப்பாவையோ கேட்காமல் அந்தப் பிள்ளைக்கு ரியூசன் தாறன் என்று வாக்குக் கொடுத்தது ஏனென்றால் அப்பாவும் நீங்களும் அதுக்கு மறுப்புச் சொல்ல மாட்டியள் என்று எனக்குத் தெரியும்.

அக்காக்களும் அண்ணாக்களும் இஞ்சை இருக்கிற போது எங்கடை வீட்டிலை வைச்சே எத்தனை பிள்கைளுக்கு ரியூசன் சொல்லிக் குடுத்தவை.அதற்காகவே அப்பா மேசை வாங்கு செய்வித்தவர்.அவையின்ரை தம்பி நான் அந்த நல்ல காரியத்தைச் செய்யாட்டி நல்லாயிருக்காதம்மா நான் சொல்றது சரிதானே அம்மா…’ என்று இழுக்க, „ம்’ பிரச்சினையில்லை போய்ப் படிப்பி…’படிப்பிக்கிறதை மட்டும் செய் „ என்ற தாய் அவனைக் கடைக் கண்ணாலை பார்த்தாள்.

தாய் கடைக்கண்ணாலை பார்த்து தனது மனதில் இருப்பதை முகத்திலிருந்து அறிய முயற்சிக்கிறார் என்றறிந்த ஞானசெல்வம் ஒரு அப்பாவி போல கல்லுளி மங்கன் போல முகத்தை வைச்சுக் கொண்டே, அம்மா அப்பாவுக்கு நீங்களே சொல்லிவிடுங்கோ அம்மா என்று அவன் சொல்ல,தாய்’ம்’ என்று சொல்லிவிட்டு,அந்தப் பிள்ளையின்ரை பெயர் என்ன

என்று தாய் கேட்க „ பேரோ ஏதோ ஒரு பேர் சொல்லிச்சுது…என்று யோசிப்பது போல நடிச்சவன்,’அம்மா சிவபெருமானின்ரை பெண்சாதிக்கு உமாதேவியார் என்ற பெயரோட இன்னொரு பெயரும் இருக்குதம்மா அதென்ன பெயரம்மா என்று தாயைக் கேட்டவன் அவளின் பெயர் பார்வதி என்று தன்னுடைய வாயாலை வரக்கூடாது தாயாரின் வாயாலை வரட்டும் என்பதற்காக பொறுத்திருந்தவன்,’அம்மா அந்தப் பிள்ளை புல்லுப் பிடுங்கிக் கொண்டிருக்கும் போது,நடுகைக்காரிகளிலை ஒரு பெண்; அந்தப் பிள்ளையைப் பாறு என்று கூப்பிட்டவை என்னவாக இருக்கும் என்று அவன் யோசிப்பது போல நடிக்க, தாய் பார்வதி என்று; சொல்ல,’ஓமம்மா அதுதான் பெயரம்மா’ என்கிறான் அவன்.

ஞானசெல்வத்தை நினைத்து உள்ளுக்குள்ளை சிரித்துக் கொண்ட அவளின் தாய், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் தனது மகன் முப்பத்திரண்டடியல்லவா பாய்கிறான் என்று நினைத்தவளின் ஆழ்மனதில் ஒரு சிறு பொறியாக பாறு தங்களுக்கு மருமகளாக வந்துவிடுவாளோ என்று அவளுக்குத் தோன்றியது.

„அம்மா படிப்பைப் பற்றிக் கதைச்சுக் கொண்டு போனதாலை எவ்வளவு தூரம் போனதென்றே தெரியேலையம்மா சந்தையடிப் பாலத்து ஒழுங்கையிலைதான் அந்தப் பிள்ளையின் வீடு இருக்குது போல, பாலத்தாலை கொஞ்சத்தூரம் போயிட்டு வந்திட்டன்.

ஞானசெல்வம் பார்வதி என்று சொல்வதைக் கவனமாகத் தவிர்த்து வந்தான்.பார்வதி என்று அவன் சொன்னால் அந்தச் சொல் மூலம் அவளை அவன் நெருங்கி நிற்கிறான் என்பதாகும்.ஆனால் அந்தப் பிள்ளை என்பது அனுதாபச் சொல் என்பதை அவன் அறிவான்.ஏனென்றால் தர்க்கவியல் படித்த மாணவன். அனுதாபத்தின் மீது காதலைச் செப்பனாக கட்டியெழுப்ப முடியும் என்று அவன் நம்பினான்.

அவன் தாய்க்குப் பிடிகொடுக்காமலும் தனது எண்ணத்தின் ஒரு மிகச் சிறிய பகுதியை தாய் உணரக்கூடிய விதத்திலும் கதைச்சுக் கொண்டிருந்தான்.

இரவுச் சாப்பாடு செய்வதற்கு தாய் அடுப்படிக்குள் போக,ஞானசெல்வமும் எழுந்து போய் புத்தக றாக்கியிலிருந்து எழுத்தாளர் பகீரதன் எழுதிய „நினைவுகள் ஏன் இனிமையானவை’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து துணி போட்ட சாய்மணைக் கதிரையில் இருந்து வாசிக்கத் தொடங்குகிறான்.„நினைவுகள் ஏன் இனிமையானவை’ என்ற வரிகளுக்குள் பார்வதியைப் பார்த்த சந்தித்த அவளோடு கதைத்த நினைவுகள் மோதகத்துக்குள் உள்ளுடலாக இருக்கும் அவித்த பாசிப்பயறும் தேங்காய்ப்பூவும் சர்க்கரையும் போல சுவையாக அவனுக்கு இருந்தன.

பார்வதியின் இனிமையான முகம், நினைவுகள் ஏன் இனிமையானவை என்ற வரிகளால் போர்த்தப்பட்டிருப்பதை உணர்ந்தான்.ஒரு பக்கத்தை வாசித்தவன் அவளின் நினைவில் மூழ்கி கண்ணயருகிறான்.எழும்பு வந்து சாப்பிடு என்று தாயின் குரல் அருகில் கேட்க கண்விழித்தவன், தாய் அருகில் நிற்பதையும் தகப்பன் கிணத்தடியில் இருந்து வருவதையும் பார்க்கிறான்.

சாப்பாட்டு மேசையிருந்தாலும் ஞானசெல்வத்திற்கும் தகப்பனுக்கும் சப்பாணிகட்டியிருந்து சாப்பிடுவதில்தான் விருப்பம்.தான் பார்வதிக்கு ரியூசன் கொடுக்கப் போவதைக் காலநேரம் அறிந்து தகப்பனுக்குத் தாய் சொல்லுவார் என்று நினைச்ச ஞானசெல்வம் தகப்பனைத் திரும்பிப் பார்க்காமலே „ அப்பா கன நாளாய் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைச்சனான், அது என்னெண்டால் மகாஜனாவிலை எல்லாரையும் படிக்கச் சேர்ப்பதில்லை ஆனால் யூனியன் கல்லூரியில் எல்லாரையும் சேர்க்கினந்தானே.இந்த விசயத்தில் யூனியன் கல்லூரி

அதிபர் ஐ.பி.துரைரத்தினம் அனைவரும் மனிதர் என்று நினைக்கிறார்.

நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்கிறான்.மனைவியை அர்த்தத்தோடு பார்த்த தகப்பன் அவன் பக்கம் முகத்தைத் திருப்புகிறார்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *