கட்டுரைகள்

நாங்கள் யார்?…. 3….. ( கட்டுரை )…… ஏலையா க.முருகதாசன்.

ஒவ்வொரு தனிமனிதனும் எவராலுமே கண்டறிய முடியாத குணங்களைக் கொண்டவனாகவே இருக்கிறான்;.உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.

அவரவர் மொழி, நாடு, மதம், அவரவர் பண்பாடுகள் என்பவற்றை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு அவனவன் யார் என்பதை அவனுள் புகுந்தறிய முயற்சிப்பினும் ஒவ்வொருவரும் விநாடிக்கொரு எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

எம்மோடு பேசிக் கொண்டிருப்பவர் எனது பேச்சில் கவனம் செலுத்துபவர் போலவும், வேறு எதைப்பற்றியுமே மனதில் நினைக்காதவர் என்றுதான் நினைப்போம்.ஆனால் அவர் வேறு எதையோ நினைத்துக் கொண்டும் எமது பேச்சில் கவனம் செலுத்துபவர் போலவும் தோன்றும்.

எனது உதாரண மனிதனான ‘எக்ஸ்’ கடைக்குப் போவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தான்.பொருட்களை வாங்கிக் கொண்டு வருவதற்காக பைகளை எடுத்தவன் அதில் ஒரு பை ஓட்டையாகியும் கிழிந்தும் இருந்தது.அதையும் எடுத்து வைத்துக் கொண்டான்.

பை கிழிந்திருப்பதை காரில் ஏறும் போதும் நினைத்துக் கொண்டான். பரவாயில்லை பெரிய பொருட்களாக வாங்கிப் போடலாம் அதை எறிந்தால் காசு வீணாகிவிடும் எனவும் நினைத்தான்.

கடைக்குச் சென்றடையும் வரையும் அதையே நினைத்துக் கொண்டு வந்தான்.காரை விட்டிறங்கிய அவன் நிறைய கார்கள் நிற்பதையும் ‘இந்தச் சனங்களுக்கு வேறு வேலையே

இல்லையா எப்பொழுது பார்த்தாலும் கடைகளுக்கே வருகிறார்கள் என வெறுப்படைந்தான்.

தனக்காகவே கடையிருக்க வேண்டும், தான் மட்டுமே கடையில் பொருட்களை வாங்க வேண்டிய ஒருவன், கார்கள் நிற்பாட்டும் தரிப்பிடம் தனக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

ஒருவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.நானிருக்கிற நிலைமைக்குள் இவருக்கு ஏன் புன்னகைக்க வேண்டும் என்ற நினைத்தவன் அந்த புன்னகையை அலட்சியம் செய்துவிட்டு நடந்தான்.

கார் தரிப்பிடத்தில் நிற்கும் மரங்களைப் பார்த்தான்.இந்த மரங்களை எப்பொழுது நட்டிருப்பார்கள்.கார் விடும் இடத்தில் மரங்களை நடாமல் விட்டிருந்தால் அந்த இடம் மிச்சப்படும்,மிச்சப்பட்டால்அதில் கார்களைவிட முடியும் எனவும் நினைத்தான்.

அவனைக் கடந்து சென்றவர்களைப் பார்த்தான்.அதில் ஒருவன் இவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே கலோ என்றான் இவனும் புன்னகைத்துக் கொண்டே அவனோடு சேர்ந்து நடந்து கொண்டிருக்கையில் இங்கேயிருக்கும் மரங்களால் எவ்வளவு நன்மை கிடைக்கின்றது.நல்ல காற்றுக் கிடைக்கின்றது, காரிலிருந்து வரும் கார்பன் புகையின் தாக்கத்திலிருந்து இது எம்மைக் காக்கின்றது என்றான்.

அதைக் கேட்ட அவனோடு பேசிக் கொண்டிருந்தவர் மிகுந்த உற்சாகமாக உண்மை உண்மை என்றார்.கிழிந்த பையை நினைத்துக் கொண்டான் குப்பை போடும் வாளியைக் கண்டவுடன் போடுவதற்காக அதனருகில் சென்று போடுவதற்கு வாளிக்கு மேல் கொண்டு போனவன் காசுக்கு வாங்கினனான் எறியக்கூடாது பெரிய பொருட்களைப் போடலாம் என நினைத்து கையை எடுத்துக் கொண்டான்.

கடைக்குள் நுழைந்தவனுக்கு சனங்களைப் பார்த்ததும் கோபம் கோபமாக வந்தது.ஒவ்வொரு நாளும் சனமாகவிருக்கிறதே என நினைத்தான்.அவனுக்குத் தேவையான பொருட்களைத் தேடி எடுக்க அவன் விரும்பவில்லை.

அவன் பொருட்கள் வாங்கும் வண்டிலைத் தள்ளிக் கொண்டு போகும் போது இருமருங்கிலும் தனக்குத் தெவையான பொருட்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவனெதிரே ஒரு வயதான பெண் வண்டிலை மெதுவாக தள்ளிக் கொண்டு வந்தாள்.இந்த வயதில் இந்தக் கிழவி ஏன் இங்கை வந்தது என்று நினைத்தான்.அந்த வயதான பெண் தனக்குத் தேவையான பொருளை கண்களால் தேடினாள்.எதைத் தேடுகிறியள் என அவன் (எக்ஸ்) கேட்டான்.தான் தேடும் பொருளை அவன் எடுத்துக் கொடுத்தான்.

கொடுக்கும் போது இந்தக் கிழவி தனக்குத் தேவையானதை தானே தேடி எடுத்திருக்கலாமே எனவும் நினைத்தான்.அவளைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றான்.அவள் பூரித்து உண்மையாகவா என்றாள்.இப்பொழுது இப்படியென்றாள் இளமையில் மிகவும் அழகாக இருந்திருப்பீர்களே என்றாள்.

எனது பகுதியில் நானே அப்பொழுது எல்லாரிலும் பார்க்க அழகானவள் என்றாள்.வயதான பெண்ணும் இவனும் வண்டிலை பாதையில் நிறுத்தி வைத்துக் பேசிக் கொண்டிருந்ததால் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு இடைஞ்சலாகவிருந்தது.

அவர்கள் போக முடியாமல் தத்தளிப்பதைக் கண்ட அவன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே தனது வண்டிலை ஓரமாக விட்டான்.ஓரமாக விட்டுக் கொண்டே ஏன் மற்றப் பக்கத்தால் போக வேண்டியதுதானே என நினைத்தான்.

கிழவி அவனைக் கடந்து சென்றாள்.கிழிந்த பையை எறிந்து போட்டு வந்திருக்கலாம் என நினைத்தான்.கடைக்குள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்தான்.பார்த்துக் கொண்டு தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வண்டிலுக்குள் போட்டவன்,அவனோடு பேசிய வயதான பெண்ணை நினைத்தான், தன்னோடு பேசிக் கொண்டு வந்த மனிதரை நினைத்தான்.

இந்தக் கடையில் எல்லாப் பொருட்களும் மலிவு அதுதான் இவ்வளவு சனங்கள் என நினைத்தவன், ஏன் வேறு கடைகளும் இருக்கின்றதே அங்கே போய் இவர்கள் வாங்கலாந்தானே என நினைத்தவனை நோக்கி ஒருவர் ‘இங்கு எல்லாமே மலிவு நல்ல தரமான பொருட்கள் என்று சொல்ல, நீங்கள் சொல்வது நூறுவீத உண்மை, அதனால்தான் நிறைய சனங்கள் இங்கு வருகிறார்கள்,மலிவான இடத்திற்குத்தானே சனங்கள் வருவார்கள் என்றான்.

பொருட்களை வண்டிலுக்குள் போட்டவன் நிரையில் நின்றான்.அவனுக்கு முன்னாள் நின்ற பெண்ணின் உடலிலிருந்து நறுமணம் வீசியது.இவள் விலைகூடின பேர்புயூம் அடித்திருக்கிறாள் என நினைத்தவன்,வியர்வை மணக்காமலிருக்க பேர்புயூம் அடித்துக் கொண்டிருப்பாளோ என நினைத்தாள்.

அவளைப் பார்த்த அவனுக்கு அவனின் பள்ளிக் காதலியின் ஞாபகம் வந்தது.அவனோடு பேசிய வயதான பெண் வண்டிலைத் தள்ளிக் கொண்டு அவன் பின்னால் நிரையில் நின்றாள்.புன்முறுவல் பூத்துக் கொண்டே அவளை தனக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னான்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button